June 18, 2012

எட்டாம் மாதம், ஒரு சனிக்கிழமை மாலைப் பொழுது


காட்சி: ஒன்று
நேரம்: அதே மாலைப் பொழுது
இடம்: நம் இல்லத்தின் முற்றம்

பிறக்கப்போகும் குழந்தைக்கு
வைக்கப் போகும் பெயர்க்கான
சண்டை இன்னும் ஓய்ந்த பாடில்லை

இன்றைக்கு மருதாணி மீது அப்படியொரு ஆசை.
நீ வைத்துவிடும் நாளெல்லாம்
சிவப்பதில் எனக்கும் மருதாணிக்கும்
எப்போதுமே ஒரு போட்டிதான்

உன் அங்கமெங்கும் மருதாணி ஆன நாட்களுக்கு
கொஞ்ச நாளாய் கிடைத்திருக்கிறது விடுமுறை,
உதைக்கும் மகனை சமாதனம் செய்யும் செய்கைகளால்
என் வயிறெங்கும் இப்போது மருதாணி ரேகைகள்


காட்சி: இரண்டு
நேரம்: அதே மாலைப் பொழுது
இடம்: நம் இல்லத்தின் கொல்லைப்புறம்

மணமாகி பத்து மாதங்கள் ஆகியும்
புதுமனைவி எனக்கான
முத்தங்கள் இன்னும் தீர்ந்து போகவில்லை

இன்றைக்கு மல்லிகை மீது அப்படியொரு ஆசை.
மல்லிகைப் பூக்கள் எனும் லஞ்சம்
கொடுத்து முத்தங்கள் எனும்
காரியம் முடிப்பவன் நீ

இன்னொரு உயிரோடு இருப்பதால், உன் செல்ல இம்சைகளுக்கு
கொஞ்ச நாளாய் கிடைத்திருக்கிறது விடுமுறை,
ஆனாலும் கள்வன் நீ, மகனுக்குக் கொடுக்கிறேன் என்று
என்னிடமும் ஏகமாய் வசூலித்து விடுவாய்


காட்சி: மூன்று
நேரம்: அதே மாலைப் பொழுது
இடம்: நம் இல்லத்தின் சமையலறை

நீயோ, நானோ இல்லை நாமோ
ஒற்றைக் கோப்பையில் இரட்டை தேநீர்
எனும் பங்கீடு இன்னும் மாறவில்லை

இன்றைக்கு உன் சமையல் மீது அப்படியொரு ஆசை,
இரட்டை உயிரோடு சாப்பிட அடம்பிடிக்கும் நான் ஒரு புறம்
கோபமே கொல்லாத என் காதலன் நீ மறுபுறம்.
போன பிறப்பில் என் தாயோ?

இன்னொரு மலர், என் செடியில் பூத்திருப்பதால்
கொஞ்ச நாளாய் கிடைத்திருக்கிறது விடுமுறை,
இல்லையெனில் சமையல் வாசம் பிடிக்க வருகிறேன் என்று
என் வாசத்தை பிடித்து சென்றிருப்பாய்


காட்சி: நான்கு
நேரம்: அதே மாலைப் பொழுது
இடம்: நம் இல்லத்தின் ஓய்வறை

உடுத்தி இருக்கையில் மட்டுமன்றி
மடித்து வைக்கும் போதும்
என் ஆடைகளின்
வாசம் பிடிக்கும் பழக்கம் இன்னும் போகவில்லை

இன்றைக்கு உன் முத்தம் மீது அப்படியொரு ஆசை,
வரப்போகும் மகனால் முத்தங்களின் எண்ணிக்கை
இப்போது இரண்டு மடங்காகி விட்டது
இரட்டை பிறவியாய் இருக்கக் கூடாதோ?

தட்டிக் கேட்க ஆள் வரப்போவதால், உன் மிரட்டல்களுக்கு
கொஞ்ச நாளாய் கிடைத்திருக்கிறது விடுமுறை,
இல்லையெனில் உன் கண்கள் எனும் அடியாட்கள் வைத்து
என் உதடுகளை கடத்திப் போயிருப்பாய்

No comments:

Post a Comment