July 28, 2011

இறைவா, இந்த ஆடி மாதம் மட்டும்
என்னை என் மனைவிக்கு மகனாய் மாற்றிவிடேன்,
இந்த மாதத்தில் அவனுக்கு மட்டும்தான்
முப்பத்திரெண்டு பௌர்ணமி நாட்கள்
நம்மைப் பற்றிய அடுத்த காவியம்:
333 தேன்நிலவு நாட்களும்
32 தேய்நிலவு நாட்களும்
உன் மழைக்காகக் காத்திருக்கின்றன
என் நந்தவன பூச்செடிகள் ,
எப்போது பொழியும் உன் வானம்?
எப்போது மலரும் என் மொட்டுக்கள்?

July 26, 2011

ஒரு தலைக் காதலும்
இந்த ஆடி மாதமும் ஒன்றுதான்,
அங்கே கசக்கிப் போட்ட காதல் கவிதைகள்
இங்கே காற்றில் கரைந்து போகும் முத்தங்கள்
வானவில்லாய் நீ அருகில் இருந்தும்
நான் நிறமிழந்துதான் இருக்கிறேன்,
ஆடி நாட்கள் முடியும் வரை
உன் வண்ணங்களும் கன்னங்களும் எனக்கு தொலைவுதான்

July 20, 2011

அம்மியையே பறக்கவைக்கும்
இந்த ஆடிக் காற்றுக்கு
என் ஆசைகள் மட்டும் என்ன விதிவிலக்கா?

July 19, 2011

என் பேரருவி நீ அருகில் இருந்தும்
கொடியில் காயும் உன் ஈர ஆடைகளில்
தாகம் தீர்ந்து போகின்றேன்
நம் புன்னகைகளிலும் கண்ணசைவுகளிலும்
உருவாகும் எல்லாச் சந்தர்ப்பங்களுமே
ஏனோ பெரு மூச்சுகளாகவே சபிக்கப்படுகின்றன

July 18, 2011

சொர்க்கத்தில் நரகம்
நம் வீட்டின் ஆடி மாத நாட்கள்,
நரகத்தில் சொர்க்கம்
ஆடி மாதம் வருடத்தில் ஒரு முறை மட்டும்
கண்களும் இதழ்களும் பேசிக்கொண்ட
மாதங்கள் போய்,
பெரு மூச்சுக்கள் மட்டுமே பேசிக்கொள்ளும்
மாதம் வந்திருக்கிறது இப்போது
வரமாய் வந்த ஆண்டின் 365 நாட்களில்
ஏனோ நமக்கு மட்டும் 32 சாப நாட்கள்
பதினோரு மாதம் வளர்ந்து
இந்த ஒரே மாதத்தில் தேய்ந்துபோகும்
சபிக்கப்பட்ட நிலவு நான்
எப்போதுமே அழகாய்த் தோன்றும் நீ,
ஏனடி இந்த ஆடி மாதத்தில் மட்டும்
அநியாத்திற்கு பேரழகாய்த் தோன்றுகிறாய்?