November 26, 2020

இரண்டாவது காதல் கடிதம்

 கடந்த ஆண்டு எழுதிய உனக்கான முதல் காதல் கடிதம், இன்னும் என்னிடமே இருக்கின்றது. இந்த பொல்லாத காதல், என் தைரியத்தை பறித்துக் கொண்டது. தினமும் நூறு முறை அதை நானே வாசித்துக் கொள்கிறேன்.

நித்திரை இல்லா பல இரவுகள், என்னை இரண்டாவதாய் ஒரு கடிதம் எழுதத்தூண்டின. சில ஆயிரம் ஒத்திகைகளுக்குப் பிறகு, இதோ உனக்கான என்னுடைய இரண்டாவது காதல் கடிதம்.

--------------------------------------------------------------------------------------

 தேவதைகளின் தேவதைக்கு,

 

நமது வகுப்பறையின்

வண்ணத்துப்பூச்சி நீயடி,

பிரம்மன் படைக்கும் போதே

நிச்சயம் பிரமித்திருப்பான்

 

நீ அணைத்துக்கொண்ட

புத்தங்கங்களில்

உள்ள எழுத்துக்களோடு சேர்ந்து

மயங்கிப் போனவன் நான்

 

இயற்பியல் ஆய்வகத்தில்

உன்னால் ஏற்பட்ட

வேதியியல் மாற்றங்கள்

ஆயிரமாயிரம்

 

விடுமுறை நாட்களிலும்,

நீ வகுப்பறைக்கு

வராத நாட்களிலும்

நான் வாழாமல் போயிருக்கிறேன்

 

மிகச் சாதாரணமாய்

நீ இதழ் சுழித்த கணங்களில்,

எனக்குள்

மின்சாரம் பாய்ச்சப்பட்டது

 

நம் மகளிர் விடுதி

வழித்தடத்தில்

உன் காலடித்தடம் தேடாத

நாட்கள் இல்லை

 

நீ இல்லாத

என் கனவுகள் இல்லை,

நீ கொல்லாத

என் இரவுகளும் இல்லை

 

கள்ளத்தனமாய்

உன் இதழ்களைக் காணும்போது,

கொஞ்சம் முத்தங்கள்

யாசகம் கேட்கத் தோன்றும்

 

வெட்கத்திற்கு

வெட்கம் கற்றுத் தருபவள் நீ,

ஆடவன் எனை

வெட்கப்பட வைப்பவளும் நீ

 

நீ இல்லாத

இந்த நீண்ட இரவுகள்,

என்னை மரித்தது போதும்.

என்னை மீட்டெடுக்க வா

 

எப்போதடி சம்மதம் சொல்வாய்?

 

இப்படிக்கு,

உனைக் காதலிப்பதற்காகவே படைக்கப்பட்ட நான்

 

பின் குறிப்பு:

விழி மூடி சம்மதம் சொல்லவும்.

இதழ் திறந்து சொல்லாதே. உன் இதழ் காணும் தைரியம் எனக்கு ஒரு போதும் இல்லை

No comments:

Post a Comment