June 11, 2012

முதல் தொண்ணூறு நிமிடங்கள்

நாவில் நடக்கிறது ஒரு நிலநடுக்கம்,
வார்த்தைகளுக்குள் ஒரு போராட்டம்
இதயத்தில் நடக்கிறது ஒரு ஓட்டப்பந்தயம்

நீயாவது தொடங்கேனடி,
என் பெயர் சொல்லி அழைக்கிறாய்,
தேனாய் இனிக்கிறது என் பெயர்
இன்னொரு முறை என் பெயர் சொல்லேனடி

பதிலுக்கு உன் பெயர் சொல்கிறேன்,
இன்னும் தேனாய் இனிக்கிறது
எவ்வளவு நேரம் நடக்கும் இந்த பெயர் மாற்றம்?

சொற்கள் விழுகின்றன, வாக்கியங்கள் நிரம்பவில்லை
வாக்கியங்கள் விழுகின்றன, சொற்கள் நிரம்பவில்லை
இரண்டும் விழுகின்றன, நாம் நிரம்பவில்லை

முப்பது நிமிடங்களில் முன்னூறு முறை இறந்துவிட்டேன்
ஒப்புக் கொள்கிறேன்,
காதல் எனும் நடுக்கம் பெற்றவர்களில் நானும் ஒருவன்

ஆண் மகனுக்கும் வெட்கம் வருதடி
எப்படியாவது சொல்லிவிட வேண்டும்
'நானும் உன்னைக் காதலிக்கிறேன்' என்று

அறுபதாவது நிமிடத்தில்
நாவிற்கு வந்துவிட்டது தைரியம்
உரக்கச் சொல்கிறேன் 'என் காதலை'

காதலைச் சொல்லிவிட்ட குதூகலம்,
நீயும் சொல்லிவிட்டால் போதுமடி
மோட்சம் பெற்றுவிடுவேன்

மோட்சமடைகிறேன் நான்.
வெட்கம், காதல் எனும்
இரு மொழிகளில் சம்மதம் சொல்கிறாய்

தவங்கள் எல்லாம் இப்போது வரங்கள்
கனவுகள் எல்லாம் இப்போது நிஜங்கள்
நான் எல்லாம் இப்போது நீ
நீ எல்லாம் இப்போது நான்

தொண்ணூறாவது நிமிடம்
காதல் மேகங்கள் பொழிய ஆரம்பித்து விட்டன,
இனியெல்லாம் காதல் மழையே

புதுக் காவியத்தை வரைய ஆரம்பிக்கிறேன்
இந்த தொண்ணூறு நிமிடங்கள் எனும்
வண்ணங்களைக் கொண்டு

No comments:

Post a Comment