May 31, 2012

முற்பாதியில் உன்னை நெருங்கச் சொல்லியும்
பிற்பாதியில் விடியலை தள்ளிப்போகச் சொல்லியும்
போராட்டம் நடத்துகின்றன என் நிமிடங்கள்
- இன்னும் நீளட்டும் இந்த இரவு
என் முத்தங்கள் எல்லாம்
உன் வெப்ப மூச்சில் எரிந்து போகின்றன
- இன்னும் நீளட்டும் இந்த இரவு
மழலை வரையும் ஓவியமாய்
உன்னைப் பற்றி எப்படி எழுதினாலும்
அழகாகிறது என் மொழி
என் ஜன்னலில் ஒரு பக்கம்
விழும் உன் நிழலின்
மறுபக்க நிஜம் என் வரிகள்

May 23, 2012

இந்த நிமிடமே இறக்கவும் தயார்
உனக்கு மகளாய்ப் பிறக்கும்
வரமொன்று கிடைத்தால்.
- நீ கணவன் எனும் ஒரு கள்ளன்
என் முத்தம் பறிபோன சோகம் உனக்கு,
உன் தோள் பறிபோன சோகம் எனக்கு.
இரண்டையும் பறித்ததில் புன்னகையோடு நம் மகன்
- நீ கணவன் எனும் ஒரு கள்ளன்
ஒருபுறம் உன் கள்ளப் பார்வை
மறுபுறம் பெண்மைக்கான நாணம்
நடுவில் பரிதாபமாய் நான்.
- நீ கணவன் எனும் ஒரு கள்ளன்

May 22, 2012

உன் மூச்சுக் காற்றில்
பற்றிக் கொண்டு எரிகின்றன
என் வனத்தின் பச்சை மரங்கள்
- நீ கணவன் எனும் ஒரு கள்ளன்
ஓவியம் மீது
ஓவியங்கள் வரையும்
ஒரே ஓவியன் நீ தான்
- நீ கணவன் எனும் ஒரு கள்ளன்
உன் கெஞ்சலில் ஆரம்பித்து
நம் கெஞ்சல் வழியே பயணித்து
என் கெஞ்சலில் முடிகின்றன நம் இரவுகள்
- நீ கணவன் எனும் ஒரு கள்ளன்
ஒட்டுமொத்த நரம்புகள் என் பக்கமிருந்தும்
என் கழுத்து நரம்பு மட்டும், உன் பக்கம் சாய்வதால்
நம் போர்களில் நான் தோற்றேதான் போகின்றேன்
- நீ கணவன் எனும் ஒரு கள்ளன்
முத்தமெனும் முகமூடி அணிந்து
மொத்தமாய் கொள்ளை அடிப்பவன் நீ.
- நீ கணவன் எனும் ஒரு கள்ளன்

May 21, 2012

மழலை வரையும்
முதல் வண்ண ஓவியமாய்
இங்கே உனக்கான என் காதல்.
- இது காதல் எனும் வண்ணத்துப்பூச்சி
என் தலையணையெங்கும்
வண்ணமாய் முத்தங்கள்
என் இரவெங்கும்
வண்ணமாய் முழுமதி நிலவுகள்.
- இது காதல் எனும் வண்ணத்துப்பூச்சி
வானவில் எனக்கு
உன் இறகுகளின் வண்ணங்களின் மீது
மலர்ந்திருக்கிறது ஒரு நேசம்
- இது காதல் எனும் வண்ணத்துப்பூச்சி

May 17, 2012

அமைதியாகிப் போன தெருவின்
ஒரு முனையில் இசைக்கும் வானொலி போல்,
நீ இல்லாத இரவுகளில்
நம் பழைய நினைவுகளை இசைக்கிறது என் வானொலி
- இது நீ இல்லாத இன்னொரு இரவு

நம் கொல்லைப்புற மல்லிகைகளை
பக்கத்துக்கு வீட்டு காகிதப் பூக்கள்
ஏளனம் செய்கின்றன
- இது நீ இல்லாத இன்னொரு இரவு

May 16, 2012

தொலைந்து போயிருக்கின்றன
என் இரவு நேர வானவில்கள்
- இது நீ இல்லாத இன்னொரு இரவு
படுக்கையின் ஒரு முனையில்
மடித்து வைத்த உன் புடவை,
இன்னொரு முனையில்
மடிந்து போகும் என் நிமிஷங்கள்.
- இது நீ இல்லாத இன்னொரு இரவு

May 14, 2012

உன் சிவக்கும் வெட்கங்கள்
இல்லாத இரவுகளின் நெருப்பில்,
சிவந்து போயின என் விழிகள்
- இது நீ இல்லாத இன்னொரு இரவு
ஒரு வினாடியின் நீளம் எவ்வளவு?
என் நேற்றைய இரவின் பதில்:
உன் கன்னத்திற்கும், உதட்டிற்கும் இருக்கும் தூரம்
என் இன்றைய இரவின் பதில்:
ஓராயிரம் ஊசிகள் என் அங்கமெங்கும் குத்த ஆகும் நேரம்
- இது நீ இல்லாத இன்னொரு இரவு
இறந்தும் பிறக்கிறேன்
நீ இருக்கும் இரவுகளில்,
பிறந்தும் இறக்கிறேன்
நீ இல்லா இரவுகளில்
- இது நீ இல்லாத இன்னொரு இரவு
நீண்ட பகல்களில்
நான் சேகரிக்கும் உயிர்த் துளிகள்,
குறுகிய இரவுகளில்
வெகு விரைவாய் உலர்ந்து போகின்றன
- இது நீ இல்லாத இன்னொரு இரவு
தனிமை வெப்பம் ஒருபுறம்
என் மூச்சுக் காற்றின் வெப்பம் மறுபுறம்
இவற்றின் இடையே நான்
- இது நீ இல்லாத இன்னொரு இரவு
மலர்கள் எல்லாம் முள்ளாகப் போகட்டும்,
நம் வீட்டு மலர்ப் படுக்கைக்கு
யார் கொடுத்தார் இந்த சாபத்தை?
- இது நீ இல்லாத இன்னொரு இரவு
ஆறு நான் ஓடும் வழியில்
பூத்திருக்கும் நாணல் நீ,
வளைந்து போகிறேன் நான்
- இது காதல் எனும் மன நடுக்கம்

May 06, 2012

நீ அருகில் வரும்போது மட்டும்,
என் மொழி தேசத்தில்
நான் அனாதையாக்கப்படுகின்றேன்
- இது காதல் எனும் மன நடுக்கம்
உனைக் காணுகையில் மட்டும்
என் நாவிற்கும் என் வார்த்தைகளுக்கும்
ஏனோ நடக்கிறது ஒரு உலக யுத்தம்
- இது காதல் எனும் மன நடுக்கம்
இன்னொரு முறை எனைக் கடந்து போகாதே,
மீண்டும் உறைந்து போக
என் உடம்பில் செல்கள்  ஏதும் மீதமில்லை
- இது காதல் எனும் மன நடுக்கம்
உன் மின்சாரக் கண்களை
நேராய்ச் சந்திக்கையில் பாதி உயிரும்,
என் வார்த்தைகள் பிறப்பதற்குள்
மீதி உயிரும் போய்விடுகிறது.
பிறகு எப்படி என் காதலை உரைப்பது?
- இது காதல் எனும் மன நடுக்கம்

May 05, 2012

உன்னிடம் பேசும்போது மட்டும்
என் முக்கால்வாசி காதல் சொற்கள்
நாவை அடைவதற்குள்ளேயே மடிந்து போகின்றன
- இது காதல் எனும் மன நடுக்கம்

May 03, 2012

எந்த நேரத்தில் மலருகிறாய் நீ?
நாள் முழுதும் உன்னிடம் வீசுகிறது
வெட்க மலர்களின் வாசம்

May 01, 2012

என் விழிகளும், உதடுகளும் தான்
தவங்கள் இருக்கின்றன,
நீயோ என் கன்னங்களுக்கு
முத்த வரங்கள் தந்து போகிறாய்.
இது வரமா இல்லை சாபமா?
குழந்தை பக்தன் என்னிடம்
தீமிதி காணிக்கை கேட்கிறது,
இந்த காதல் எனும் தெய்வம்
- இது காதல் எனும் மன நடுக்கம்
எதிர் திசையில் ஓடும்
பயம் எனும் நிமிட முள்ளிடம்
போராட்டம் நடத்துகிறது,
என் காதல் எனும் மணி முள்
- இது காதல் எனும் மன நடுக்கம்