December 14, 2011

முன்னால் காதலிக்கு இந்நாளில் ஓர் கடிதம்:
---------------------------------------------------------------------------------
முதல் வரியிலேயே ஒரு தடுமாற்றம்...
எப்படி இருக்கிறாய் என்பதா இல்லை, எப்படி இருக்கிறீர்கள் என்பதா?

அடுத்த வரியிலும் ஒரு தடுமாற்றம்
என் நீயும் உன் நானும் எப்படியிருக்கிறோம் என்பது போய், நீ எப்படி இருக்கிறாய்?

முன்பெல்லாம் வார்த்தைகள் கிடைக்க தடுமாறினேன், இப்போது கிடைத்த வார்த்தைகளுடன் தடுமாறுகிறேன்....

உன் முத்தங்களுக்கு இடையே இருக்கும் இடைவெளியைக் கூட வெறுத்த நான், இப்போது நொடிகளுக்குள் இருக்கும் இடைவெளியிலும் கூட உன்னை நினைத்து அழுகிறேன்

என் கைகளில் ஒட்டிக்கொண்ட உன் கைரேகை கூட இன்னும் மறையவில்லை, ஏனோ காலம் மட்டும் நம் காதல் ரேகையை அழித்து விட்டது

என்னை விட யார் உன்னை வெட்கப்பட வைக்க முடியும்?, நிறைவேறா நம் காதலை விட என்னை யார் கொலை செய்து விட முடியும்?

கனவில் பெற்ற குழந்தைகள் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தார்கள், இப்போதோ நம் காதல் குழந்தை அநாதையாகிப் போய்விட்டது

முத்தங்களால் இனித்துப் போன என் தொலைபேசி, இப்போது கண்ணீரால் உவர்க்க ஆரம்பித்து விட்டது

பேருந்து நிலையத்தில் உனக்காகக் காத்திருந்த நாட்கள் போய், நான் ஏதோ வாழட்டும் என மாத நாட்கள் காத்திருக்கின்றன

நீ மட்டும்தான் என் உலகம் என இருந்த எனக்கு, இப்போது எதுவுமே சொந்தம் இல்லை

உன்னைப் பற்றியான இனிப்பான கவிதைகள் எல்லாம், இப்போது விஷமாய் என்னைக் கொல்கின்றன

நீயும் நானும் பார்த்துத் தீர்த்த காதல் திரைப் படங்கள் எல்லாம், இப்போது இருந்த சுவடே தெரியவில்லை

முத்தங்கள் நனைந்த என் தலையணை, இப்போது தனியாய் பரணில் ஒரு மூலையில்

ஆசையாசையாய் இருந்தது ஒரே ஒரு கனவுக் குழந்தை, கனவோடு சேர்த்து கருவும் கலைந்து போனது இப்போது

நம் காதல் ஆலையில் முத்தங்கள் பிழிந்த நாம், இப்போது கால எந்திரத்தில் நம்மை பிழிந்து கொண்டிருக்கிறோம்

நீ என்னும் பெயரில் நான் எழுதிய வென்ற காவியங்கள் ஆயிரம், இறுதியில் உன் மண அழைப்பிதழில் என் பெயர் இடம் பெறாமல் தோற்றுப் போனேன்

நம் அன்புகள் உருவாக்கிய காதல் அரண்மனை, ஒரு வீம்புத் தீயிக்கு இரையாகிப் போனது நாம் செய்த பாவமா?

நொடிகளுக்கு நடுவிலும் பேசிக்கொண்ட நாம், இப்போது பேசி வருடக் கணக்காகி விட்டது

இரண்டாம் கணவனாய் உனக்கு ஒருவன், முதலும் கடைசிக் காதலியுமாய் நீ மட்டும்தானடி

எத்தனை குழந்தைகள் நீ பெற்றுக் கொண்டாலும், உனக்கு எப்போதுமே முதல் குழந்தை நான்தான்

நீயும் நானும் பிரிந்து விட்டோம், இல்லை பிரிக்கப் பட்டு விட்டோம். இனி காதலை யார்தான் வாழ வைப்பது? என்னோடு சேர்ந்து இப்போது காதலும் கூட அனாதைதான்

என் இதயம் வலிகளை கொட்டித் தீர்க்க நினைத்தாலும், என் பேனா எழுத மறுக்கிறது வலியால்...

இனிவரும் வருடங்களில் ஏதாவது ஒரு நிமிடத்தில் நீயும் நானும் பார்த்தும் பாராமலும் கடந்து போகும் என்கின்ற நம்பிக்கையில்,

தீராத முத்தங்களுடன் முடித்து வந்த நான், தீராத வலியுடன் என முடிக்கிறேன்...

No comments:

Post a Comment