July 19, 2020

என் கல்லூரி விடுதி அறையும், கள்வன் நீயும்

கதவின் பின்புறத்தில் இருக்கும்
உன் புகைப்படம்
இதுவரைக்கும் என்னிடம்
ஆயிரம் முத்தங்களையாவது வாங்கி இருக்கும்

எத்தனை முறை
இந்த புகைப்படம் வழியே,
நான் வெட்கப்படுவதை
நீ  பார்த்திருப்பாய்?

நானும் நீயும் பேசுவதை
ஒட்டுக் கேட்பதற்காகவே
இந்த சுவரெங்கும் முளைத்திருந்தன
நூறு செவிகள்

இந்த அறையின்
கண்ணாடிக்குத் தெரியும்
உன்னிடம் நான் பேச நினைத்ததின்
ஒத்திகைகளும், வாக்கு மூலங்களும்

கனவுக்கும் நித்திரைக்கு
நான் சண்டையிடா நாட்கள் இல்லை
என் தலையணை அறியும்
அந்த நிகழ்வுகளை

சன்னல் மூலையில் இருந்த
மர மேசையெங்கும்
உன் பெயரும் என் காதலுமே
இழையோடி இருக்கின்றன

என் புத்தகங்களுக்கு இடையே
உன் காதல் கடிதங்கள்
என் ஆடைகளுக்கு இடையே
உன்னிடம் திருடிய கைக்குட்டைகள்

அறையின்
ஒற்றைச் சாவியில்
உன் பரிசான
இரட்டை காதல் புறாக்கள்

ஆடை மாற்றும் தருணங்களில் எல்லாம்
உன்மேல் வரும் சந்தேகம் -
இந்த முறை
எங்கே ஒளிந்திருப்பான் இவன்?

உனக்கு அடிமையாகிப்போன
என் தனிமை நிமிடங்கள்,
இந்த இரவுக்கு மட்டுமே
தெரிந்த இரகசியங்கள்

இப்படிக்கு,
-  கள்வனைக் காதலித்த தேவதை ஒருத்தி

July 15, 2020

உன் மௌனம்

என் விரல் நகங்களின்
மரண தண்டனைகள்,
உன் மௌனத்தால் எழுதப்படுகின்றன.