June 26, 2012

இடைவெளிகள் எல்லாம், வெறும் இடைவெளிகள் தான்

அருகில் இருக்கும் தகப்பன் வீட்டிற்கு
தொலைவாய்ப் போன மனைவிக்கு,
நம் இல்லம் எனும் சொர்க்கத்தில் இருந்து
நீ எனும் சொர்க்கத்தை பிரிந்திருக்கும் கணவனின் இன்னொருமொரு காதல் கடிதம்......

என் கவிதையின் சொற்களுக்கும்
சொற்களின் உள்ளே புதைந்து இருக்கும் காதலுக்கும்
இருக்கும் இடைவெளிதான்,
இப்போது உனக்கும் எனக்கும் இருக்கும் இடைவெளி

உன்னைப் பின்தொடரும் என் பாதத்திற்கும்,
என்னை வழிநடத்தும் உன் பாதத்திற்கும்
இருக்கும் இடைவெளிதான்,
இப்போது உனக்கும் எனக்கும் இருக்கும் இடைவெளி

சம்மதம் சொல்லும் உன் விழிகளுக்கும்
சம்மதம் சொல்லத்துடிக்கும் உன் இதழ்களுக்கும்
இருக்கும் இடைவெளிதான்,
இப்போது உனக்கும் எனக்கும் இருக்கும் இடைவெளி

பாதை சேரும் கைரேகைகளுக்கும்
பாதை விலகும் நம் திசைகளுக்கும்
இருக்கும் இடைவெளிதான்,
இப்போது உனக்கும் எனக்கும் இருக்கும் இடைவெளி

எனக்கான உன் நாணத்திற்கும்
உனக்கான என் முத்தத்திற்கும்
இருக்கும் இடைவெளிதான்,
இப்போது உனக்கும் எனக்கும் இருக்கும் இடைவெளி

கணவன் என் கெஞ்சலுக்கும்
மனைவி உன் கொஞ்சலுக்கும்
இருக்கும் இடைவெளிதான்,
இப்போது உனக்கும் எனக்கும் இருக்கும் இடைவெளி

என் மென் இரவுக்கும்
உன் பொன் விடியலுக்கும்
இருக்கும் இடைவெளிதான்,
இப்போது உனக்கும் எனக்கும் இருக்கும் இடைவெளி

நம் மகனுக்கான உன் முத்தத்திற்கும்
உன் முத்ததிற்க்கான என் ஏக்கத்திற்கும்
இருக்கும் இடைவெளிதான்,
இப்போது உனக்கும் எனக்கும் இருக்கும் இடைவெளி

உன் புடவையின் தலைப்பிற்கும்
மழையில் நனையும் என் நிமிடங்களுக்கும்
இருக்கும் இடைவெளிதான்,
இப்போது உனக்கும் எனக்கும் இருக்கும் இடைவெளி

இடைவெளிகள் எல்லாம்
வெறும் இடைவெளிகள்தான்...
உனக்கான என் காதலும், எனக்கான உன் காதலும்
நமக்காய் இருக்கும் வரையில்

ஆயிரம் முத்தங்களுடன்,
உன் நானே...

No comments:

Post a Comment