சோம்பலாய் விடிந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை,
ஒரு தேநீர் குவளையோடு, அறையின் மூலையில் இருந்த
தூசி படிந்த அந்த கால இயந்திரத்தை துடைக்க ஆரம்பித்தேன்.
மெதுவாய் கண் விழித்த இயந்திரம்,
ஒரு மந்திரப் புன்னகையோடு, என்னைப் பார்த்து வினவியது
"உன்னை, கடந்த காலத்திற்கு அழைத்து செல்லவா?".
"என்னை எங்கு வேண்டுமானாலும் கடத்திச்செல்"
என்று நானும் புன்னகையோடு பதிலளித்தேன்.
"மூன்று காலங்கள், மூன்று நிமிடங்கள்" - சம்மதம் சொன்னேன்
கால இயந்திரம் ஒரு இன்ப வரம்.
கடந்த காலத்து என்னை,
நான் மூன்று நிமிடங்கள் ரசிக்கப் போகின்றேன்
காலம் - ஒன்று, நிமிடம் - ஒன்று:
ஏதோ ஒரு பழைய பேருந்து நிலையம்,
யாருக்காகவோ நான் காத்துக்கொண்டிருக்கின்றேன்.
விழிகளில் அவ்வளவு தேடல்,
விரங்களில் அவ்வளவு நடுக்கங்கள்
முப்பது அடி தொலைவில் அந்த மங்கை முகம்.
மெய் சிலிர்க்க வைக்கும் முதல் புன்னகை
ஒட்டு மொத்த அழகையும் கடத்தி வைத்திருப்பாள் போலும்
முப்பதடி, வெறும் மூன்று அடி ஆகியது
கள்ளத்தனமாய்
ஒட்டிக்கொள்ள துடிக்கின்றன
இருவரின் கரங்களும்,
தோள்கள் இடித்துக் கொள்ளக்கூடாதா?
நிறைய வெட்கத்தில்
இன்னும் நிறைய சிவந்து போயிருந்தாள்.
அவள் ஒரு வெட்கச்சுரபி
இவன் ஒரு காதல் கலைஞன்
முதல் சந்திப்பு
முதல் வார்த்தைகள்
முதல் நிமிடங்கள்
சொர்க்கம் என்பது வேறென்ன?
காலம் - இரண்டு, நிமிடம் இரண்டு:
யாருக்காகவோ மழை பெய்துகொண்டிருக்கிறது
ஒற்றைக் குடைக்குள் மழையை மறைக்கும்
ஒரு கள்ள முயற்சியில்
இருவரும் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்
அவள்: எங்காவது ஒரு இடி இடிக்கக்கூடாதா ?
இவனை ஆசையாய் கட்டிக் கொள்ள வேண்டும்.
அவன்: இன்னும் வேகமாய் மழை பொழியக்கூடாதா?
இவளை இறுக்கி அணைத்துக் கொள்ள வேண்டும்
எங்கோ தூரத்தில் ஒரு இடிச் சத்தம்
இன்னும் எங்கோ ஒரு பக்கம் ஒரு மின்னல் ஒளி
யாரோ இருவரையும் கட்டிக் கொள்ள சொல்ல
சட்டென நிகழ்ந்தது அந்த "முதல் முத்தம்"
இதுவா முத்தம்?
இல்லை, இதுவும் முத்தமா?
இடையைப் பற்றிக் கொள்
இதழைப் ஒற்றிக் கொள்
முத்தத்திற்க்கு
ஏது முற்றுப்புள்ளி?
அதுவும்
முதல் முத்தத்திற்க்கு.
காலம் - மூன்று , நிமிடம் மூன்று:
நாற்பதாவது நரை முடியை வெட்டிக் கொண்டிருந்த
ஒரு நீண்ட காலை நேரம்
கண்ணாடியில் பிரதிபலித்த என் விழிகளில்
ஒரு நீண்ட தேடலின் தோல்வி தேங்கி இருக்கின்றது
சுற்றுப் பார்க்கின்றேன்
அறையில் யாரும் இல்லை,
சமையலறையில்
அவளின் வாசம் இருப்பதாய் தெரியவில்லை
என் வாசலில் நின்றிருந்த
அந்த ஒற்றை மிதிவண்டியும்
நிறமிழந்து போயிருந்தது.
நினைவுகளையும் இழந்திருக்குமோ?
என் உதட்டில்
அவளின் ஆயிரமாயிரமாவது முதல் முத்தம் காய்ந்து போயிருந்தது,
அவளின் கொலுசொலி இல்லா
ஒரு நீண்ட மௌனம் இல்லமெங்கும்
ஆக, எப்போதோ அவள் காணாமல் போயிருக்கின்றாள்,
கூடவே நானும் காணாமல் போயிருக்கின்றேன் .
என்னிடமிருந்த என்னை எடுத்துக் கொண்டு
என்னிடமிருந்த அவளை மட்டும் விட்டுவிட்டு போயிருக்கின்றாள்.
நிகழ் காலம் - இன்று இப்போது:
கால இயந்திரம் என்னை மீண்டும் நிகழ் காலத்தினுள் தள்ளி விட்டது.
நன்றி சொல்லிவிட்டு , இந்த நாளுக்கு தயாரானேன்.
அவளுக்கு என்றோ ஒரு நாள் திருமணம் நடந்ததாய்
யாரோ சொல்லி கேட்க மறுத்திருக்கின்றேன்.
காணாமல் போனவளுக்கான,
எப்போது அவளுக்கான தேடல்கள் நின்று போவதில்லை.
தேடல்களில் அவள் என்னுடனே இருக்கின்றாள்
தேடல்கள் அவளின் நினைவுகள் தொலைத்து போவதில்லை
No comments:
Post a Comment