'நான் உன்னைக் காதலிக்கின்றேன்'
வெறும் மூன்றே வார்த்தைகள்.
முன் இரவு முழுதும் தைரியம் வரவழைத்து
பின் இரவு முழுதும் ஒத்திகை பார்த்தாயிற்று
இன்றைக்காவது சொல்லி விடுவேனா?
நூறு முறை அதே கேள்வி
ஆயிரம் முறை அதே தயக்கம்
இலட்சம் முறை அதே அச்சம்
யாருக்கும் கேட்காமல்
காற்றுக்கும் கூட கேட்காமல்
ஏன், எனக்கும் கூட கேட்காமல்
இன்னுமொரு முறை ஒத்திகை பார்த்துக்கொண்டேன்
தொலைவில் நீ வந்து கொண்டிருக்கிறாய்
என் இருதய தண்டவாளம் மீது ஒரு அதிவேக ரயில் வரும் தடதடப்பு
துண்டாக்க விரல் நகங்கள் ஏதும் மீதம் இல்லை
இன்னுமொரு இருதயம் எங்காவது கடன் கிடைக்குமா?
ஒரு கவிதை மிதந்து வருகின்றது
ஒரு ஓவியம் நடந்து வருகின்றது
ஒரு பூங்கொத்து நகர்வலம் வருகின்றது
அவ்வளவு அழகா நீ? இல்லை, அவ்வளவும் அழகு
உனக்கும் எனக்குமான தொலைவு குறைகிறது
பல நூறு பட்டாம் பூச்சிகள் எனைச்சுற்றி
தண்டுவடமெங்கும் ஒரு வியர்வை ஊற்று
மனமெங்கும் ஒரு மெல்லிய நடுக்கம்
இப்போது, பத்தடி தொலைவில் நீ
வழக்கம்போல சூனியம் வைக்கப்பட்டு விட்டேன்
நாவிற்கு மொழி மறந்து போய்விட்டது
ஒத்திகை பார்த்த வரிகள் ஒளிந்து கொண்டன
சிலையாய் நிற்கும் எனைக் கடந்து செல்கிறாய்
உன் விழிகள் எனக்குள் மின்சாரம் செலுத்துகின்றன
உன் இதழ்கள் எனக்குள் வெப்பம் செலுத்துகின்றன
ஓரிரு நொடிகளில், இரண்டு மூன்று முறை பூகம்பங்கள்
சில கணங்களின் சுய நினைவிற்கு வருகின்றேன்
இப்படியா உன்னைத் தவற விடுவது?
மரித்துப்போன நிமிடங்களை எப்படி மீண்டும் உயிர்பிப்பது?
எங்கே போய் என் சினத்தை அழுது தீர்ப்பது?
திசைகள் தொலைந்த பாதையில் நடக்க ஆரம்பிக்கிறேன்
தேர்வே இல்லை, ஆனாலும் தோல்வி தொடர்கிறது
நெருப்புப் பந்து ஒன்று தொண்டைக்குள் உருளும் நேரம் இது
எனக்கு, நானே ஆறுதல் சொல்ல முனைகிறேன்
மீண்டும் ஒரு புதிய இரவு பிறக்கின்றது
வழக்கம் போல எனக்கும் இரவுக்கும் மல்யுத்தம் தொடங்குகிறது.
அடுத்த நாளுக்கான ஒத்திகைக்கு தயாராகின்றேன்
எனக்கான சகியே, ‘நான் உன்னைக் காதலிக்கின்றேன்’