December 07, 2012

மீண்டும் ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் ....


அதிகாலை 3.37 மணி

யாரோ என் செவிகளில், உன் பெயரை மிக மெலிதாய் உரைக்கிறார்கள்....
மெலிதாய் ஒரு மயிலிறகு வருடுகிறது என்னை...
வேகமாய் விழிகளைத் திறக்கிறேன்...

என் செவிகளில் உன் பெயரை உரைத்தவன் எங்கே போனான்?
இன்னொருமுறை உரைக்க மாட்டானா?
விழிகள் உன் பிம்பத்தையும், செவிகள் உன் பெயரையும் தேடுகின்றன

வன்மையான ஒரு ஏமாற்றம், மெலிதாய் பரவுகிறது என் மனதெங்கும்
மெலிதான ஒரு வலி, வன்மையாய் பரவுகிறது என் கனவெங்கும்
வன்மையான காதல், மென்மையான காதலி
மென்மையான காதலி, வன்மையான காதல்

அதிகாலை 3.39 மணி

எங்கிருந்தோ வருகிறது, உன் கொலுசு சத்தமேனும் சங்கீதம்
செவிகளிலும், உறக்கத்திலும் நடக்கிறது ஒரு கலவரம்
விழிகளில் ஒரு வெடிச்சத்தம்

ஏன் நின்று போனது உன் சங்கீதம்?
இன்னொரு முறை வாசிக்கப் படாதா?
என் சரணங்களும், பல்லவிகளும் உன் இசையைத் தேடுகின்றன

பல்லவியின் ஏக்கம், மௌனமாய் சரணமெங்கும்
சரணத்தின் ஏக்கம், மௌனமாய் பல்லவியெங்கும்
பாடலாய்க் காதல், இசையாய்க் காதலி
இசையாய்க் காதல், பாடலாய்க் காதலி

அதிகாலை 3.41 மணி

இந்த முறை உன் பெயரையும், சங்கீதத்தையும்  தவறவிடப்போவதில்லை
கனவுகள் என் விழிகளின் வாசலில் காத்திருக்க ஆரம்பித்தன
உறக்கம் தொலைந்தது, ஏக்கம் பிறந்தது

மௌனம் வீசும் ஒரு நள்ளிரவாய் மனம்
மலரும் மொட்டாய் உன் நினைவு
முழுமதி உனக்கு தவமிருக்கும் வானமாய் நான்

இடது விழியில் ஒரு வலி , அச்சம் எனக்காய்
வலது விழியில் ஒரு வலி, துணை உனக்காய்
அச்ச மேகங்கள், காதல் துளிகள்
காதல் மேகங்கள், அச்சத் துளிகள்

அதிகாலை 3.43 மணி முதல் அடுத்த அதிகாலை 3.35 மணி வரை

நீ,
நீ,
நீயேதான்

அடுத்த அதிகாலை 3.37 மணி

அடுத்த கண்ணாமூச்சி ஆட்டம் ....

No comments:

Post a Comment