June 12, 2012

இந்த நிமிடமே, என்னை மணந்து கொள்ளேன் !!!

எங்கிருந்து வந்தது என் பெண்மைக்குத் தைரியம்?
முதல் வார்த்தையாய் உன் பெயர்தான்.
நரம்புகள் வெடிக்கின்றன, அணுக்கள் உடைகின்றன

உனக்குக் கேட்டிருந்தாலும் பரவாயில்லை
இன்னொரு முறை சொல்கிறேன் உன் பெயரை,
ரத்தத்தில் இனிப்பு ஆறு ஊற்றெடுக்கிறது

என் பெயர் இவ்வளவு அழகா?
இன்னொரு முறை சொல்லேனடா
என் பெயரோடு, உன் பெயர் இணைகையில்
மீண்டும் ஒரு முறை மலர்ந்து போகிறேன்

வெட்கம், நாணமும் உடைந்த அணைகளாய்,
காட்டாற்றில் மாட்டிக் கொண்ட
மங்கை நான் என்ன செய்ய?

எத்தனை ஜென்மத்தில் எத்தனை தவங்கள் செய்தேனோ
'நான் உன்னைக் காதலிக்கிறேன்'
என்று நீ கூறக் கேட்க

இமைகள் மூடுகிறேன்
இதழ்கள் திறக்கிறேன் சம்மதத்திற்காக
உன் மார்பில் சாய மனம் ஏங்குகிறது

எந்த தெய்வம் தந்தது நீ எனும் வரத்தை?
எந்த நாள் ஆனது, நீ எனும் முகூர்த்த நாளாய்?
எந்த நான் ஆனேன், உனக்கு மனைவியாய்?

ஒற்றை முத்தம் கேட்கச் சொல்கின்றன
என் உடம்பின் ஆயிரமாயிரம் அணுக்கள்,
அவைகளின் ஆசைகளை என் வெட்கம் தோற்கடிக்கிறது

இந்தக் காதல் இப்படித்தான்,
குழந்தையைக் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுகிறது
தூரத்தில் நீ இருப்பதை நீ மறக்க
கண்களை மூடிக் கொள்கிறேன், அப்போதுதான் நீ அருகில் வருவாய்

பசலை நோயின் அறிகுறி ஆரம்பிக்கிறது
இந்த நிமிடமே என்னை மணந்து கொள்ளேன்
வேறு என்ன எனக்கு வேண்டும்?

No comments:

Post a Comment