சென்ற வருடம் இதே நாள்:
என் ஒரு தலைக் கவிதைகளுக்கும்
உன் மௌனத்திற்கும்
நடந்து வந்த போர்கள் முடிவுக்கு வந்தன
சென்ற வருடம் இதே நாள்:
உன் இளஞ்சிவப்பு உதட்டு மலர்கள் மீது
என் ஏக்கங்கள்
வீசி வந்த புயல்கள் கரையைக் கடந்தன
சென்ற வருடம் இதே நாள்:
காற்றில் கரையும் உன் பேரழகைத் திருடும்
என் விழிகளின்
கள்ளப் பார்வைகள் சிறையிடப் பட்டன
சென்ற வருடம் இதே நாள்:
காதல் பின்னேயும், திருமணம் முன்னேயுமாய்
உன்னோடு வாழ்ந்த
என் கனவுகள் வண்ணங்களாயின
சென்ற வருடம் இதே நாள்:
என் காதல் ஓவியனால் வடிக்கப்பட்ட
உன் வெட்கச்
சிலைகளுக்கு கண்கள் திறக்கப்பட்டன
சென்ற வருடம் இதே நாள்:
உன் ஒற்றைச் சொல் சம்மதம் பெற
என் காதல்க் கவிஞர்கள் இயற்றிய
சரணங்களுக்கு பல்லவிகள் கிடைத்தன
சென்ற வருடம் இதே நாள்:
என் ஆடி மாத நாட்களில்
உன் காதல் பஞ்சாங்கம் கொண்டு
நம் காதல் தேன்நிலவுக்கு நாட்கள் குறிக்கப்பட்டன
சென்ற வருடம் இதே நாள்:
உன் கரங்களைச் சந்தித்தபின்
குறுக்கும் நெடுக்குமாய்த் திரிந்த
என் கைரேகைகள் வண்ணக் கோலங்களாயின
சென்ற வருடம் இதே நாள்:
காற்றாய் நானும், நானாய்க் காற்றும்
உன்னைத் தீண்டிய போது
உன்னில் ஒளிந்திருந்த நாணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன
இதே வருடம் இதே நாள்:
இந்த வருடம் இன்னொரு சம்மதம் கொடேனடி,
மலர்ந்த மொட்டுக்கள் திருமண மாலையாகட்டும்
ஏக்கத்தோடு நானும், மஞ்சள் நூலோடு என் விரல்களும்
No comments:
Post a Comment