September 24, 2020

நான், அவன் மற்றும் அவனின் வெட்கங்கள்

 மங்கை எனக்கு

வெட்கம் ஒன்றும் புதிதல்ல,

தினம் தினம் அவனால்

புதிய புதிய வெட்கங்கள்

 

அதெல்லாம் சரி,

என்னை வெட்கப்பட வைப்பவனுக்கு

வெட்கப்படத் தெரியுமா?

எப்போது அவன் கடைசியாய் வெட்கப்பட்டான்?

 

திருமணத்திற்கு முன் ஒரு நாளில்

ஒரு முத்தம் கேட்டேன்,

அய்யோ, போடி என்றான்

அவன் குரலில் தெரிந்தது அவனின் வெட்கங்கள்

 

இன்னொரு நாள்

எனைக் கட்டிக்கொள்ள சொன்னேன்

இன்னொரு நாள் பார்ப்போம் என்றான்

அவன் கைகளில் தெரிந்தது அவனின் வெட்கங்கள்

 

பேருந்துப் பயணத்தில்

ஒட்டிக் கொள்ளச் சொன்னேன்

இல்லை பரவாயில்லை என்றான்

அவன் தோள்களின் தெரிந்தது அவனின் வெட்கங்கள்


மழை நாளில்

குடைக்குள் ஒட்டிக் கொள்ளச் சொன்னேன்

பெரிதாய் மழை இல்லை என்றான்

அவன் கால்களில் தெரிந்தது அவனின் வெட்கங்கள்

 

என் உள்ளங்கை ரேகைகளை

அவன் விரல்களால் வாசிக்கச் சொன்னேன்

ஒரே வினாடியில் வாசிப்பு முடிந்தது

அவன் விரல்களில் தெரிந்தது அவனின் வெட்கங்கள்

 

எனக்கும் அவனுக்கும் இருந்த

இடைவெளியைக் நீக்கச் சொன்னேன்

இன்னும் தள்ளிப் போனான்

அவன் மூச்சில் தெரிந்தது அவனின் வெட்கங்கள்

 

அவனின் ஒற்றை விரலில், என் மீது

ஓவியம் வரையச் சொன்னேன்

அவன் ஓவியம் ஆகிப் போனான்

அவன் நகங்களில் தெரிந்தது அவனின் வெட்கங்கள்

 

மணமான நாளில்

என் வெட்கத்தை உடைக்கச் சொன்னேன்

என்னிடம் தோற்று, என் வெட்கத்திடமும் தோற்று

இறுதியாய் அவன் வெட்கிப்போனான்


நானும், என் வெட்கமும் 

அவன் வெட்கத்திடம் 

எப்போதுமே தோற்றுப் போவோம்

 

அவனை வெட்கப்பட வைப்பதை விட

வேறென்ன வரத்தை

இந்தக் காதல் தந்துவிட முடியும்?