முப்பது வினாடிகளுக்கு முன்:
என் இதயத் தண்டவாளத்தை
உன் இரயில் இன்னொரு முறை கடந்து சென்றது
செல்களில் மெலிதாய்ப் பரவியது ஒரு நிலநடுக்கம்
மெதுவாய் எனைக் கடந்து போனாய் நீ
முப்பது வினாடிகள் கழித்து:
வெறும் மூன்றடித் தொலைவுதான்
உனக்கும் எனக்கும்,
உன் தோழி ஒருத்தியிடம்
ஏதோ பேச ஆரம்பிக்கிறாய்.
இனிவரும் பூகம்பளுக்கான
விதை விதைகின்றன உன் செய்கைகள்,
இன்றைக்கு என்ன
ஆகப்போகிறதோ என் மனது
இன்னுமொரு முப்பது வினாடிகள் கழித்து:
மெலிதான உன் விரல் நகங்கள்
மிக மெலிதாய் உன்னிடம் வெட்டுப்படுகின்றன,
என் உயிர் எனும் மரத்தை
யாரோ கோடாரியால் வெட்டுகிறார்கள்
இன்னுமொரு முப்பது வினாடிகள் கழித்து:
முகத்தில் ஊஞ்சலாடும் இரு முடிகள்
வேக வேகமாய், உன் காதோடு அணைக்கப்படுகின்றன
உன் காதல் ஊஞ்சலில்
ஆடும் குழந்தையாகிறேன் நான்
இன்னுமொரு முப்பது வினாடிகள் கழித்து:
அடம் பிடிக்கும் குழந்தையாய் உன் துப்பட்டா,
சரியும் போதெல்லாம், சரி செய்கின்றன உன் விரல்கள்
உன் துப்பட்டாவின் சிறு சரிவில்
என்னில் பெரும் நிலச் சரிவுகள்
இன்னுமொரு முப்பது வினாடிகள் கழித்து:
உன் இரு இமைகளுக்கு நடுவே
மீண்டும் முத்தங்கள் பரிமாறப்படுகின்றன,
உனக்கான என் இதழ்களில் தெரிகிறது
ஏக்கமும், வறட்சியும்
இன்னுமொரு முப்பது வினாடிகள் கழித்து:
முப்பது வினாடிகளுக்கு ஒரு முறை
என்னுள் நடக்கிறது இந்த அழகு பூகம்பம்,
எந்த அளவு கோலில் அளப்பது
உன் அழகையும், என் பூகம்ப அலகையும்?
என் பத்து திசைகளிலும்
நீ என்னும் அழகுதான்,
ஆகமொத்தத்தில் நீதான் 'அழகின் அழகும், அலகும்'
No comments:
Post a Comment