மீண்டும் சந்திக்கும் வரை
இந்த முத்தங்களை வைத்துக்கொள்
- நீ, நான் மற்றும் முன்பு ஒரு நாள்
February 24, 2020
February 03, 2020
என் தோழிக்கு, மணமாகி விட்டது
ஒரு நீண்ட இசைக்குப்
பிறகு
மேளதாளங்கள்
அமைதியாகின்றன
ஒரு நீண்ட வாழ்த்துகளுக்குப்
பிறகு
உதடுகள்
அமைதியாகின்றன
உனக்கு மணமாகி
விட்டது
மணமாலையோடு
இன்னும் நீ
அழகாய் இருக்கின்றாய்
யாருக்கும்
புலப்படாத
ஒரு அச்சம்
கலந்த உற்சாகம்
உன் விழிகளில்
ஒட்டிக் கொண்டிருக்கின்றது
இரவோடு இரவாக
சிவந்து போன
மருதாணி
உன்னுடைய வெட்கத்தை
அப்படியே வைத்திருக்கின்றது
மகிழுந்து ஒன்று
மலர் சூடி உனக்காக
வாசலில் காத்திருக்கின்றது
அம்மாவின் அழுகை
கண்ணீரோடும்
அப்பாவின் அழுகை
கண்ணீரில்லாமலும்
உன்னை வழியனுப்ப
தயாராகி விட்டன
உன் தங்கை
அழத்தெரியாமல்
அழத்தொடங்கி
விட்டாள்
எனக்கு அழத்
தெரியாது
நீ எனக்கு அழ
கற்றுத் தரவில்லை
கட்டி வைத்த
வாழை மரத்தை
துணைக்கு அழைத்துக்
கொண்டு
மௌனமாய்
உன் விழிகளை
வாசிக்க முயற்சிக்கின்றேன்
இரண்டு துளிகளை
உதறிய உன் விழிகளுக்கு
மூன்றாவது துளியை
உதறித்தள்ள
மனமில்லை போலும்
நனைந்த உன்
விழிகள்
ஆயிரம் கதைகளை
இந்த உலகிற்கு
சொல்லிக் கொண்டிருக்கின்றன
முதல் நாள்
பள்ளி செல்லும்
குழந்தை போல்
உன் கால்கள்
தடுமாறுகின்றன
உன்னுடைய
"போயிட்டு வரேன்" என்பதிற்கும்
அம்மாவின்
"எப்போடி வரே" என்பதிற்கும்
எத்தனை போராட்டங்கள்
எனக்குத் தைரியம்
இல்லை அவற்றைக் காண
யாரோ ஒருவர்
இந்த போராட்டங்களை
முடித்து வைக்கிறார்,
அந்த மகிழுந்து
மெதுவாய்
வெளியே செல்கின்றது
மகளின் திருமணத்தில்
தகப்பனுக்கும்
தங்கையின் திருமணத்தில்
அண்ணனுக்கும்
கிடைக்கும்
ஒரு பேசப்படாத வெறுமை
தோழியின் திருமணத்தில்
தோழனுக்கு கிடைக்கத்தான்
செய்கின்றது
தோழியின் திருமணத்தில்
அவளின் தோழர்கள்
காரணத்தோடும்
காரணமில்லாமலும்
எதையோ இழக்கின்றார்கள்
எதையோ பறிகொடுக்கின்றார்கள்
Subscribe to:
Posts (Atom)