February 16, 2012

இந்த ஒரு முறை மட்டும் மன்னித்துக் கொள்ளேன்

வழக்கம் போல அலுவலகத்திலிருந்து
இன்றும் நான் அரை மணி நேரம் தாமதம்
இந்த ஒரு முறை மட்டும் மன்னித்துக் கொள்ளேன்

கடைசியாக புகைத்த சுருட்டின் வாசம்
இன்னும் என் சுற்றமெங்கும்
இந்த ஒரு முறை மட்டும் மன்னித்துக் கொள்ளேன்

நீ தலை திருப்பும் ஒற்றை நொடிக்குள்
என் மூன்று விரல்களின் நகங்கள் கடிபடுகின்றன
இந்த ஒரு முறை மட்டும் மன்னித்துக் கொள்ளேன்

உனக்கு பிடித்த பாடலின் ஒளிபரப்பின் நடுவே
எனக்கு பிடித்த ஒரு தொலைக்காட்சிக்கு ஒரு சிறு தாவல்
இந்த ஒரு முறை மட்டும் மன்னித்துக் கொள்ளேன்

போன முத்தத்தின் போது வெட்டச் சொன்ன மீசை முடிகள்
இந்த முத்தத்தின் போதும் இடைஞ்சலாய்
இந்த ஒரு முறை மட்டும் மன்னித்துக் கொள்ளேன்

மழை வரும் என நீ எச்சரித்தும்
குடையை நிராகரித்து, மழையில் நனைந்து விட்டேன்
இந்த ஒரு முறை மட்டும் மன்னித்துக் கொள்ளேன்

உன் விரத வெள்ளிகிழமைகளில்
உன் வாசம் பிடிக்காமல் இருக்க முடிவதில்லை
இந்த ஒரு முறை மட்டும் மன்னித்துக் கொள்ளேன்

நம் மகனுக்கு மட்டும் நான்கு முத்தங்களா
இன்னும் போகவில்லை என் பொறாமைகள்
இந்த ஒரு முறை மட்டும் மன்னித்துக் கொள்ளேன்

அம்மன் சன்னதிகளிலும்
அம்மனுக்கு பதிலாய் உன் முகம்தான் எனக்கு தெய்வமாய்
இந்த ஒரு முறை மட்டும் மன்னித்துக் கொள்ளேன்

குளிராத இரவுகளிலும் நான் போர்த்திக் கொள்ள
உன் புடவைகள் மீதுதான் முதல் கண்
இந்த ஒரு முறை மட்டும் மன்னித்துக் கொள்ளேன்

சிறு குழந்தை போல இன்னும்,
ஆழ்ந்த தூக்கத்தில் உன் பெயரை உளறிக் கொண்டு
இந்த ஒரு முறை மட்டும் மன்னித்துக் கொள்ளேன்

தொடா தொலைவில் நீ இருந்தும்,
என் கள்ளப் பார்வைகளை நீ கண்டு கொள்கிறாய்
இந்த ஒரு முறை மட்டும் மன்னித்துக் கொள்ளேன்

உன் மருதாணிக் கரங்கள் சிவக்கும் முன்னே,
என் ஆடைகளில் உன் மருதாணி ரேகைகள்
இந்த ஒரு முறை மட்டும் மன்னித்துக் கொள்ளேன்

மன்னிக்க நீயும், உன் காதலும் இருக்கையில்
நான் இப்படித்தான், இப்போதும் எப்போதும்

- இதை வாசித்தபின் என் செவி நுனி, உன் விரல் நுனிகள்
வழக்கம்போல இந்த ஒரு முறை மட்டும் மன்னித்துக் கொள்ளேன்.

No comments:

Post a Comment