March 10, 2021

அடுத்த சனிக்கிழமையும், அவன் வரும் கனவுகளும்

ஒரு சனிக்கிழமை காலை நேரம்:

கடந்த சந்திப்பிற்கும், இந்த சந்திப்பிற்கும்

இடைவெளி என்னவோ ஒரு வாரம்-தான்.

ஆனால், அது உண்மையில் ஒரு யுகம்

 

என்னைச் சந்திக்க வந்தவனை

ஓடிக் கட்டிக்கொள்ள வேண்டும் போல் இருந்தது.

அவன் எனக்கானவன்,

யாரைக் கேட்க வேண்டும்?

 

கடந்த முறை போல, இந்த முறையும்

என் பிரியமான எழுத்தாளரின்

கவிதைத் தொகுப்பு, பரிசாய்.

எனக்குக் காதலிக்க கற்றுத் தருகிறான் போலும்

 

அவன் இதழ்களில் தெரிந்தது ஒரு வறுமை

ஒரு வாரத்தில் மிகவும் ஏங்கி இருக்கின்றான்

வெறும் தொலைபேசி முத்தங்களில்

அரைகுறையாய் உயிர் வாழ்ந்திருக்கின்றான்

 

என்ன பேசுவது இவனிடம்?

இரவு முழுதும் ஒத்திகை பார்த்தேன்.

எங்கே அந்த வார்த்தைகள்?

வெட்கமே, நீ ஒழிந்து போ

 

என் மௌனமும், அவன் மௌனமும்

யுத்தம் நடத்த ஆரம்பித்தன.

சட்டென்று கரம் பற்றிக் கொண்டான்,

நடக்க ஆரம்பித்தோம், மௌனம் கலையட்டும்

 

"என்னடி, இவ்வளவு அழகாய் இருக்கிறாய்?"

எனக்கு மட்டும் கேட்கும் படி ஒரு கேள்வி.

அவ்வளவுதான், நான் தோற்றுப்போனேன்.

இவன் காதலுக்கு, எப்போதுமே நான் அடிமை

 

வழக்கமான வினாவுடன் ஆரம்பித்தேன்

"என்னை, எவ்வளவு காதலிக்கிறாய்?".

கரத்தை இன்னும் இறுக்கிக் கொண்டான்.

அது சரி, இவனுக்கு காதலிக்கக் கற்றுத் தரவேண்டுமா என்ன?

 

அவன் வந்த கனவுகளின்

வெட்கக் கதைகள் பற்றிச் சொன்னேன்.

நான் இல்லாத இரவுகளின்

சோகக் கதைகள் பற்றிச் சொன்னான்.

 

நான் இல்லாத இரவின் வெறுமையை

என் தொலைபேசி முத்தங்கள் கொண்டு நிரப்புவான்

சில நிமிடங்களில்,

மீண்டும் நிரப்பச் சொல்லும் கயவன் இவன்

 

இப்படியே கரம் கோர்த்து

வாழ்நாள் முழுதும் இருக்கக் கூடாதா?

ஒரு முகவரி இல்லா

தேசம் போவோமா?

 

விழிகளும், விரல்களும்

நிறைய பேசியதாய் ஞாபகம்

எங்கள் மௌனங்கள், முழுதாய் உடையும் முன்

தூரத்தில் அவனுக்கான பேருந்துச் சத்தம்

 

கை ரேகைகள் பிரிக்கப்படும்

ஒரு சத்தம் கேட்கின்றது.

எங்கிருந்தோ ஒரு அழுகை

எட்டிப் பார்க்கின்றது.

 

பிரிய மனமில்லாமல் பிரிந்து,

அழுக்குப் பேருந்தில்

தொற்றிக்கொண்டே சொன்னான்

"மீண்டும் கனவில் சந்திப்போம்"

 

அறைக்கு வந்து

அடுத்த சனிக்கிழமை காலை நேரத்திற்கும்

அவன் வரும் கனவுகளுக்கும்

காத்திருக்க ஆரம்பித்தேன்

 

 

January 02, 2021

முதல் புடவையும், அவன் வாசமும்

சில ஆண்டுகளுக்கு முன்:

 

இரண்டாம் சந்திப்பின்போது

அளித்த முதல் பரிசு

இந்தப் புடவை

 

புடவைக்கு பதில் பரிசு கேட்டேன்,

"அடுத்த சந்திப்பின் போது,

கட்டிக்கொண்டு வா" என்றான்

 

நடுநிசி தாண்டியும் உறக்கம் இல்லை

அறையெங்கும் அவன் வாசத்தோடு,

புதுப்புடவையின் வாசமும்

 

ஒரு மகா யுத்தத்திற்குப் பிறகு

எங்கிருந்தோ உறக்கம்  வந்தது.

கனவுகளில் வழக்கம் போல அவனே

 

ஒரு நீண்ட காலை நேர போராட்டத்திற்க்குப் பிறகு

நான் புடவை கட்டிகொண்டேன்

புடவை என்னைக் கட்டிக்கொண்டது

 

யாரோ என்னை இமைக்காமல் பார்க்கின்றார்கள்

அறை கண்ணாடிக்கு திடீரென

ஆயிரம் விழிகள் முளைத்துக் கொண்டனவோ?

 

ஒரு முறை கண்ணாடியில் எனைப் பார்த்துக்கொண்டேன்

நான் அழகா, இல்லை புடவை அழகா?

இருவருமே அழகுதான், அதுவும் கொள்ளை அழகு

 

அடுத்த நாள் சந்திப்பில்

ஒரு முழம் மல்லிகையோடு

காத்திருந்தான் அவன்

 

இமைக்க மறந்து விட்டானா, இவன்?,

வெட்கம் என்னைப் பிடுங்கித் தின்றது

வியர்வை ஊற்றில் முழுதுமாய் நனைந்து போனேன்

 

"இந்தப் பரிசு போதுமா" என்றேன்.

"இது போதாது, இப்படியே என் இல்லம் வந்துவிடு" என்றான்

என்னைக் கடத்தும் எண்ணத்தோடு வந்திருப்பான் போலும்

 

அவன் விழிகளில், நான் அவ்வளவு அழகு

என் விழிகளில், அவன் அவ்வளவு காதல்

என்னை விட, என் புடவையுடன் அவன் பேசியவை நிறைய

 

"அடுத்த புடவை, எப்போது?" என வினவினேன்

"தேவதை, உன்னை ரசித்துக் கொண்டிருக்கின்றேன்,

தொந்தரவு செய்யாதே" என்றான்

 

சில நிமிடங்களுக்கு முன்:

 

எப்போதோ கொடுத்த பரிசை

நேற்று இரவு, இரவல் கேட்டான்.

வழக்கம் போல, இரவல், இரவோடு

முடிந்து போகவில்லை

 

அந்த முதல் புடவையில்,

அவனுக்கு, ஆயிரம் கவிதைகள் ஒளிந்திருக்கும்

நான் தேடுவது என்னவோ, அவனின் வாசம் மட்டுமே ...

November 26, 2020

இரண்டாவது காதல் கடிதம்

 கடந்த ஆண்டு எழுதிய உனக்கான முதல் காதல் கடிதம், இன்னும் என்னிடமே இருக்கின்றது. இந்த பொல்லாத காதல், என் தைரியத்தை பறித்துக் கொண்டது. தினமும் நூறு முறை அதை நானே வாசித்துக் கொள்கிறேன்.

நித்திரை இல்லா பல இரவுகள், என்னை இரண்டாவதாய் ஒரு கடிதம் எழுதத்தூண்டின. சில ஆயிரம் ஒத்திகைகளுக்குப் பிறகு, இதோ உனக்கான என்னுடைய இரண்டாவது காதல் கடிதம்.

--------------------------------------------------------------------------------------

 தேவதைகளின் தேவதைக்கு,

 

நமது வகுப்பறையின்

வண்ணத்துப்பூச்சி நீயடி,

பிரம்மன் படைக்கும் போதே

நிச்சயம் பிரமித்திருப்பான்

 

நீ அணைத்துக்கொண்ட

புத்தங்கங்களில்

உள்ள எழுத்துக்களோடு சேர்ந்து

மயங்கிப் போனவன் நான்

 

இயற்பியல் ஆய்வகத்தில்

உன்னால் ஏற்பட்ட

வேதியியல் மாற்றங்கள்

ஆயிரமாயிரம்

 

விடுமுறை நாட்களிலும்,

நீ வகுப்பறைக்கு

வராத நாட்களிலும்

நான் வாழாமல் போயிருக்கிறேன்

 

மிகச் சாதாரணமாய்

நீ இதழ் சுழித்த கணங்களில்,

எனக்குள்

மின்சாரம் பாய்ச்சப்பட்டது

 

நம் மகளிர் விடுதி

வழித்தடத்தில்

உன் காலடித்தடம் தேடாத

நாட்கள் இல்லை

 

நீ இல்லாத

என் கனவுகள் இல்லை,

நீ கொல்லாத

என் இரவுகளும் இல்லை

 

கள்ளத்தனமாய்

உன் இதழ்களைக் காணும்போது,

கொஞ்சம் முத்தங்கள்

யாசகம் கேட்கத் தோன்றும்

 

வெட்கத்திற்கு

வெட்கம் கற்றுத் தருபவள் நீ,

ஆடவன் எனை

வெட்கப்பட வைப்பவளும் நீ

 

நீ இல்லாத

இந்த நீண்ட இரவுகள்,

என்னை மரித்தது போதும்.

என்னை மீட்டெடுக்க வா

 

எப்போதடி சம்மதம் சொல்வாய்?

 

இப்படிக்கு,

உனைக் காதலிப்பதற்காகவே படைக்கப்பட்ட நான்

 

பின் குறிப்பு:

விழி மூடி சம்மதம் சொல்லவும்.

இதழ் திறந்து சொல்லாதே. உன் இதழ் காணும் தைரியம் எனக்கு ஒரு போதும் இல்லை

November 12, 2020

இது காதலாய் இருந்திடுமோ?

 உன் வெட்கங்களும், 

என் தயக்கங்களும்

நம் எதிரிகள்.

- இது காதலாய் இருந்திடுமோ !!

September 24, 2020

நான், அவன் மற்றும் அவனின் வெட்கங்கள்

 மங்கை எனக்கு

வெட்கம் ஒன்றும் புதிதல்ல,

தினம் தினம் அவனால்

புதிய புதிய வெட்கங்கள்

 

அதெல்லாம் சரி,

என்னை வெட்கப்பட வைப்பவனுக்கு

வெட்கப்படத் தெரியுமா?

எப்போது அவன் கடைசியாய் வெட்கப்பட்டான்?

 

திருமணத்திற்கு முன் ஒரு நாளில்

ஒரு முத்தம் கேட்டேன்,

அய்யோ, போடி என்றான்

அவன் குரலில் தெரிந்தது அவனின் வெட்கங்கள்

 

இன்னொரு நாள்

எனைக் கட்டிக்கொள்ள சொன்னேன்

இன்னொரு நாள் பார்ப்போம் என்றான்

அவன் கைகளில் தெரிந்தது அவனின் வெட்கங்கள்

 

பேருந்துப் பயணத்தில்

ஒட்டிக் கொள்ளச் சொன்னேன்

இல்லை பரவாயில்லை என்றான்

அவன் தோள்களின் தெரிந்தது அவனின் வெட்கங்கள்


மழை நாளில்

குடைக்குள் ஒட்டிக் கொள்ளச் சொன்னேன்

பெரிதாய் மழை இல்லை என்றான்

அவன் கால்களில் தெரிந்தது அவனின் வெட்கங்கள்

 

என் உள்ளங்கை ரேகைகளை

அவன் விரல்களால் வாசிக்கச் சொன்னேன்

ஒரே வினாடியில் வாசிப்பு முடிந்தது

அவன் விரல்களில் தெரிந்தது அவனின் வெட்கங்கள்

 

எனக்கும் அவனுக்கும் இருந்த

இடைவெளியைக் நீக்கச் சொன்னேன்

இன்னும் தள்ளிப் போனான்

அவன் மூச்சில் தெரிந்தது அவனின் வெட்கங்கள்

 

அவனின் ஒற்றை விரலில், என் மீது

ஓவியம் வரையச் சொன்னேன்

அவன் ஓவியம் ஆகிப் போனான்

அவன் நகங்களில் தெரிந்தது அவனின் வெட்கங்கள்

 

மணமான நாளில்

என் வெட்கத்தை உடைக்கச் சொன்னேன்

என்னிடம் தோற்று, என் வெட்கத்திடமும் தோற்று

இறுதியாய் அவன் வெட்கிப்போனான்


நானும், என் வெட்கமும் 

அவன் வெட்கத்திடம் 

எப்போதுமே தோற்றுப் போவோம்

 

அவனை வெட்கப்பட வைப்பதை விட

வேறென்ன வரத்தை

இந்தக் காதல் தந்துவிட முடியும்?

July 19, 2020

என் கல்லூரி விடுதி அறையும், கள்வன் நீயும்

கதவின் பின்புறத்தில் இருக்கும்
உன் புகைப்படம்
இதுவரைக்கும் என்னிடம்
ஆயிரம் முத்தங்களையாவது வாங்கி இருக்கும்

எத்தனை முறை
இந்த புகைப்படம் வழியே,
நான் வெட்கப்படுவதை
நீ  பார்த்திருப்பாய்?

நானும் நீயும் பேசுவதை
ஒட்டுக் கேட்பதற்காகவே
இந்த சுவரெங்கும் முளைத்திருந்தன
நூறு செவிகள்

இந்த அறையின்
கண்ணாடிக்குத் தெரியும்
உன்னிடம் நான் பேச நினைத்ததின்
ஒத்திகைகளும், வாக்கு மூலங்களும்

கனவுக்கும் நித்திரைக்கு
நான் சண்டையிடா நாட்கள் இல்லை
என் தலையணை அறியும்
அந்த நிகழ்வுகளை

சன்னல் மூலையில் இருந்த
மர மேசையெங்கும்
உன் பெயரும் என் காதலுமே
இழையோடி இருக்கின்றன

என் புத்தகங்களுக்கு இடையே
உன் காதல் கடிதங்கள்
என் ஆடைகளுக்கு இடையே
உன்னிடம் திருடிய கைக்குட்டைகள்

அறையின்
ஒற்றைச் சாவியில்
உன் பரிசான
இரட்டை காதல் புறாக்கள்

ஆடை மாற்றும் தருணங்களில் எல்லாம்
உன்மேல் வரும் சந்தேகம் -
இந்த முறை
எங்கே ஒளிந்திருப்பான் இவன்?

உனக்கு அடிமையாகிப்போன
என் தனிமை நிமிடங்கள்,
இந்த இரவுக்கு மட்டுமே
தெரிந்த இரகசியங்கள்

இப்படிக்கு,
-  கள்வனைக் காதலித்த தேவதை ஒருத்தி

July 15, 2020

உன் மௌனம்

என் விரல் நகங்களின்
மரண தண்டனைகள்,
உன் மௌனத்தால் எழுதப்படுகின்றன.