October 31, 2012

ஒரு மேகம், இரு துளிகள் ...

இன்னும் மழை நின்று போகவில்லை...
மேகம் வைத்திருந்த கடைசித்துளிகளை, பூமிக்கு தாரை வார்த்துக் கொண்டிருந்த ஒரு மாலை நேரம்...
வீட்டின் முற்றத்தில் மழையை ரசித்துக் கொண்டிருந்த என்னை, ஒரு மழைத்துளி மெதுவாய் புரட்டிப் போட்டது...

சில ஆண்டுகளுக்கு முன், இதேபோல் மழை கொட்டிக் கொண்டிருந்த ஒரு மாலை நேரம்..
மனதெங்கும் ஒரு திருவிழா நடந்து கொண்டிருந்த நேரமும் கூட...
பல மாதங்கள் நான் வேண்டிய கடவுள், இன்று கண்களோடு மேகங்களையும் திறந்திருந்தார்...

ஒற்றைக் குடையில், முதன் முதலாய் நீயும் நானும்...
விழும் மழைத் துளிகளும், மிரட்டும் இடிகளும் உன்னை என்னோடு இன்னும் நெருக்கி வைத்திருந்தன..
ஊரே மழையை சபித்துக் கொண்டிருக்க, நான் மட்டும் வாழ்த்திக் கொண்டிருந்தேன்....
இன்னும் கொஞ்சம் நீளட்டும் இந்த மழை, இன்னும் கொஞ்சம் நெருங்கட்டும் என் தேவதை...

உன் உதட்டைக் குறிவைத்து, சில மேகங்கள் மோக அம்புகளை வீசிக் கொண்டிருந்தன...
விழுந்த துளிகள் எல்லாம் அமிர்தத் துளிகளாய் மோட்சம் அடைந்து போயின
விழும் துளிகள் உன் அழகைக் கரைக்க முயல, நானோ கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து கொண்டிருந்தேன்...
இன்னும் கொஞ்சம் பெரிதாகட்டும் இந்த மேகம், இன்னும் கொஞ்சம் சிறிதாகட்டும் இந்தக் குடை

எழு நிற வானவில் ஒரு பக்கம், சிவப்பு நிற வானவில் என் பக்கம்
நீ அழகு, மழை அழகு... மழையில் நீயும் அழகு.. உன்னில் மழையும் அழகு...
மின்னல்களும் என்னோடு சேர்ந்து கொள்ள, மனதெங்கும் கொண்டாட்டம்தான்
இன்னும் கொஞ்சம் நீளட்டும் இந்தப் பயணம், இன்னும் கொஞ்சம் தித்திக்கட்டும் இந்த நிமிடம்

நம் கைரேகைகள் என்ன பேசிக்கொள்கின்றன?
ஒட்டுக் கேட்க நினைக்கும் துளிக்கு, வழக்கம் போல இடம் இல்லை
உன் மேல் விழுந்து என் மேல் விழும் துளிகள், மின்சாரத்தை பாய்ச்சிக் கொண்டிருந்தன
இன்னும் கொஞ்சம் காதலாகட்டும் இந்தத் தருணம், இன்னும் கொஞ்சம் மலரட்டும் உன் வெட்க மொட்டுக்கள்

அடுத்த விழுந்த மழைத்துளி,
என்னை மெதுவாய் தட்டி எழுப்புகிறது...

இங்கேயும், அங்கேயும் ஒரே மேகம்
இங்கே ஒரு துளி, என் மீது விழுகிறது
அங்கே ஒரு துளி, உன் மீது விழுகிறது
ஞாபகப்படுத்தட்டும், நம் மீது விழுந்த மழைத்துளியை

விழட்டும் என் மீது இன்னொரு துளி
தொடங்கட்டும் நம்மில் திருவிழாக்கள் ....

October 30, 2012

உன் மேக இதழ்களிடம்
சமுத்திரம் என் வேண்டுகோள்
- இன்னொன்று கடனாய்க் கிடைக்குமா?
இதழ்கள் காயும் முன்னே,
உயிர் காய்ந்து போகின்றது
- இன்னொன்று கடனாய்க் கிடைக்குமா?
பிரம்மனின் திருஷ்டிப் புள்ளி
எனக்கு அதிர்ஷ்டப் புள்ளி
- உன் உதட்டோர மச்சம்
உன் இதழ் ஈர்ப்பு விசைக்கும்
ஒரு மையப்புள்ளி
- உன் உதட்டோர மச்சம்
இதயச் சுவற்றில்
ஓவியம் வரையும் மழலை நீ,
எல்லாக் கிறுக்கல்களுமே ஓவியங்கள்தான்
 - எனக்கான காதலின் பிரம்மன் நீ

October 25, 2012

மலரத் துடிக்கும் மொட்டாய் நான்,
வெளியே ஒரு நெருப்பு வேலி
- இது உனக்கான இன்னுமொரு காத்திருப்பு

October 24, 2012

என் நிஜம் நிழலாகும் முன்னே,
உன் நிழல் நிஜமாகட்டும்
- இது உனக்கான இன்னுமொரு காத்திருப்பு
காத்திருக்க வைப்பதென்னவோ நீதான்,
மொத்த தண்டனைகளும்
என் விரல் நகங்களுக்குத் தான்
- இது உனக்கான இன்னுமொரு காத்திருப்பு

October 22, 2012

தேய்பிறை நாளிலும்
என்னை முழுமதி ஆக்குபவன் நீ
- அவளின் 'இன்னுமொரு இரவு' எனும் காவியத்திலிருந்து
சிவந்து மடிந்திருந்தன
என் கூந்தல் மல்லிகைகள்,
மடிந்து சிவந்திருந்தன
என் அங்க வெட்கங்கள்
- அவளின் 'இன்னுமொரு இரவு' எனும் காவியத்திலிருந்து

October 16, 2012

முற்பாதியில் என் கேடயம்
பிற்பாதியில் உன் வாள்,
வழக்கம் போல இன்றும் பழி வாங்கிவிட்டது
என் புடவைத் தலைப்பு.
- அவளின் நாட்குறிப்பின் ஒரு பக்கத்திலிருந்து
ஒரு முழம் மல்லிகையில்
என்னை முழுதுமாய் மலர வைப்பவன் நீ
- அவளின் நாட்குறிப்பின் ஒரு பக்கத்திலிருந்து
என் வெட்கத்தைக் கேலி செய்கின்றன
என் வண்ண வளையல்கள்,
நொறுங்கிப் போகட்டும் உன் நெருக்கத்தில்

- அவளின் நாட்குறிப்பின் ஒரு பக்கத்திலிருந்து
தேன் திருட வருகிறாயா?
தேன் ஊட்ட வருகிறாயா?

என் இதழ்களில், உன் தித்திப்பு
- அவளின் நாட்குறிப்பின் ஒரு பக்கத்திலிருந்து
என் கூந்தலில் ஆரம்பித்து
நம்மில் கரைந்து போகிறது
என் மல்லிகைகளின் வாசனை
- அவளின் நாட்குறிப்பின் ஒரு பக்கத்திலிருந்து

October 11, 2012

எப்போதடா வரம் பெற வருவாய்?
தவமிருக்கிறேன் நான்.
- அவளின் நாட்குறிப்பின் ஒரு பக்கத்திலிருந்து
முதல் வினாடியிலேயே என் பெண்மை
உன்னிடம் கவிந்துபோகின்றது.
பிறகு எப்படி, உன்னுடனான யுத்தத்தில் வெல்வது?
- அவளின் நாட்குறிப்பின் ஒரு பக்கத்திலிருந்து
விரல் நுனிகளில்
மின்சாரம் தயாரிப்பவன் நீ,
பரவும் மின்சாரத்தில்
எரியும் விளக்கு நான்
- அவளின் நாட்குறிப்பின் ஒரு பக்கத்திலிருந்து
என் புடவைத் தலைப்பில் ஆரம்பித்து
என்னில் முடிந்து போகின்றன,
மணாளன் உன் காவியங்கள்
மெலிதாய் உன் விரல் தீண்டியதும்
முழுதுமாய் மலர்ந்து போகிறேன்,
நான் ஒரு புடவைச் சிணுங்கி
கொடியில் காயும்போது என் வாசத்தையும்,
நான் அணியும் போது உன் வாசத்தையும்
தேடச் சொல்கிறது, இந்தப் புடவை

October 09, 2012

இரவும், நிலவும்
தீர்ந்து போனால் போகட்டும்,
நம் முத்தங்கள்
இன்னும் தீர்ந்து போகவில்லையே !
முத்தங்களை ஒளித்து வைக்க
உன் இதழ்களில் இடமில்லையோ?
தாரள இடம் இருக்கிறது
என்னிடமும், என் இதழ்களிடமும்
முதல் முத்தம்
என் கன்னமெங்கும், உன் இதழ் வண்ணங்கள்
மறு முத்தம்
உன் கன்னமெங்கும், வெட்க வண்ணங்கள்
பிரம்மன் ஒரு இதழையும்
சிவன் மறு இதழையும் படைத்தார்களோ?
உன் ஒவ்வொரு முத்தத்திலும்
மரித்து மரித்துப் பிறக்கிறேன்
முத்த வரங்கள் தர
முத்தங்களையே காணிக்கை கேட்கும்
ஒரு வினோத தெய்வம் நீ
உன் இதழ் வண்ணங்களை
ஏனடி வீணடிக்கிறாய்?
என் இதழ் கூடத்திற்கு வா,
வானவில் வரையக் கற்றுத் தருகிறேன்

October 08, 2012

ஒரு முத்தம் பரிசு,
மறுமுத்தம் நிவாரணம்.
தானம் செய்பவள் நீ,
வறுமை பெற்றவன் நான்
ஒரு முத்தம் வாள்,
மறுமுத்தம் கேடயம்.
போரிடத் தெரிந்தவள் நீ,
தோற்கத் தெரிந்தவன் நான்