பட்டுப் புடவையில் ஒரு தேவதை
வானவில்லாய் அவள் வெட்கங்கள்
உலகின் முதல் அதிர்ஷ்டக்காரனாய் நான்,
எப்போது சொல்வார்கள் 'கெட்டி மேளம், கெட்டி மேளம்'?
நாணம் நிறைந்த கண்களோடு நீ,
உன் அழகைக் களவாடும் கண்களோடு நான்,
வாழ்த்துச் சொல்லும் கண்களோடு சொந்தங்கள்,
எப்போது சொல்வார்கள் 'கெட்டி மேளம், கெட்டி மேளம்'?
கைக்கெட்டும் தூரத்தில் மாங்கல்யம்,
கண்ணெட்டும் தூரமெங்கும் சொந்தங்கள்
என் மனம் மட்டும் ஒரு ஆவலில்
எப்போது சொல்வார்கள் 'கெட்டி மேளம், கெட்டி மேளம்'?
ஊருக்குச் சாட்சியாய் அக்னி,
நமக்குச் சாட்சியாய் நம் காதல்
இப்போது மலரப்போகிறது நம் மண மலர்.
எப்போது சொல்வார்கள் 'கெட்டி மேளம், கெட்டி மேளம்'?
ஏதோ மொழியில் அர்ச்சகரின் மந்திரங்கள்.
நான் வேண்டும் மந்திரம் மட்டும்
அவருக்கு கேட்கவில்லையோ?
எப்போது சொல்வார்கள் 'கெட்டி மேளம், கெட்டி மேளம்'?
உன் வெட்கங்களை என்னிடமும்
என் தவிப்புகளை உன்னிடமும்
உரசலில் பரிமாறிக் கொள்கின்றன நம் பட்டாடைகள்
எப்போது சொல்வார்கள் 'கெட்டி மேளம், கெட்டி மேளம்'?
கண்கள் திறக்கப்படுகின்றன
நம் காதல் செதுக்கிய சிலைக்கு,
'தேவதை நீ' இப்போது 'என் தேவதை'
எனக்கும் கேட்கிறது 'கெட்டி மேளம், கெட்டி மேளம்'
சொந்தங்கள் ஒரு புறம், காதல் ஒரு புறம்
காதல் தேவதைகள் ஒரு புறம்
நம் மீது பொழிகிறது மலர் மழை.
எனக்கும் கேட்கிறது 'கெட்டி மேளம், கெட்டி மேளம்'
காதலும் நானும் மோட்சம் கண்டோம்,
மாங்கல்யமும் மெட்டியுமாய்
என் சிவந்த சொர்க்கம் நீ,
மீண்டும் சொல்வார்களா 'கெட்டி மேளம், கெட்டி மேளம்'?
உன் சம்மதம், இந்த கெட்டிமேளச்சத்தம்
என் இரண்டு வரங்கள்
என் ஒற்றைத் தவத்திற்கு
வாழிய, என் தேவதையே
No comments:
Post a Comment