June 10, 2013

ஒரு பல்லவி, பல சரணங்கள்
ஒரு சரணம், பல பல்லவிகள்
இரவெங்கும், சங்கீத மழை
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
முழ மல்லிகை, முன்னுரை
உதிரி மல்லிகை, முடிவுரை
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
பாதைகள் மறைந்து போகட்டும்
நேரங்கள் மரித்துப் போகட்டும்
நாமும் தொலைந்து போவோம்
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
இதழ் ரேகைகள் இனிக்கட்டும்
விரல் ரேகைகள் துவர்க்கட்டும்
மேலும் சுவை கூடட்டும், இந்த வினாடிக்கு
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
வெட்கங்களை தொலையெனடி
நான் உன்னில் தொலைந்து போவேன்
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
உன் வாசனையில், என் நிமிடங்கள்
என் வாசனையில், உன் நிமிடங்கள்
நம் வாசனையில், இந்த இரவு
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
ஒரு மௌனம் சம்மதமாய்
மறு மௌனம் எதிர்ப்பாய்
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
பத்து விரல் தூரிகையில்
உன் வெட்கம் எனும் ஒற்றை ஓவியம்
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
இரவு கரையட்டும், அழகு வளரட்டும்
அழகு கரையட்டும், இரவு வளரட்டும்
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
அழகாகும் என் களவுகள்
களவாகும் உன் அழகுகள்
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
மொழி மறந்த இலக்கணங்கள்
இலக்கணம் மறந்த மொழிகள்
முத்தங்கள் எழுத்துக்களாய்.
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
என் தீண்டலில், உன் ராகங்கள்
என் ராகங்களில், உன் தீண்டல்கள்
- இன்னுமொரு தேன்நிலவு நாள்
உன் இதழ்களின் மௌனங்களும்
என் இதழ்களின் மௌனங்களும்
இப்போது கவிதைகளாய்.
- இன்னுமொரு தேன்நிலவு நாள்