January 28, 2016

கவிதையில் துவங்கி
ஓவியத்தில் முடிக்கிறேன் நான்,
ஓவியத்தில் துவங்கி
கவிதையாய் முடிகிறாய் நீ.
- இது ஓவியங்களின் ஓவிய நேரம்
சிதறிய வெட்கங்களில்
மொத்தமாய் நீ,
மொத்த முத்தங்களில்
சிதறலாய் நான்.
- இது ஓவியங்களின் ஓவிய நேரம்

January 27, 2016

தீண்டப்பட்ட வெட்கங்களில் தொடங்கி,
வெட்கப்பட்ட தீண்டல்களில் முடிகிறது
இந்தப் பேரழகு அத்தியாயம்.
- இது ஓவியங்களின் ஓவிய நேரம்
நான் வினாக்களைத் தேடுகிறேன்
நீ விடைகளைத் தேடுகிறாய்.
இறுதியாய் தொலைந்து போவதென்னவோ நாம்தான்.
- இது ஓவியங்களின் ஓவிய நேரம்
விழிகளின் வினாக்களுக்கு
விரல்களின் பதில்கள்,
விரல்களின் வினாக்களுக்கு
விழிகளின் பதில்கள்.
- இது ஓவியங்களின் ஓவிய நேரம்
வெட்கமே வர்ணம்,
வெட்கமே தூரிகை,
வெட்கமே ஓவியமும்.
- இது ஓவியங்களின் ஓவிய நேரம்
வெட்கிச் சிவக்க நீ,
வெட்கம் சிவக்க நான்,
பொழுதுகள் சிவக்க நாம்.
- இது ஓவியங்களின் ஓவிய நேரம்

January 11, 2016

தொலைந்து போக - நீ,
கண்டுபிடிக்க - நான்,
நாம் தோற்றுப் போக - இவன்
- இவன் நம் முத்தங்களின் கள்வன்
என் முத்தத்தில் தொடங்கி,
உன் முத்தத்தில் முடியட்டும்
இவனின் முத்த அத்தியாயங்கள்
- இவன் நம் முத்தங்களின் கள்வன்
சிதறிய முத்தங்களைக் கோர்ப்பவன் நான்,
என்னைச் சிதறடிப்பவன் இவன்
- இவன் நம் முத்தங்களின் கள்வன்
கள்வனுக்குத் தெரியாமல்
களவாடும் கள்வன் நான்,
கள்வனையும் களவையும் 
களவாடும் கள்வன் இவன்
- இவன் நம் முத்தங்களின் கள்வன்
உன் பாதி - நான்,
என் பாதி - நீ,
நம் பாதி - இவன்
- இவன் நம் முத்தங்களின் கள்வன்
நம்மில் நம்மை
நாம் தேடுவோம்,
என்னில் உன்னையும், உன்னில் என்னையும்
இவன் தேடட்டும்
- இவன் நம் முத்தங்களின் கள்வன்

January 10, 2016

முத்தங்களின் போர் முடிந்து,
இப்போது முத்தங்களுக்கான போர்.
- இவன் நம் முத்தங்களின் கள்வன்
கிழக்கு விடியலைத் தேடும் முன்,
நம் தேடல் முடியட்டும்.
- இன்னுமொரு தேனிலவு நாள்
உன் வெட்கங்கள் தேயட்டும்
நம் வெட்கங்கள் வளரட்டும்
தினமும் இங்கே முழுமதி தான்,
- இன்னுமொரு தேனிலவு நாள்