நீ விரதங்கள் இருக்கவும், நான் பட்டினி கிடக்கவும்
உனக்கு மட்டும் எப்படிக் கிடைக்கிறது
ஒவ்வொரு மாதத்திலும், ஒரு நாள்?
நீர் சொட்டும் கூந்தலோடு நீயும்,
வறண்டு போன கன்னங்களோடு நானும்
உன் முத்தங்களும், இன்று விரதமா?
உன் தொலைபேசி வானொலியில்
இன்று 'என் விருப்பப் பாடல்கள்' இல்லை.
உன் கொஞ்சல்களும், இன்று விரதமா?
என் தீண்டல் எனும் நிலவுக்கு
உன் வானில் இன்று அமாவாசை.
உன் வெட்கங்களும், இன்று விரதமா?
உன் விரதமெனும் சிறையில்
எனக்கு, ஒரு நாள் ஆயுள் தண்டனை.
உன் காதலும், இன்று விரதமா?
உன்னில் தஞ்சம் புகத் துடிக்கும்
முகவரி இழந்த ஒரு அகதி நான்,
உன் தேசமும், இன்று விரதமா?
உன் மலர்களோடு சேராமல்
மனமிழந்து போயிருக்கிறது என் காதல் நார்கள்
உன் மலர்களும், இன்று விரதமா?
நம் வீட்டு சமையலறையிலிருந்து
இன்று நான் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறேன்
உன் வாசமும், இன்று விரதமா?
திருமணத்திற்குப் பிறகும்
இங்கே ஒரு 'ஒரு தலைக் காதல்'.
உன் விழிகளும், இன்று விரதமா?
உன் கரங்களின் எல்லைக்குள் நான் இருந்தும்
ஏனோ நான் அனாதையாய்.
உன் அணைப்புகளும், இன்று விரதமா?
இறைவனிடம் வரங்கள் வேண்டி நீ,
நீ கொடுத்த சாபங்களோடு நான்
இன்னுமா பொழுது விடியவில்லை?
No comments:
Post a Comment