இந்த இரவின் பின்னிரவு நேரம்,
எனக்கு மட்டும் கேட்கிறது
தொலைவில் இருந்து வரும் உன் குரல்
விழிகளை திறக்கலாமா?
திறக்கும் விழி வழியே, நீ தப்பித்துப் போய்விட்டால்,
பிறகெப்படி, உன்னை கனவில் சிறை கொள்வது?
காற்றில் இன்னமும் உன் குரல்,
ஆனால் என் கரங்களின் எல்லைக்குள் நீ இல்லை
உன்னை விரல்கள் கொண்டு தேடுகின்றேன்
நிச்சமாய் அது நீதான்
கனவில் என்னடி கண்கட்டு வித்தை?
இல்லை இல்லை, இது கனவுக்கான கண்கட்டு வித்தை
காற்றோடு கரைந்து இருக்கும் உன்னை
என் கரங்களுக்குள்
மெலிதாய் சிறை வைக்கின்றேன்
இது மௌனங்கள் பேசும் நேரம்,
வார்த்தைகள் மிகத் தாராளமாய்
மௌன விரதம் இருக்கட்டுமே
என் இதழ்களின் ஏக்கங்கள் இன்னுமா புரியவில்லை?
நம் இதழ்கள் மட்டும் பேசிக்கொள்ளட்டுமே
இன்னும் கொஞ்சம் அருகில் வாயேன்
வழக்கம் போல நீ நழுவிக்கொள்கிறாய்
வழக்கம் போல என் கனவும் கலைந்து போகிறது
வழக்கம் போல இந்த இரவு நீளப் போகிறது
நீ தப்பித்து போன பின், இந்த இரவிடம் நான் சிறை படுகின்றேன்.
நீ அருகில் வராத கனவுகள், உயிரற்றவை.
விடியும் முன்பே கரைந்து போய்விடுகின்றன
மிக மெதுவாய்ச் சுற்றும் என் அறையின் மின்விசிறியில்
இன்னும் மிக மெதுவாய் கரைந்து போகின்றன என் ஏக்கங்கள்.
இந்த இரவு ஒரு நீண்ட போராட்டமே
அது போகட்டும்,
மறுபடியும் எப்போது என் கனவில் வருகிறாய் ?
இதழ் கணக்குகள் இன்னமும் மீதம் இருக்கின்றன
😍
ReplyDelete