July 12, 2012

நம் சமையலறைப் பக்கங்கள்....


திங்கட்கிழமை

உன்னை உதவிக்கு அழைத்ததுதான்
நான் செய்த மிகப்பெரிய தவறு,
சமையல் வாசம் அறிய அழைத்த நான்
உன் வாசத்தில் மயங்கிப் போனேன்

கடுகுகள் சிவக்கும் முன்னே
என் கன்னங்கள் சிவந்து போயின
வேகவேகமாய்
நானும் சமையலறை வெப்பமும் அணைந்து போனோம்

செவ்வாய்க்கிழமை

உன்னை நம்பி மருதாணி பூசியதுதான்
நான் செய்த மிகப்பெரிய தவறு,
என் கரங்களுக்கு பதிலாய் உன்னை அழைத்த நான்
உன் கரங்களின் எல்லைக்குள் சிறைபட்டுப் போனேன்

வாணலியில் வெப்பம் பரவும் முன்னே
உன் அங்கமெங்கும் மருதாணி பரவியது
வேகவேகமாய்
நானும் நீயும் சிவந்து போனோம்

புதன்கிழமை

உன்னை ஒரு ஓவியம் வரையச் சொன்னதுதான்
நான் செய்த மிகப்பெரிய தவறு,
தூரிகையும் வண்ணங்களையும் இல்லாமல்
நீ வரையும் ஓவியமாய் நான் ஆனேன்

உவர்ப்பும் இனிப்பும் இங்கே
வர்ணங்கள் ஆகின
வேகவேகமாய்
நீயும் உன் தீண்டலும் ஓவியங்கள் ஆனோம்

வியாழக்கிழமை

களைப்பான உன்னை தேநீர் பருக அழைத்ததுதான்
நான் செய்த மிகப்பெரிய தவறு,
கூடுதல் இனிப்புக்காக என் உதடுகளை
கரைத்த இனிப்பாய் நான் ஆனேன்

சர்க்கரை திருட வந்த எறும்புகள்
சிலைகள் ஆகின
வேகவேகமாய்
என் இதழ்களும் உன் இதழ்களும் இனிப்புகள் ஆனோம்

வெள்ளிக்கிழமை

உன்னை சமையலறையில் இருந்து ஒதுக்கி வைத்ததுதான்
நான் செய்த மிகப்பெரிய தவறு,
உன்னைத் தனியாய் போகச் சொன்ன நான்
தனிமையில் வாடிப் போனேன்

என் கழுத்தின் பின்னே
உன் மூச்சுகளின் பிம்பங்கள் இல்லை
வேகவேகமாய்
நானும் என் மூச்சும் உடைந்து போனோம்

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை

என் ஐந்து நாட்களை
உன் இந்த இரண்டு நாட்கள்
எளிதாய் தோற்கடித்து விடுகின்றன

நீ இல்லாமல் நான் வரையும்
கோலங்களை விட,
நீயும் நானும் வைக்கும் புள்ளிகள் தான்
இங்கே நம் காதலின் சின்னங்கள்

கல்லிலும் கடவுள், தூணிலும் கடவுள்
எனும் பக்தனைப் போல்,
கணவன் உனக்கு
எங்கேயும் காதல் தானடா

No comments:

Post a Comment