January 25, 2012

நானும் ஒரு அமெரிக்க மாப்பிள்ளை

பல ஆண்டுகளுக்கு முன்:

மாமன் மகள், கல்லூரித் தோழி, ஒரு தலைக் காதலி
இப்படி எல்லோருமே
அமெரிக்க மாப்பிள்ளையை மணந்தும்
சொந்தங்களை துறந்தும் போன காலம் அது.

வேலைக்கும் கௌரவத்திற்கும் மட்டுமல்ல
திருமணத்திற்கும் கூட
அமெரிக்கா
ஒரு அடிப்படைத் தகுதியாய்ப் போயிருந்தது

எல்லோருக்கும் போல
என் வாழ்க்கை நூலிலும் வந்தது
அமெரிக்கப் பயணம் எனும்
சில வண்ணப் பக்கங்கள்

ஆரம்பித்தது என் பெண் பார்க்கும் படலம்.
ஜாதகம் எனும் கடிவாளத்தில்
எனக்கான பெண்களின் பாதை
பரிதாமாய் குறுகிப் போனது

சில ஆண்டுகளுக்கு முன்:

விவசாயமும் புஞ்சை நிலத்தோடும்

வந்த ஒரு பெண்ணுக்கு,

வீட்டு மாப்பிள்ளைதான் வேண்டுமாம்.

என் சொந்த வீடே
வருட தொலைவில் இருக்கும்போது,
அவளுக்கு மட்டும் நான்
எப்படி வீட்டு மாப்பிள்ளை ஆகமுடியும்?

சில மாதங்களுக்கு முன்:

எங்க ஊர் ஆசிரியரின் ஒரே பெண்ணுக்கு
அவளின் அப்பா போல்
அரசாங்க மாப்பிள்ளைதான் வேண்டுமாம்

கல்விக்கடனை இன்னமும் மீதம் வைத்திருக்கும்
அரசாங்கக் கடனாளி நான்,
எங்கிருந்து அரசாங்க ஊழியன் ஆவது?

சில வாரங்களுக்கு முன்:

நகரத்தில் மருத்துவம் படித்த பெண் ஒருத்திக்கு
வருடத்தில் ஒரு மாதம் விடுமுறை
எடுக்கும் மாப்பிள்ளைதான் வேண்டுமாம்.

வாங்கிய வேலைக் கடனுக்கு,
சனிக்கிழமைகளை வட்டியாய்க் கட்டிக் கொண்டிருக்கும்
நான் எங்கு போவது ஒரு மாத விடுமுறைக்கு?

சில நாட்களுக்கு முன்:

அமெரிக்காவின் எதோ ஒரு மாகாணத்தில்
வசிக்கும் எனது ஊர் மங்கை ஒருத்திக்கு
நிரந்தரக் குடியுரிமை மாப்பிள்ளைதான் வேண்டுமாம்

ஊழிய ஒப்பந்தத்தோடு ஓடும்
என் வாழ்கையில்
உன்னோடு எப்படி உல்லாசப் பயணம் போவது?

சில மணிகளுக்கு முன்:

புதிதாய்த் திருமணமான தோழனிடமிருந்து
வந்திருக்கிறது ஒரு மின்னஞ்சல்
கூடவே அவனின் தேனிலவுப் புகைப்படங்களும்

அமெரிக்கா வாசம் ஒரு முனையிலும்
ஜாதகக் கட்டங்கள் மறு முனையிலும்
நடுவே மாட்டிக் கொண்ட பம்பரமாய் நான்

சில நிமிடங்களுக்கு முன்:

மனதில் இருந்த சில வருடத்தின் மொத்த கவலைகளை
ஒரு சுருட்டின் புகையில் கரைத்துவிட்டு
அடுத்தக் கவலைக்கு தயாராக ஆரம்பித்து விட்டேன்

ஜாதக வைக்கோல் போரில்
தொலைத்த திருமண ஊசியைத் தேடும்
அமெரிக்கா மாப்பிள்ளைகளில்
ஆயிரத்தில் ஒருவனாய் நான்..

No comments:

Post a Comment