காலை 7.௦௦ மணி - நம் படுக்கையறை
விழிகள் தேடும் முன்னே, என் விரல்கள் தேடுகின்றன உன்னை
மெதுவாய் உணர்கிறேன், இது உன் தகப்பன் வீடு..
கண்களையும், என் கைகளையும் எச்சரிக்கிறது என் மனசாட்சி
இன்றைக்கு எல்லை மீறக்கூடாது
காலை 9.00 மணி - வீட்டு முற்றம்
விவசாயத் தொழிலாளர்களுக்கு கட்டளையாய்
உன் அப்பாவின் கணீர்க் குரல்
எங்கோ இருந்து காற்றில் வரும் உன் அழைப்புக்கு
அடங்கிப் போகிறார் உன் அப்பா
முற்பகல் 11.00 மணி - வீட்டு சமையலறை
நீ இருப்பதால் இன்னும் நிறைய நன்வாசம் வீசுகிறது
உன் வீட்டு சமையலறை,
வழக்கம்போல நீ தான் முதலில் ருசிக்க வேண்டும்
தவமிருக்கிறார்கள் உன் அம்மாவும், சமையலறையும்
பகல் 1.00 மணி - உணவுண்ணும் அறை
வழக்கம் போல உனக்கு ஊட்டிவிட
உன் அப்பாவும் அம்மாவும் ஏங்குகிறார்கள்,
அருகே அமர்ந்திருக்கும் மாப்பிள்ளை என் பெயரில்
யாரோ அமைத்திருக்கிறார்கள் ஒரு செயற்கை வேலியை
பிற்பகல் 3.00 மணி - உன் வீட்டுத் தோட்டத்தின் கிணற்றடி
தோட்டத் தொழிலாளர்களின் கண்களின் தெரிகிறது
உன் பேரழகும், உன்னைப் பிரியும் ஏக்கமும்
உன் தடவலில் மலரும் மலர்ச் செடிகளில்
நீ பிரிவதின் வலியை உணர்கிறேன்
அந்திப் பொழுது 5.00 மணி - உன் வீட்டுக் கொல்லைப் புறம்
கூந்தல் முழுதும் நீ மலர் சூடியும்
வேலைக்காரியின் இன்னொரு மலருக்கும் தருகிறாய் ஒரு இடம்
இனிமேல் யார் வந்து இந்த மொக்குகளுக்கு
மலராகும் வரம் தருவார்?
மாலை 7.00 மணி - உன் அம்மாவிற்கு பிரசவம் பார்த்த ஒரு பாட்டியின் வீடு
உனக்கு முதன் முதலாய் முத்தம் அளித்தவள் இவள்,
இன்னொரு முத்தத்திற்கு இவளுக்கு பஞ்சமா என்ன?
அன்பாய்க் கட்டளை இடுகிறாள் அவள்
'உண்டானவுடன் இங்கே வந்துவிடு... உனக்கும் நான்தான் பிரசவம் பார்க்க வேண்டும்'
இரவு 9.00 மணி - உன் வீட்டு வாசல்
உன் மாமியாரைப் பற்றி அக்கறையாய்
விசாரிக்க உன் பள்ளித் தோழிகள் கூட்டம்
ஒட்டு மொத்தமாய் எல்லோரின் அடுத்த கேள்வி
'இரவுகளில் மாப்பிள்ளை எப்படி?', வெட்கமாய்ச் சிவக்கிறாய் நீ
இரவு 11.00 மணி - மீண்டும் அதே படுக்கையறை
நடந்த கதைகளை விவரிக்க ஆரம்பிக்கிறாய்
இன்னும் முத்த கணக்கை ஆரம்பிக்காமல்
அமைதியாய் இருக்கும் என்னிடம், நீ வினவுகிறாய்
'காலையில் இருந்து உங்களுக்கு என்னாயிற்று?'
அமைதியாய் என்னிடமிருந்து வார்த்தைகள் வருகின்றன
'உன்னை நான்தான் தேவதையாய் வாழ வைக்கப் போகிறேன்
எனும் என் தலைக்கனம் அழிந்து போய் விட்டது.
பிறந்த நாளில் இருந்தே நீ தேவதை தானடடி'
மார்பில் சாய்ந்துகொண்டே சொல்கிறாய்
'இதைவிட எனக்கு வேறு சொர்க்கம் வேண்டுமா என்ன?'
No comments:
Post a Comment