முன் குறிப்பு:
இக் கவிதையில் வரும் ஆண்டுகள் என்னிடம் இருந்தும், காதல் கதைகள் நான் சந்தித்த மனிதர்களிடம் இருந்து எடுக்கப்பட்டவை..
எவ்வயதிலும் வரும் முதல் காதல், எப்போதுமே சிறப்பு - என்பதே இந்தக் கவிதையின் உள் நோக்கம்.. வேறு எந்த எண்ணத்தையும், நீங்கள் உணர்ந்தாள் அது தற்செயலே..
என் பாடப் புத்தகத்தில் நீ வைத்த
வண்ண மயில் இறகுகள்
நமக்கான காதலை வளர்த்தன
வீட்டுப் பாடம் செய்யாத
நீ வாங்கிய பிரம்படிகளை
என் கண்ணீர்த் துளிகளில் தாங்கிக் கொண்டேன்
எட்டாம் வகுப்பு முடிந்து வந்த விடுமுறையில்
புடவை கூட கட்டத் தெரியாத உன்னை
உன் முறை மாமனுக்கு கட்டிவைத்தார்கள்
யாரிடம் சொல்லி அழ?
உன் பாலியல் திருமணம் வைத்தது
என் முதல் காதலுக்கு ஒரு முற்றுப்புள்ளி
கி.பி 1999 - பதினொன்றாம் வகுப்பு 'ஆ' பிரிவு
கணக்குப் பாட முதல் மதிப்பெண்ணுக்காக
உன்னிடம் ஒரு போட்டி,
இருவரையும் காதல் வென்றது
நம் இரட்டை மிதிவண்டிகளும்
சென்றது என்னவோ
உன் வீடு எனும் ஒற்றை திசையில்
மருத்துவம் படிக்க நீயும்
பொறியியல் படிக்க நானும் பிரிந்தோம்,
இறுதியில் பிரிந்தே விட்டோம்
யாரிடம் சொல்லி அழ?
நமக்கிடையே இருந்த தொலைவு வைத்தது
என் முதல் காதலுக்கு ஒரு முற்றுப்புள்ளி
கி.பி 2003 - பொறியியல் முதலாம் ஆண்டு
வகுப்பின் முப்பது மங்கைகளில்
உனைப் பார்த்துதான் எழுத ஆரம்பித்தேன்
என் முதல் காதல் கவிதைகளை
உன்னோடு சேர்ந்து வாழ்ந்த
கல்லூரி ஆண்டு விழா நாட்கள் எல்லாம்
என் காதல் தேச திருவிழா நாட்கள்
நான்கு வருட ஒரு தலைக் காதலுக்கு
கல்லூரியின் இறுதி நாள் மட்டும்
தைரியம் வந்துவிடுமா என்ன?
யாரிடம் சொல்லி அழ?
வேலை கிடைக்காத என் படிப்பு வைத்தது
என் முதல் காதலுக்கு ஒரு முற்றுப்புள்ளி
கி.பி 2006 - கணினிப் பொறியாளன்
வேலைக்கான பயிற்சி நாட்களில்
நான் கற்றுக் கொண்டதென்னவோ
உன்னைப் பற்றித்தான்
அலுவலகத்தின் சிற்றுண்டியிலும் பேருந்திலும்
என் இருக்கையின் பாதியை நீ பறித்தபோது
முழுதுமாய் என்னை இழந்தேன் உன்னிடம்
சாதி வானவில்லை தேசியச் சின்னமாய்
வைத்திருக்கும் உன் தகப்பனிடம்
நிறமிழந்து போனது என் காதல்
யாரிடம் சொல்லி அழ?
உன் சாதியின் முதல் அயல்நாட்டு மாப்பிள்ளை ஒருத்தன் வைத்தான்
என் முதல் காதலுக்கு ஒரு முற்றுப்புள்ளி
கி.பி 2008 - அயல்நாட்டு கணிப்பொறி வாசி
அயல்நாட்டு தேச அழகிகளின் நடுவிலும்
நீதானடி எப்போதும் பேரழகி,
உன்னை புகைப்படம் எடுத்தே, நான் கலைஞனும் ஆனேன்
இந்த தேசத்தில் எல்லா ஊர்களின்
எல்லாக் காதல் கல்வெட்டுக்களிலும்
நம்மையும் சேர்த்து செதுக்கினோம்
ஒப்பந்த ஊழியன் நான்
தேசக் குடியுரிமை பெற்றவள் நீ,
என் காதலில் முதல் விரிசல் இங்கேதான்
யாரிடம் சொல்லி அழ?
ஒப்பந்தம் முடிந்து நான் ஊருக்குப் போகும் விதி வைத்தது,
என் முதல் காதலுக்கு ஒரு முற்றுப்புள்ளி
கி.பி 2010 - முழு நேரக் கவிஞன்
என் கவிதைகளை நீயும்
கவிதை உன்னை நானும்
வாசித்துப் பழகிய பொன் நாட்கள் அவை
என் எல்லாக் கவிதைகளும் உன்னையே வரைந்தன
என் எல்லா ஓவியங்களும் உன்னையே பாடின
என் நீயும், உன் நானுமாய் எல்லாமே
கவிதைகள் சொல்லிய என் காதலை எல்லாம்,
உன் மௌனம் என்னிடமே
திருப்பிக் கொடுத்துவிட்டது
யாரிடம் சொல்லி அழ?
உன் மெளனத்திடம் தோற்றுப்போன என் கவிதைகள் வைத்தன,
என் முதல் காதலுக்கு ஒரு முற்றுப்புள்ளி
------------------------
எல்லா முதல் காதலும் இனிக்கத்தான் செய்கின்றன ...
எல்லா முதல் காதலும் வலிக்கத்தான் செய்கின்றன...
முதல் காதலிகள் எல்லாம்
இரண்டாம் முறையாக அம்மாக்கள் ஆகிவிட்டார்கள்,
ஆனால் எனக்கும் மட்டும்,
அவர்கள் இன்னும் முதல் காதலியாய்த்தான் இருக்கிறார்கள்
எந்தக் கவிதை
எந்தக் காதலியைப் பற்றிப் பாடுகிறது?
என் பேனாவோடு நின்று போகட்டும் அந்த ரகசியம்...
வழக்கம் போல காலம் பரிசளிக்கும்
அடுத்த முதல் காதலுக்காக
என்னுடைய அடுத்த காத்திருப்பு......
வரும் தேவதையை வரவேற்க, வாயிற்க் காவலனாய் என் பேனா ...
No comments:
Post a Comment