December 01, 2012

முதல் திருட்டு...

சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்துக்கொள்கிறேன், யாரும் என்னைக் கவனிக்கவில்லை...
மெதுவாய் என் விழிகளில், ஒரு கள்ளத்தனம்  குடியேறுகிறது..மெதுவாய் உன்னை நோக்கி கண்களை மட்டும் திருப்புகிறேன்...
ஒரு விழி உன்னை நோக்கியும், மறு விழி என் சுற்றத்தையும் கணிக்கிறது... யாரும் என்னைக் கவனிப்பதாய்த் தெரியவில்லை...

அவசர அவசரமாய், உன்னை ஒரு முறை பார்த்துக் கொண்டேன்...
வினாடிக்கும் குறைவான நேரத்தில், உன் முகம் என்னில் பதிந்து போனது...
நீ இமைகளை மூடித் திறக்கும் நேரத்திற்குள் மிக மெல்லிய ஒரு பூகம்பம் என்னைத் தாக்கிப் போனது... முதல் திருட்டில் வெற்றி கண்டேன்... இன்னொரு திருட்டிற்க்குத் தைரியம் வந்து விட்டது...

விழிகளில் புதிதாய் கொஞ்சம் தைரியமும், திமிரும் பிறந்துவிட்டது... இருந்த போதும், உன் விழிகளை நேருக்கு நேராய் பார்க்கும் தைரியம் பிறக்க வில்லை...மீண்டும் ஒரு முறை என் சுற்றத்தைப் பார்த்துக் கொள்கிறேன்... என்னை யாரும் கவனிப்பதாய்த் தெரியவில்லை.. கூடிப் போன தைரியத்தோடு உன்னை நோக்கி தலை திருப்புகிறேன்...

முதன் முறையாக அரை தைரியத்தோடு, உன் முழு முகம் காண்கிறேன்...
வினாடிக்கும் குறைவான நேரத்தில் ஒரு அணு உலை வெடித்த ஒரு அனுபவம்..
மிக மெதுவாய் உன் இதழ்களைச் சுழித்தாய், மிக அவசரமாய் வெடித்துப் போனேன்....
கண்கள் வழியே, இதயத்தில் நுழைந்து போனது ஒரு நெருப்புத் துண்டு... என் உடம்பின் ஒவ்வொரு செல்லும் மறுஜென்மம் எடுத்தன....
திருடனுக்கு தேள் கொட்டுவதென்ன, இங்கே நெருப்பே பற்றிக் கொண்டது... சில பல ஜென்மங்கள் வேண்டும், நான் பழைய நிலைக்குத் திரும்ப....

தேனீக்களுக்குப் பயந்தால் தேன் கிடைக்குமா? அடுத்த திருட்டுக்குத்  தயாரானேன்...
இந்த முறை நிறைய தைரியம், இன்னும் நிறைய ஆர்வம், இன்னும் நிறைய நிறைய எதிர்பார்ப்பு..இப்போது சுற்றத்தைப் பற்றிக் கவலையில்லை... என்ன வேண்டுமானாலும் நடக்கட்டுமே...
உன்னைத் தவிர யாரும் என் விழிகளின் எல்லைகளில் இல்லை... ஒரு புன்னகையோடு, மெதுவாய் உன் மேல் குவிகிறேன்...
இன்னுமொரு நிலநடுக்கத்திற்கு என் இதயமும், இன்னுமொரு போருக்கு என் செல்களும் தயாராகிவிட்டன...

ஒரு மந்திரப் புன்னகை உன் இதழில்.... பக்தன் எனக்கு வேறன்ன வேண்டும்?
இமைகளை திறக்கிறாய், இதழ்களை மூடுகிறாய்.. சுவாசிக்க மறக்கிறேன்...
இமைகளை மூடுகிறாய், இதழ்களைத் திறக்கிறாய்... சுவாசிக்கவும் மறக்கிறேன்...

மிக மெல்லிய ஒரு பயம் எனைச் சூழ்கிறது.. உன்னை வாசிக்கும் என்னை யாராவது வாசிக்கிறார்களா? ஒன்றும் தெரியாதது போல், இயல்பு நிலைக்குத் திரும்புகிறேன்...

என்ன நடந்தது இந்த மூன்று வினாடிகளுக்குள்?
திருவிழா முடிந்து போன ஒரு கிராமமாய், என் மனது...
ஒரு தீபாவளி முடிந்து போயிருந்தது...

அழகி நீ, மிகச் சாதாரணமாய்  ஒரு போரைத் துவக்குகிறாய்...
இன்னும் மிகச் சாதாரணமாய் ஒரு பூகம்பம் படைக்கிறாய் ...
இன்னும் மிக மிகச் சாதாரணமாய் என்னைத் திருடிப் போகிறாய்

திருடன் நான் இப்படியே இருந்து கொள்கிறேன்... அழகி நீயும் இப்படியே இருந்து போ...
என் திருட்டும், உன் அழகும் இப்படியே வளரட்டும்....

காத்திருக்கிறேன் உன் மொத்த அழகையும், சத்தமில்லாமல் திருடும் ஒரு நாளுக்காக...
நினைவு இருக்கட்டும்.... அந்த நாள் மிகத் தொலைவில் இல்லை....

No comments:

Post a Comment