September 20, 2011

என் தேசத்தில் கவிதைப் பஞ்சம் வந்துவிட்டது,
உன் குரலை நாளைக்கு
எப்படியாவது கேட்டாக வேண்டும்
என் மொழிச் சொற்களுக்கு
எப்போதுமே ஒரு தனிச்சிறப்பு உண்டு,
இலட்சம் சொற்கள் இருந்தாலும்
பொருள் என்னவோ உன் பெயர் (மட்டும்) தான்
உனக்கு மடல் எழுதலாம்
என அமர்ந்தால் மட்டும்,
என் மொழியின் சொற்கள் என்னோடு
கண்ணாமூச்சி ஆட ஆரம்பித்து விடுகின்றன

September 19, 2011

என் காதல் மேகங்கள்
மோட்சம் அடைகின்றன
உன் வெட்க மழைத்துளிகளாய்
உன் வெட்கத் தூண்டிலில்
மாட்டிக்கொள்ள என் காதல் மீன்களுக்கு
ஏனோ அதீத ஆசைகள்
நீ மட்டும் பிறந்திருக்காவிடில்
வெட்கம் என்னும் பொக்கிஷம்
எப்போதே அழிந்து போயிருக்கும்
வெட்கத்தை வர்ணமாய்க் கொண்டு
பிரம்மன் வரைந்த ஒரே ஓவியம் நீதான்
வெட்கக் கடலைக் கடைந்தால்
வரும் அமுதம் நீதானடி
உன் அழகை அளக்கும் அலகு உன் வெட்கம்,
உன் வெட்கத்தை அளக்கும் அலகு உன் அழகு.
உன்னை பற்றி எழுத ஒரு மொழியும்
உன் வெட்கம் பற்றி எழுத ஓராயிரம் மொழியும் வேண்டும்
அதென்ன உன் அழகு வருடத்தில் மட்டும்
பனிரெண்டு(ம்) வெட்க மாதங்கள்

September 18, 2011

உன் மனத் தேன் கூடுக்கு
உன் மௌனத் தேனீக்களைக்
காவலாய் வைப்பது என்னடி நியாயம்?
நம் அடுத்த காவியத்தின் தலைப்பு
நம் மணமேடை நிமிடங்கள்,
காவியத்தின் அட்டை படம்
உன் மணமேடை வெட்கங்கள்.
எந்த ராகத்தில் பாடினாலும்
அழகாய் இருக்கிறது
உன் வெட்கமெனும் கீதம்
நீ என்னும் மருதாணியில்தான்
வெட்கமே சிவந்து போகின்றது
நம்முடைய காதலின்
எல்லாப் பாடல்களுக்குமே
உன் வெட்கமே பல்லவியாய் இருக்கிறது
உன் வெட்க நிறங்களில்
என் வானத்திற்கு கிடைக்கின்றன
சில பல இலவச வானவில்கள்
உன் பூந்தோட்டமெங்கும்
வெட்கங்களை மட்டுமே விதைத்திருக்கிறாயா என்ன?
மலர்களுக்குப் பதிலாக வெட்கங்களே பூக்கின்றன
நீ முத்தங்கள் தரும் போதெல்லாம்
வெட்கப்படுகிறாய்,
வெட்கப்படும் போதெல்லாம் முத்தங்கள் தந்தால்
இன்னும் எவ்வளவு நன்றாய் இருக்கும்?
எந்த மொழியில் படைப்பது
உன் வெட்க இலக்கியத்தை?
எந்த வர்ணத்தில் வரைவது
உன் வெட்க ஓவியத்தை?

September 14, 2011

மின்னஞ்சலில் இனிமேல் முத்தங்கள் வேணாமடி,
உன் மின்னஞ்சல்களைத் திறக்கும்போது மட்டும்
என் கணினி விடுகிறது ஒரு ஏக்கப் பெருமூச்சு
உன் நினைப்புக்கு நான் வைக்க நினைக்கும்
முற்றுப் புள்ளிகளை எல்லாம்,
காற்புள்ளிகளாய் மாற்றுகிறது
புதிதாய் வந்திருக்கும் உன் இனிப்பு மின்னஞ்சல்
நீ அனுப்பும் மின்னஞ்சல்களில் மட்டும்
எப்படி வருகிறது பூக்களின் வாசம்?
என் ஆயிரம் மின்னஞ்சல் முயல்கள்
உன் ஒற்றை மடல் ஆமையிடம்
காலம் காலமாய் தோற்றுத்தான் போய்க் கொண்டிருக்கின்றன
'முத்தம்' என்னும் வார்த்தையை
உன் மடலில் தேடும் வரை என் கண்களும்
தேடிக்கண்ட பின் என் கன்னங்களும்
ஏக்கத்தில் வாடிப்போகின்றன

September 13, 2011

நம் வீட்டுக் கண்ணாடியில் பிரதிபலிக்கும்
உன் அழகு வெட்கத்திடம்
உன் வெட்கக் கண்ணாடியில் பிரதிபலிக்கும்
நம் பேரழகு நிமிடங்களை
நான் மறந்து போகின்றேனடி துணைவியே
உன் வெட்கங்களை திருடுவதில்
எனக்கும், நம் வீட்டு நிலைக்கண்ணாடிக்கும்
நீண்டகாலமாய் நடந்து கொண்டிருக்கிறது
ஒரு பனிப்போர்
உன் நெற்றிப் பொட்டுக்களை
நிலைக்கண்ணாடிக்குத் தாரை வார்த்தாலும்,
உன் நெற்றிக் குங்குமத்தை
அங்கமெல்லாம் பூசிக் கொண்ட பெருமையென்னவோ
என் சட்டைக்குத்தான்
நீ வெட்கப்படும் போது மட்டும்
நம் வீட்டுக் கண்ணாடிக்கு
திருட்டுக் கண்கள் முளைத்து விடுகின்றன

September 07, 2011

என் அரை நித்திரையின் முழு அணைப்புக்கு
பரிசாய்க் கிடைப்பதென்னவோ
கால் பங்கு முத்தம்தான்
மனித உடல் ஒரு மின்சாரக் கடத்தியாம்,
உன் விரல்கள் படும்போது மட்டும்
அந்த மின்சாரம் என்னுள்ளே தங்கிவிடுகிறது

September 06, 2011

வண்ணங்களை என் வானவில்லும்
நீர்த்துளிகளை என் மேகங்களும்
வெறுத்துப் போகின்றன
நீ இல்லாத நிமிஷங்களை நான் வெறுப்பது போல்
பல வண்ணக் காவியங்களைப்
படைத்த என் பேனா
தன் நிறமிழந்து போனது
உன் திருமண அழைப்பிதழைப் பார்த்ததும்
உன் சொற்கள் மௌனமாகும்போது
என் மொழி மௌனமாகிப் போகிறது
வெட்க மொட்டில் மலர்ந்த மலர் நீ,
கணப்பொழுதில் எப்படியடி மொட்டு விரிக்கிறாய்?