November 30, 2011

பல முத்தங்களை செலவழிக்கிறேன்
உன்னிடம் வாங்கும் சில முத்தங்களுக்காக,
என்னிடம் வாங்கி
நம் மகனுக்கு தானம் தருகிறாயோ?
உன் முத்தங்களை ஏலம் எடுப்பதில்
எனக்கும் நம் மகனுக்கும் ஏக போட்டி,
கொஞ்சலில் அவனும்
கெஞ்சலில் நானும் வெற்றிபெறுகிறோம்
என் கவிதைகள் எல்லாம்
ஏலத்திற்கு வந்துவிட்டன,
காதலின் கடனை அடைத்து
என்னை மீட்க எப்போது வருவாய்?

November 29, 2011

மழையில் நனைந்த எனக்கு
துவட்டிக்கொள்ள கிடைக்கும் சேலைத் தலைப்புதான்,
இன்றைய காவியத்தின் முதல் பக்கம்
உன் மௌன வனத்தில்
மரங்கொத்திப் பறவை நான்,
என் காதல் வனத்தில்
மனங்கொத்திப் பறவை நீ
நீ அழகெனும் மெழுகில்
செய்த சிலை,
உன் அழகில் உருகிப்போவதேன்னவோ
அடியேன் நான்தான்

November 24, 2011

உன் இமைதுடிப்பின் மித வேகத்தில்
எகிறிப்போகிறது என் இருதயத் துடிப்பின் வேகம்
நம் இதழ்கள் இணைந்து மௌனமாகும் போது
உன் கண்களுக்கும் வெட்கம் வந்துவிடுகிறதோ?
ஏனோ இமைகளை மூடிக் கொள்கிறாய்
நம் இதழ்கள் இணைந்து மௌனமாகும் போது
உன் கண்களுக்கும் வெட்கம் வந்துவிடுகிறதோ?
ஏனோ இமைகளை மூடிக் கொள்கிறாய்
உன் இதழ்களின் ஏக்கங்கள் உன் கண்களில்,
உன் கண்களின் காதல் உன் இதழ்களில்
கண்கள் மொழியில் சம்மதம் சொல்கிறாய்,
இதழ்கள் மொழியில் மௌனம் சாதிக்கிறாய்,
ஏன் இந்த முரண்பாடு?

November 23, 2011

திருமணத்திற்குப் பிறகும் தாடிச் சின்னம்.
எனக்கொன்றும் காதல் தோல்வி இல்லை,
என் கன்னங்களுக்கு தான் முத்தத் தோல்வி

November 22, 2011

கட்டிக் கொள்ள எப்போதும்
புதுப் புடவைதான் வேண்டுமா என்ன?
இன்றும் கூட நான் புதிதாய்த் தான் இருக்கிறேன்
என் நாட்குறிப்பின் இன்றைய வரிகள்
'மிதமான ஒரு குவளை தேநீரும்
இதமான சில கொஞ்சல்களும்'
நீ களைத்துப் போயிருக்கிறாய்
உன் அழகு கலைந்து போயிருக்கிறது.
கலைந்த அழகைச் சேர்க்க நான்,
தொலைந்த என்னை மீட்க நீ....
என் வளர்பிறை நிலவிலும்,
மனையாள் உனக்காக காத்திருப்பதில்
சில தேய்பிறை நிமிடங்கள்,
நீ ஒப்பனை செய்வது
ஒரு கவிதையெனில்
ஒப்பனையைக் கலைப்பது
ஒரு காவியம்
நான் என் பெண் நிலவுக்கும்,
நிலவு தன் துணை நிலவுக்கும்
காத்துக் கொண்டிருக்கிறோம்
எப்போது வருவாய் என் தேன்நிலவே?
காதலனாய்க் காத்திருக்கும் சுகம்
கணவனாய்க் காத்திருப்பதில் இல்லை,
கணவனாய்க் காத்திருக்கும் வலி
காதலனாய்க் காத்திருப்பதில் இல்லை

November 21, 2011

கடிகார அவசர வினாடிகளுடன்
உன் ஒப்பனை நடத்தும் போட்டியில்
எப்போதுமே முதல் பார்வையாளன் நான் தான்
திருவிழாக் கூட்டத்தை இழந்த கிராமமாய்
செய்வதறியாமல் நிற்கிறேன்,
அவசரமாய் நீ அலுவலகம் கிளம்பிப் போனபின்
உன் ஐந்து நிமிட
அவசர ஒப்பனையில்
வீடெங்கும் கொட்டிக்கிடக்கிறது
உன் அழகின் ஆயிரம் துணுக்குகள்
அவசர அவசரமாய் அலுவலகம் கிளம்பும் நீ,
முத்தங்கள் தராமல் சொல்லும்
வழக்கமான பதில்
'இரவில் வட்டியுடன் வாங்கிக்கொள்'
அலுவலகப் பேருந்தைப் தவற விடுவோம்
என்கிற அவசரத்தில் நீ,
உன் அவசரத்தில்
என் முத்தங்கள் பறிபோய்விடுமோ
என்கிற பயத்தில் நான்
நீண்ட பேருந்துப் பயணத்திற்காக
நானும்,
உறக்கத்தில் நீ தலை சாய
என் தோளும் காத்திருக்கிறோம்
என் நித்திரை கலையும்
அந்த சில வினாடித் துளிகளிலும் கூட
உன்னை இன்னும் இறுக்கிக் கொள்ள
ஆசைப்படுகின்றன என் கரங்கள்

November 20, 2011

ஒற்றை வர்ண ஓவியம் நீ,
வெட்கப்படும் போது மட்டும்
நீ ஒரு பலநிற வானவில்

November 17, 2011

உன் புடவைத் தலைப்பை
சிறையெடுக்க முனையும்போதெல்லாம்
உன் நாணத்திடம் நான் தோற்றுப்போகிறேன்,
இரட்டை எதிரிகளுடன் என் ஒற்றைப் போர்
பேரழகு உன்னைப் பற்றி எழுதும்
என் கவிதைகள் ஒவ்வொன்றும்
அழகாய் இருப்பதில் அதிசயம் ஒன்றுமில்லையடி
முத்தங்களுக்கு பின்புதான் கன்னங்கள் சிவந்தாலும்,
என் தேசத்து பேரழகி நீ மட்டும்
முத்தங்களுக்கு முன்னும் சிவக்கிறாய்
முத்தங்களுக்கு பின்னும் சிவக்கிறாய்
எப்போது சிவக்கின்றன உன் கன்னங்கள்
முத்தங்களுக்கு முன்பா, இல்லை
முத்தங்களுக்கு பின்பா?
மலரும் போது வராத மணம்,
நீ சூடிக்கொண்ட பிறகு மட்டும்
எப்படி வருகிறது இந்த மல்லிகைக்கு?

November 16, 2011

நித்திரை முடிந்து எழுகையில்
உன் கூந்தலை மட்டும் முடிந்துகொள்,
உதிர்ந்திருக்கும் வெட்கங்களை
நான் மாலையாக்கிக் கொள்கிறேன்
நான் இல்லத்தில் இல்லாதபோது
உன் முத்தங்களை எங்கே சேகரித்து வைக்கிறாய்?
நீ இல்லத்தில் இல்லாதபோது
நான் சுவைத்துக்கொள்ள வசதியாக இருக்கும்
தோற்றுப்போகும் வீரர்கள் தான்
போரில் புற முதுகிடுவர்கள்,
நீ புற முதுகிடுகிறாய்
நான் தோற்றுப்போகிறேன்

November 14, 2011

மணமகள் பெயர் இல்லாத
வெற்று திருமண அழைப்பிதலாய்,
என் கவிதைகள்.
எப்போது சம்மதம் தருவாய்
உன் பெயரை இணைக்க?