March 10, 2021

அடுத்த சனிக்கிழமையும், அவன் வரும் கனவுகளும்

ஒரு சனிக்கிழமை காலை நேரம்:

கடந்த சந்திப்பிற்கும், இந்த சந்திப்பிற்கும்

இடைவெளி என்னவோ ஒரு வாரம்-தான்.

ஆனால், அது உண்மையில் ஒரு யுகம்

 

என்னைச் சந்திக்க வந்தவனை

ஓடிக் கட்டிக்கொள்ள வேண்டும் போல் இருந்தது.

அவன் எனக்கானவன்,

யாரைக் கேட்க வேண்டும்?

 

கடந்த முறை போல, இந்த முறையும்

என் பிரியமான எழுத்தாளரின்

கவிதைத் தொகுப்பு, பரிசாய்.

எனக்குக் காதலிக்க கற்றுத் தருகிறான் போலும்

 

அவன் இதழ்களில் தெரிந்தது ஒரு வறுமை

ஒரு வாரத்தில் மிகவும் ஏங்கி இருக்கின்றான்

வெறும் தொலைபேசி முத்தங்களில்

அரைகுறையாய் உயிர் வாழ்ந்திருக்கின்றான்

 

என்ன பேசுவது இவனிடம்?

இரவு முழுதும் ஒத்திகை பார்த்தேன்.

எங்கே அந்த வார்த்தைகள்?

வெட்கமே, நீ ஒழிந்து போ

 

என் மௌனமும், அவன் மௌனமும்

யுத்தம் நடத்த ஆரம்பித்தன.

சட்டென்று கரம் பற்றிக் கொண்டான்,

நடக்க ஆரம்பித்தோம், மௌனம் கலையட்டும்

 

"என்னடி, இவ்வளவு அழகாய் இருக்கிறாய்?"

எனக்கு மட்டும் கேட்கும் படி ஒரு கேள்வி.

அவ்வளவுதான், நான் தோற்றுப்போனேன்.

இவன் காதலுக்கு, எப்போதுமே நான் அடிமை

 

வழக்கமான வினாவுடன் ஆரம்பித்தேன்

"என்னை, எவ்வளவு காதலிக்கிறாய்?".

கரத்தை இன்னும் இறுக்கிக் கொண்டான்.

அது சரி, இவனுக்கு காதலிக்கக் கற்றுத் தரவேண்டுமா என்ன?

 

அவன் வந்த கனவுகளின்

வெட்கக் கதைகள் பற்றிச் சொன்னேன்.

நான் இல்லாத இரவுகளின்

சோகக் கதைகள் பற்றிச் சொன்னான்.

 

நான் இல்லாத இரவின் வெறுமையை

என் தொலைபேசி முத்தங்கள் கொண்டு நிரப்புவான்

சில நிமிடங்களில்,

மீண்டும் நிரப்பச் சொல்லும் கயவன் இவன்

 

இப்படியே கரம் கோர்த்து

வாழ்நாள் முழுதும் இருக்கக் கூடாதா?

ஒரு முகவரி இல்லா

தேசம் போவோமா?

 

விழிகளும், விரல்களும்

நிறைய பேசியதாய் ஞாபகம்

எங்கள் மௌனங்கள், முழுதாய் உடையும் முன்

தூரத்தில் அவனுக்கான பேருந்துச் சத்தம்

 

கை ரேகைகள் பிரிக்கப்படும்

ஒரு சத்தம் கேட்கின்றது.

எங்கிருந்தோ ஒரு அழுகை

எட்டிப் பார்க்கின்றது.

 

பிரிய மனமில்லாமல் பிரிந்து,

அழுக்குப் பேருந்தில்

தொற்றிக்கொண்டே சொன்னான்

"மீண்டும் கனவில் சந்திப்போம்"

 

அறைக்கு வந்து

அடுத்த சனிக்கிழமை காலை நேரத்திற்கும்

அவன் வரும் கனவுகளுக்கும்

காத்திருக்க ஆரம்பித்தேன்