உனை மாதிரியாய் வைத்து
எந்த ஓவியனும், ஓவியம் வரையலாம்
ஆனால் என்னால் மட்டுமே அவைகளுக்கு ஜீவனளிக்க இயலும்.
ஆமாம், என் காதலுக்கு தலைக்கனம் அதிகம்தான்
உனை மாதிரியாய் வைத்து
எந்த சிற்பியும், சிலை வடிக்கலாம்
ஆனால் என்னால் மட்டுமே அவைகளுக்கு உயிரளிக்க இயலும்.
ஆமாம், என் காதலுக்கு தலைக்கனம் அதிகம்தான்
உனை மாதிரியாய் வைத்து
எந்த கவிஞனும், கவிதை எழுதலாம்
ஆனால் என்னால் மட்டுமே அவைகளை காவியமாக்க இயலும்.
ஆமாம், என் காதலுக்கு தலைக்கனம் அதிகம்தான்
உனை மாதிரியாய் வைத்து
எந்த இசையாளியும், மெட்டுக்கள் அமைக்கலாம்
ஆனால் என்னால் மட்டுமே அவைகளை பாடலாக்க இயலும்
ஆமாம், என் காதலுக்கு தலைக்கனம் அதிகம்தான்
உனை மாதிரியாய் வைத்து
எந்த பிரம்மனும், உயிர்களைப் படைக்கலாம்
ஆனால் என்னால் மட்டுமே அவைகளுக்கு காதலைக் கற்றுத்தர இயலும்
ஆமாம், என் காதலுக்கு தலைக்கனம் அதிகம்தான்
உனை மாதிரியாய் வைத்து
எந்த வானமும், விண்மீன்களைச் சூடும்
ஆனால் என்னால் மட்டுமே அவைகளுக்கு நிலவுகளை பரிசளிக்க இயலும்
ஆமாம், என் காதலுக்கு தலைக்கனம் அதிகம்தான்
உனை மாதிரியாய் வைத்து
எந்த உதடும், முத்தமிடலாம்
ஆனால் என்னால் மட்டுமே அவைகளுக்கு சுவை கூட்ட இயலும்
ஆமாம், என் காதலுக்கு தலைக்கனம் அதிகம்தான்
உனை மாதிரியாய் வைத்து
எந்த மாதமும், மார்கழி ஆகலாம்
ஆனால் என்னால் மட்டுமே அவைகளில் முப்பது முகூர்த்தங்கள் பிறக்க இயலும்
ஆமாம், என் காதலுக்கு தலைக்கனம் அதிகம்தான்
உனை மாதிரியாய் வைத்து
எந்த நீரும், மேகங்களாய் மாறலாம்
ஆனால் என்னால் மட்டுமே அவைகளை பொழிய வைக்க இயலும்
ஆமாம், என் காதலுக்கு தலைக்கனம் அதிகம்தான்
உனை மாதிரியாய் வைத்து
எந்த இதயமும், துடிக்கக் கற்கலாம்
ஆனால் என்னால் மட்டுமே அவைகளில் ரத்தத்தை சுழல வைக்க இயலும்
ஆமாம், என் காதலுக்கு தலைக்கனம் அதிகம்தான்
உனை மாதிரியாய் வைத்து
எந்த மரமும், மூங்கிலாய் மாறலாம்
ஆனால் என்னால் மட்டுமே அவைகளை புல்லாங்குழலாக்க இயலும்
ஆமாம், என் காதலுக்கு தலைக்கனம் அதிகம்தான்
உனை மாதிரியாய் வைத்து
எந்த மொழிக்கும், எழுத்துக்கள் கிடைக்கும்
ஆனால் என்னால் மட்டுமே அவைகளில் உயிரெழுத்துக்களை சேர்க்க இயலும்
ஆமாம், என் காதலுக்கு தலைக்கனம் அதிகம்தான்
உனை மாதிரியாய் வைத்து
எந்த மங்கைக்கும், மணம் பிறக்கும்
ஆனால் என்னால் மட்டுமே அவைகளில் காதல் வாசம் சேர்க்க இயலும்
ஆமாம், என் காதலுக்கு தலைக்கனம் அதிகம்தான்
- இப்படியாக தலைக்கனம் கொண்ட என் காதல், கடைசியாக உன் மெளனத்திடம் தோற்றுப் போனது ஒரு சோகக் கதை...
No comments:
Post a Comment