February 06, 2012

இது தனிக் குடித்தனம் அல்ல, 'தனியே' ஒரு குடித்தனம்

உன் அலுவலகத்தில் பூகம்பம் வந்து போன ஒரு திங்கட்க்கிழமை:

அடியே என கொஞ்சக்கூட நேரமில்லை,
ஒற்றை நிமிடத்தில் இரண்டு உயிர்களைப் பற்றி
மூன்று வார்த்தைகளில் ஒரு விசாரணை

உன் பணியில் புயலடித்த ஒரு செவ்வாய்க்கிழமை:

நம் மகனின் கணித மதிப்பெண் கவலைகள் எனக்கு
உன் தொழிலின் இலாபக் கவலைகள் உனக்கு
மகனும் நீயும், எண்களிடம் தோற்றுப் போகின்றீர்கள்

உன் வானில் சூரியன் வராத ஒரு புதன்கிழமை:

நான் முத்தம் வாங்கி ஆறு மாதம் ஆகிவிட்டது,
நீயோ வங்கிப் பணத்தின் முதல் மாத வட்டிக்கு
கணக்குக் கேட்கிறாய்,

உன் கடிகார முட்கள் மெதுவாய் நகர்ந்த ஒரு வியாழக்கிழமை:

நம் மகன் வாங்கிய முதல் பரிசுகள் எல்லாம்
உன் நேரமின்மை எனும் கோழையிடம்
தோற்றுப்போகின்றன

உன் நாட்காட்டியில் தீபாவளி வரும் ஒரு வெள்ளிக்கிழமை:

இங்கே நான் அனாதையாகும் நாட்கள் வந்த போதும்
உனக்கு மட்டும் புதிது புதிதாய்க் கிடைக்கின்றன
வெள்ளிக்கிழமை சொந்தங்கள்

இரவில் பிறந்து இரவில் மடியும் உன் சனி , ஞாயிற்றுக்கிழமைகள்

உன் ஐந்து நாட்களின் வரவுகள்
இரண்டே நாட்களில் செலவாய்,
இலாபம் உனக்கும், நஷ்டம் எனக்கும்


காகிதப் பூக்களை பூஜித்துக் கொண்டு நீ,

மலர்கள் சூடிய விதவையாய் நான்

யார் யாரோ உனக்கு சொந்தங்கள் அங்கே,
நீ இருந்தும் நம் மகன் அனாதை இங்கே

சுகம் மட்டுமே துணையாய் உன் படுக்கையில்
தாலி மட்டும்தான் துணையாய் என் படுக்கையில்

இது ஒரு தனிக் குடித்தன சொர்க்கம் அல்ல,
தனியே குடித்தனம் இருக்கும் நரகம்

No comments:

Post a Comment