July 25, 2012

ஒரு பிறப்பும், ஓராயிரம் மறுபிறப்பும் ...


நள்ளிரவு 12.00 மணி:

நம் மகனின் அவசர அசைவுகளை
உன் கரங்களின் வழியே உணர்கிறேன்,
தகப்பனைக் காணத் தவிக்கும் தவிப்பு
என் தவிப்பையும் மிஞ்சுகிறது

திடீரென உனக்குள்ளே ஒரு பிரளயம்,
புரிந்துவிட்டது, இது நம் மகன் உதிக்கப்போகும் நேரம்
இரு கைகளால் ஏந்துகிறேன் இரட்டை உயிர்களை
இறக்கை இல்லாமலே பறக்கிறேன் மருத்துவச்சியிடம்

நள்ளிரவு 1.00 மணி:

உன் இரு கரங்களின் இறுக்கத்தில்
தாய் உன் வலியை உணர்கிறேன்.
வலியால் துடிக்கும் உனைக் காண
ஆண்மகன் எனக்குத் தைரியமில்லை

உருவமில்லா பயமும், தவிப்பும்
என் கழுத்தின் மேலே நடனம் ஆடுகின்றன
அறைக் கதவுகள் மூடப்படுகின்றன
தனியே தவிக்க விடப்படுகிறேன்

பின்னிரவு 2.00 மணி:

நகங்களோடு விரல் சதைகளும்
என் பற்களால் கொலை செய்யப்பட்டன
மனதெங்கும் நடுக்கமேனும் ஒரு மின்சாரம்
பாய ஆரம்பித்திருந்தது

என் செல்களின் மீது
யாரோ நெருப்பு மூட்டி இருந்தார்கள்
வாசலின் மீது கண்களும்
வாசலின் வழியே கால்களும் ஓடிக்கொண்டிருந்தன

பின்னிரவு 3.00 மணி:

ஒரு மணிக்குள்
ஆயிரம் முறை இறந்து பிறந்துவிட்டேன்
கன்னங்களின் மீதிருந்த உன் முத்தத் தடங்களை
என் கண்ணீர் ஆறு அழித்திருந்தது

நாத்திகன் எனக்கு
யார் யாரோ தெய்வம் ஆனார்கள்
மதம் பிடித்த யானையை மிஞ்சியது
என் இதயத்தின் துடிப்பு

அதிகாலை 4.00 மணி:

இரத்தம் உறைந்து போய்விட்டது
நரம்புகள் அறுந்து போய்விட்டன
கொஞ்சம் கண்ணீரும்
நிறையக் காதலும்தான் மீதம்

உன்னால் மகனுக்கு வலியா?
இல்லை அவனால் உனக்கு வலியா?
இரண்டு வலியும் இங்கே ஒன்றாய்
என் உயிரில்

அதிகாலை 5.00 மணி:

வாசல் திறக்கிறது
வலியில் மீதமான கண்ணீருடன் நீ
இரத்தமும் சதையுமாய் நம் மகன்,
அழுகை எனும் ராகத்துடன்

யாருக்கு இப்போது என் முத்தங்கள்?
ஆளுக்கு ஆயிரமாய் வைத்துக்கொள்ளுங்கள்
அணைத்துக் கொள்கிறேன் உன்னையும் சேர்த்து
முத்தங்களும் கண்ணீரும், பேசட்டும் மீதக் கதைகளை

No comments:

Post a Comment