March 18, 2012

நானும் காதலிக்க ஆசைப்படுகிறேன் ...

முன்னொரு நாளின் மாலை நேரம்:

என கள்ளப்பார்வை என ஆரம்பித்து,
உன் காதல் பார்வை என முடியும்
நிறைய கண் ஜாடைகளுக்காகவே
நானும் காதலிக்க ஆசைப்படுகிறேன்

அன்புள்ள என ஆரம்பித்து,
பிரியமுடன் நான் என் முடிக்கும்
நிறைய மடல்களுக்காகவே
நானும் காதலிக்க ஆசைப்படுகிறேன்

அடியே என ஆரம்பித்து,
முத்த வரிகளோடு முடியும்
நிறைய தொலைபேசிச் சங்கீதங்களுக்காகவே
நானும் காதலிக்க ஆசைப்படுகிறேன்

விரல் நுனிகளில் ஆரம்பித்து
கைரேகைகளோடு முடியும்
நிறைய சந்திப்புகளுக்காகவே
நானும் காதலிக்க ஆசைப்படுகிறேன்

என் வளர்பிறை என ஆரம்பித்து,
உன் முழுமதி என முடியும்
நிறைய நிலவுகளுக்காகவே
நானும் காதலிக்க ஆசைப்படுகிறேன்

என் பாதை என ஆரம்பித்து,
நம் பாதை என முடியும்
நிறைய கால்தட ஓவியங்களுக்காகவே
நானும் காதலிக்க ஆசைப்படுகிறேன்

என் கெஞ்சல் என ஆரம்பித்து,
உன் நாணம் என முடியும்
நிறைய முத்தங்களுக்காகவே
நானும் காதலிக்க ஆசைப்படுகிறேன்

நீ விடுப்பு எடுக்கிறாய் என ஆரம்பித்து,
நீ திரும்ப வருகிறாய் என முடியும்
நிறைய பிரிவு வலிகளுக்காகவே
நானும் காதலிக்க ஆசைப்படுகிறேன்

உன் பெயர் என ஆரம்பித்து,
நம் மணநாள் என முடியும்
நிறைய காவியங்களுக்காகவே
நானும் காதலிக்க ஆசைப்படுகிறேன்

என் தாய் என ஆரம்பித்து,
எனக்கும் தாய் என முடியும்
நிறைய மழலைகளுக்காகவே
நானும் காதலிக்க ஆசைப்படுகிறேன்

பின்னொரு நாளின் மாலை நேரம்:

மாங்கல்யத்தில் ஆரம்பித்து
நரைப் பொழுதிலும் தொடரும்
உன் காதல் பிம்பங்களை
இன்னும் இன்னும் நிறைய காதலிக்க ஆசைப்படுகிறேன்

No comments:

Post a Comment