September 18, 2012

தகப்பனாகிய நான்...


காலை 7.00 மணி:

நேரம் தேடும் முன்னே
விழிகள் தேடுகின்றன நம் மகனை,
புதிதாய் மலர்ந்த மலராய் அவன்
மலரின் இதழாய் அவனின் புன்னகை

முத்தத்திற்கும், அவனுக்கும் கேட்காமலே
அவனுக்கு சில முத்தங்கள் இடுகின்றேன்
அவனின் மென் மேனியில்
மெதுவாய்க் கரைந்து போகின்றன என் முத்தங்கள்

அடுத்து உன் நெற்றியையும், கன்னங்களையும்
மெதுவாய் ஈரம் செய்கின்றேன்,
உன் இதழ்களின் மீது பார்வை போகிறது,
வேண்டாம் மனமே, காலையிலே கதை கெட்டுவிடும்

காலை 9.00 மணி:

சமையலறையில் இருவருக்குமாய்
ஒரு உணவை பிறப்பிக்கிறேன்,
தேநீரைச் சுவைக்கையிலே
ஞாபகம் வருகின்றன உன் தேன் இதழ்கள்

மெதுவாய் படுக்கையறை வருகிறேன்,
உன் அணைப்பிலே
ஒரு சொர்க்கம் கண்டு கொண்டிருக்கிறான்
நம் அரண்மனை இளவரசன்

கர்ணன் பேரன் என்னிடம், ஏது பஞ்சம்?
மீண்டும் முத்தங்கள்,
முதலில் அவனுக்கு, பின்பு உனக்கு
மீண்டும் அவனுக்கு, மீண்டும் உனக்கு ... நிறுத்த மனமில்லை

முற்பகல் 11.00 மணி:

காத்திருக்கிறேன் உன் தொலைபேசிக்காக
வழக்கம் போல, நானே முந்திக் கொள்கிறேன்
'என்ன செய்கிறான், நம் அவன்?'
அதே பதில் உன்னிடம் 'அம்மாவின் காதலனைப் பார்க்கணுமாம்'

அதே காதல் கேள்வி என்னிடம்
'என்ன பேசிக் கொண்டீர்கள் இரண்டு பேரும்?'
அதே காதல் பதில் உன்னிடம்
'நம்முடைய காதல் கதைதான்'

ஒரு புறம் உன் முத்தம்,
மறுபுறம் அவன் மழலை மொழி
எதை முதலில் கேட்பது?
இரண்டுமே முதலில் வேண்டும்

பிற்பகல் 1.00 மணி:

பொய்யான 'உணவு இடைவெளி' வந்தவுடன்
கால்களில் சக்கரம் ஒன்றைக் கட்டிக் கொள்கிறேன்
உன் முகம், அவன் முகம் போதும்
இன்னும் ஒரு யுகத்திற்கு

இன்றைக்கு இன்னும் அழகாய் இருக்கிறான்,
தேவதையின் மகன், பின்னே எப்படி இருப்பான்?
காற்றில் அப்படி என்ன ஓவியம் வரைகிறான்?
காற்றில் அப்படி என்ன நடனம் ஆடுகிறான்?

உன் இதழ்களைப் போலே
அவன் உள்ளங்கைகளும் மிக மென்மை,
என் கன்னங்கள் தருகின்றன
ஒரு காதல் சான்றிதல்

பிற்பகல் 3.00 மணி:

அடுத்த தொலைபேசி நேரம்,
நீ உறங்கப் போகும் முன்னே
மீண்டும் நம் மன்னன் புராணம்
என் முத்தங்களோடு ஆரம்பிக்கட்டும் உன் உறக்கம்

புதிதாய் ஆள் வந்தவுடன்
செலவு இருமடங்கு ஆகிவிட்டது
முத்தங்கள், அணைப்புகள், கனவுகள்
எல்லாமே இப்போது இரு மடங்காய்

படுக்கையில் நமக்கு இடையே
ஒரு சந்தோசமாய் அவன்,
நினைத்து நினைத்து ரசிக்கிறேன்
ரசித்து ரசித்து நினைக்கிறேன்

மாலை 5.00 மணி:

ஏன் எனக்கு இறக்கை இல்லை?
அலுவலக உலகம் முழுதாய் மறந்துபோனது
மனம் எங்கும்
மலர்கள் மலர ஆரம்பித்திருந்தன

கசங்கிய என் ஆடையில் நீயும்
கசங்கிய அவன் ஆடையில் நானும்
வாசம் தேட ஆரம்பித்தோம்
ஒரு தோளில் அவன், இன்னொன்றில் நீ

பகலெங்கும் அவனில்
நீ ஒளித்து வைத்த முத்தங்களை
நான் தேடும் பொழுது இது
என் தேடலை மிக ரசிக்கிறான் அவன்

மாலை 7.00 மணி:

என் மொழியை அவனும்
அவன் மொழிகளை நானும்
கற்றுக்கொள்ளும் நேரம் இது,
இடைவெளி நேரத்தில் உன் முத்தப் பாடம்

எதற்காக சிரிக்கிறான்?
எதற்காக அழுகிறான்?
எதற்காக ஒரு புது அவதாரம்?
பதில் சொல்லேனடி என் பெண் நிலவே

தகப்பன் இங்கே மகனாய்,
மகன் இங்கே தகப்பனாய்
அணுஅணுவாய் ரசிக்கிறேன் அவனை
அணுஅணுவாய் காதலிக்கிறேன் உன்னை

இரவு 9.00 மணி:

மகன் அவனுக்கும் உணவு நேரமிது
உனக்கும் அவனுக்கும்
நடக்கிறது ஒரு மெல்லிய போர்,
யார் பக்கம் நான்?

நம் காதல் கதைதான்
அவனுக்குத் தாலாட்டு,
அவனின் பகல் நேரக் குறும்புகள்தான்
எனக்குத் தாலாட்டு

அவன் உறங்கிவிட்டான்,
இனிவரும் நிமிடங்கள் உனக்கும் எனக்கும்தான்
காதல் கதைகள் பேசும் நேரமிது
மெதுவாய் சிரிக்கிறான், நம்மை ஒட்டுக் கேட்கிறானோ?

இரவு 11.00 மணி:

மனைவி நீ இப்போது மகளாகி விட்டாய்,
கணவன் நான் இப்போது மகனாகி விட்டேன்
நம் மகன்
இப்போது தகப்பனாகவும், தாயாகவும்

வார்த்தைகள் தீர்ந்து போய்விட்டன
இனி மௌனங்களால் பேசுவோமா?
மௌங்களும் தீர்ந்து போனால்?
தீர்ந்து போகட்டுமே!, இனிமேல் மொழி எதற்கு?

நிச்சயமாய் இவன் ஒட்டுக் கேட்கிறான்
நாம் மௌனமாகினோம், அவன் பேச ஆரம்பித்துவிட்டான்
ஒரு விழியில் நீ, மறு விழியில் அவன்
நம்மை மறந்தோம், அவன் வசமானோம்

பின்னிரவு 1.00 மணி:

அவனின் இசைக் கச்சேரி
இன்னும் முடியவில்லை,
புதுப் புது ராகங்கள் படைக்கும்
கலைஞன் இவன்

சொர்க்கமெங்கும் சொர்க்கங்கள்
நெஞ்செங்கும் குதூகலங்கள்
இல்லமெங்கும் காதல்கள்
வானமெங்கும் முழுமதிகள்

பின்வந்த ஏதோ ஒரு நிமிடத்தில்
தூக்கத்திடம் களவு போகிறேன் நான்,
செவிகளெங்கும் அவன் ராகங்கள்
விழிகளெங்கும் அவன் முகங்கள்

பின்னிரவு 3.00 மணி முதல் காலை 7.00 மணி வரை

கனவிலும் கூட
என் அணைப்பில் நீங்கள்தான்,
ஒரு முறை விழித்து
சரிபார்த்துக் கொள்கிறேன்

உறக்கத்திற்கு ஒரு இடைவெளி
இது அவனின் பசி நேரம்,
உனக்காகத் தவிப்பதா?
இல்லை உன் தவிப்பை ரசிப்பதா?

காதலி நீ என் முதல் வரம்
மனைவி நீ என் இரண்டாம் வரம்
மகன் இவன் என் மூன்றாம் வரம்
அடுத்த ஆயிரம் பிறவிகளுக்கும் இதுவே போதும்

No comments:

Post a Comment