June 30, 2011

நீ காதலியாக இருக்கும் போது
உன்னில் மனைவியையும்
நீ மனைவியாக இருக்கும் போது
உன்னில் காதலியையும்
தேட வைத்திருக்கிறது இந்த பொல்லாக் காதல்
இருக்கும் விண்மீன்களைக்கூட
அறிவியல் எண்ணிச் சொல்கிறது,
ஆனால் உன் வெட்கங்களின் வகைகளை
அறிந்து கொள்ள அறிவியலில் ஏதேனும் வழி உண்டோ?

June 27, 2011

முந்தின நாள் இரவில் மிச்சம் வைத்த வெட்கங்களை
காலையில் கண்ணாடி முன் கொட்டிப்போகும் நீயும்,
இரண்டு வெட்கங்களுக்கு நடுவில் ஊஞ்சலாடும் நானும்
இருக்கும் இடத்திற்கு பேர் சொர்க்கம் இல்லாமல் வேறென்ன?
உன் வெட்கப் பல்கலைக்கழகத்தில்
வாரா வாரம் புதிய பாடத்திட்டங்கள் சேர்க்கும் உனக்கு,
நான் இன்னும் முதல் வகுப்பே தாண்டவில்லை
என்பது நினைவில்லையோ?

June 25, 2011

உன் வீட்டிற்கும் என் வீட்டிற்கும்
இருக்கும் தொலைவை விட,
என் அருகே அமர்ந்திருக்கும்
உனக்கும் எனக்கும் இருக்கும் இடைவெளி
பெரிதாய்த் தெரிகிறதடி எனக்கு

June 23, 2011

இந்நாள் வரை தேநீரில்
நான் சர்க்கரை கலந்ததில்லை,
உன் பெயரை சொல்லிக்கொண்டு பருகும்போது
சுவை குறைந்த சர்க்கரை எனக்கெதற்கு?
உன்னுடைய புதிய புகைப்படம்
ஒன்றை அனுப்பிவையேன்,
அடுத்த கவிதைக்கு கரு தேடி
களைத்துப் போய்விட்டேன்
அகதியைப் போல் அலைகின்றன
உன் மண்ணில் என் சொற்கள்,
உன் மனமெனும் முகாமில்
சிறிது இடம் கொடேனடி

June 22, 2011

நம்முடைய அடுத்த பட்டிமன்றத் தலைப்பு:
நாம் சந்தித்த முதல் நிமிஷம்
உன்னோடு இருக்கும் இந்த நிமிஷம்
இரண்டில் எது பொக்கிஷம்?
என் கவிதையின் வார்த்தைகள்
வர்ணம் இழந்து போகின்றன
நீ விமர்சனம் செய்யாவிட்டால்

June 20, 2011

என் நிச்சயதார்த்த மோதிரத்திற்கும்
உன் மாங்கல்ய நூலுக்கும்
இடையே ஏன் இத்தனை
தேவையில்லாத நிமிடங்கள்?

June 16, 2011

தேநீர் தயாரிக்க
பதினைந்து நிமிடம் செலவாகுமென்று
இலவசமாய் முத்தங்களை தந்துபோகும்
ஒரு அழகான சோம்பேறி நீ

June 14, 2011

உன் முத்தங்களை பன்மடங்காக்குவதில்
மிக மிக சந்தோசங்கள்,
உன் வெட்கங்களை சேமிக்கத் தவறுவதில்
மிக மிக வருத்தங்கள்
எழுத்தாணி காலம் தொடங்கி,
கணினிக் காலம் வரை
நீயும் மௌனமாய்த்தான் இருக்கிறாய்,
நானும் புலம்பிக் கொண்டுதான் இருக்கிறேன்
எப்போது கடக்கும் என் கரையை
உன் மௌனம் எனும் புயல்?
உன் மனநிலை அறிக்கையில்
எனக்கு ஏதும் புலப்படவில்லை.

June 13, 2011

உன் சிவப்பு உதட்டுச்சாயம்
என் கன்னங்களில் ஒட்டிக்கொண்டாலும்
வெட்கத்தில் சிவந்து போவதென்னவோ நீதான்
பிள்ளையார் சுழியில்
ஆரம்பிக்கும் மடல்கள் போலே,
உன் உதட்டுச் சுழியில்
ஆரம்பிக்கின்றன என் காவியங்கள்

June 09, 2011

பாற்க்கடலைக் கடைந்து கிடைக்கும்
அமுதம் யாருக்கு வேண்டும்?
நம் தோழியின் திருமண பந்தியில்
நீ கைகளை உதறியபோது
என் மீது தூறலாய் விழுந்த
அந்த இரு நீர்த்துளிகள் மட்டும் போதும்
நாம் சந்தித்த நாளில்
திருமணமான நம் வகுப்புத்தோழி கூட
இடுப்பில் ஒன்றும், வயிற்றில் ஒன்றுமாய்
ஒய்யாரமாய் வலம் வருகிறாள்,
உனக்கு மட்டும் ஏன் மனதில்
ஒன்றும் தோன்ற மறுக்கிறது?

June 02, 2011

உணவு விருந்துகள்
இனிப்பிலிருந்து ஆரம்பிப்பது போல,
என் காலைப் பொழுதுகள்
உன்னிலிருந்து ஆரம்பிக்கின்றன
இதோடு நாற்பத்து மூன்று முறை
உன்னை மறந்தாகிவிட்டது,
என் ஒவ்வொரு முறை சபதத்தையும்
துகள்துகளாய் உடைத்துப்போகிறது
உன் தொலைபேசி அழைப்பு

June 01, 2011

எதிர்பார்த்தது வீண் போகவில்லை
சாயந்தரம் வீசிய மழையில் நனைந்தாயிற்று.
சில மணி நேர சத்தங்களும்
சில நிமிட முத்தங்களும் நிச்சயம்