January 20, 2012

அந்நிய தேசத்தில் குடியேறிய கணினிக்கு வாக்கப்பட்ட, ஒரு காதல் மனைவி நான்

காலை 6.00 மணி:
முத்தங்களால் உன்னை எழுப்ப முனைகிறேன்,
காற்று அறியும் என் முத்தங்களை, உன் கன்னங்கள் ஏனோ அறியவில்லை

காலை 7.00 மணி:
இன்றைக்கு சமைத்த புதினாத் துவையல் மிக அருமை,
அலுவலக அவசரம் உனக்கு, புதினாவுக்கு புதிதாய் ஏதோ பெயர் வைக்கிறாய்

காலை 8.00 மணி:
வாசல் வந்து வழி அனுப்புகிறேன், கண்களில் நீரோடு
அலுவலக தொலைபேசியை அணைத்து, என்னை மறந்து போகிறாய்

காலை 9.00 மணி:
நீ போனபின் இருண்டு போய் விட்டது என் உலகம்,
இன்றைக்கும் என் காதல் தோற்றுப்போய் விட்டது.

காலை 10.00 மணி:
என் அம்மாவிடம், பொய்யாய் உன்னைப் பற்றி நான்கு வரிகள்
என் தோழியிடம், பொறமைக்காக அமெரிக்கா பற்றி நான்கு வரிகள்

முற்பகல் 11.00 மணி:
இன்றைக்கும் ஆசை ஆசையாய் உனக்கு ஒரு சமையல்,
எப்போது நீ வரப் போகிறாய், என்பது வழக்கம் போல ஒரு புதிர்தான்

பகல் 12.00 மணி:
மனதெங்கும் உன் வாசனையைப் போல
என் சமையல் வாசனை வீடெங்கும் பரவிக்கிடக்கிறது
நம் வீட்டுக் கதவில், உனக்காக தவமிருக்கின்றன என் கண்கள்

பகல் 1.00 மணி:
நொடிகளில் நிமிடங்களைத் தேடும் அவசரத்தோடு மதிய உணவு உனக்கு,
இன்றாவது பாராட்டி ஒரு வார்த்தை சொல்வாயா?

பிற்பகல் 2.00 மணி:
மீண்டும் அதே ஏமாற்றத்தோடு, தனியே அமர்கிறேன்
எங்கே போயின, நீயும் நானும் காதலித்த பழைய நாட்கள்?

பிற்பகல் 3.00 மணி:
நீ இல்லாத நிமிடங்களை, கொலை செய்ய தூக்கக் கத்தியைத் தேடுகிறேன்
நீ இல்லாத முள் படுக்கையில், தூக்கத்திற்கும் எனக்கும் நடக்கிறது ஒரு போராட்டம்

மாலை 5.00 மணி:
வீட்டை சுத்தம் செய்தலாவது மீண்டும் சில மணிகள் சாகும்
மடித்து வைக்கும் உன் சட்டைகளில், எங்காவது இருக்கிறதா என் குங்குமம்?

மாலை 7.00 மணி:
களைத்துப் போய் வரும் உன்னிடம், எப்படிக் கேட்பது அணைக்கச் சொல்லி?
என் மடியில் உனக்காக ஒரு இடம் இருந்தும், உன் மடியில் கணினிக்குத்தான் முழு இடமும்

இரவு 8.00 மணி:
அடுப்போடு நானும், கணினியோடு நீயும் வசிக்கிறோம்
சமையலறை நான் மட்டுமே வசிக்கும் உலகம் ஆகிவிட்டது

இரவு 9.00 மணி:
ஒற்றை உணவு மேசையில் இரண்டு துருவங்களாய் நீயும் நானும்
உணவை மறந்து, தொலைக்காட்சியின் நிகழ்ச்சியை நீ சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாய்

இரவு 10.00 மணி:
முத்தத்திற்கும் அணைப்புக்கும் ஏங்கி தனியாய் நான் படுக்கையில்,
அலுவலக தொலைபேசி மனைவியிடம் நடத்துகிறாய், உன் தாம்பத்யங்களை.

இரவு 11.00 மணி:
இன்றைக்கும் தலையணை நனையப் போகிறது என் கண்ணீரில்,
காதல் சொர்க்கத்தை, அந்நிய தேசத்தில் விற்ற அப்பாவி மனைவிகளில் நானும் ஒருத்தி

No comments:

Post a Comment