இதே நாள் - சில வருடங்களுக்கு முன்:
மழை பெய்ய ஆரம்பித்த
ஒரு
முன்னிரவில்
என்னை
உனக்கும், உன்னை எனக்கும்
அறிமுகம் செய்ய ஆரம்பித்து
மழைத் துளிகள்
ஓய்ந்து போய்
கீழ் வானம்
சிவக்க ஆரம்பித்த வேளையில்
நம்மை
நமக்கு
அறிமுகம்
செய்து முடித்தோம்
இந்த நாள்
- பின்னர் வந்த ஏதோ ஒரு மாதத்தில்:
நீண்ட இரவைக்
கடந்து
மெல்லமாய் விடிந்த
ஒரு வியாழக்கிழமையில்
நிகழ்ந்தது
நம் முதல் சந்திப்பு
அதன் பின்
நிறைய முதல்
சந்திப்புகள்
நிறைய முதல்
வெட்கங்கள்
நிறைய முதல்
முத்தங்கள்
இந்த நாள்
- பின்னர் வந்த இன்னுமொரு மாதத்தில்:
வாரம் முழுதும்
காதல் கிழமைகள்,
மாதம் முழுதும்
காதல் தினங்கள்
உன் வெட்கத்தில்
தொலைந்து போனேன்
நான்
என் விழிகளில்
தொலைந்து போனாய்
நீ
இந்த நாள்
- பின்னர் வந்த இன்னுமொரு மாதத்தில்:
சந்திப்புகளின்
இடைவெளிகளை
ஏக்கங்கள் நிரப்பின,
ஏக்கங்களின்
இடைவெளிகளை
சந்திப்புகள்
நிரப்பின
கொள்ளை கொள்ளையாய்
என்னால் நீ
காதலிக்கப்பட்டாய்
முத்த முத்தங்களால்
உன்னால் நான்
நிரப்பப்பட்டேன்
இந்த நாள்
- பின்னர் வந்த இன்னுமொரு மாதத்தில்:
நீ அருகில் இருந்த நிமிடங்கள்
எனக்கு சொர்க்க
நிமிடங்கள்.
நாம் பயணித்த
பேருந்தைக் கேள்
அது கவிதைகள்
சொல்லும்
நீ அருகில் இல்லாத நிமிடங்கள்,
எனக்கு நெருப்பு
நிமிடங்கள்.
என் இரவுகளைக் கேள்
அவைகள் கதைகள்
சொல்லும்
இந்த நாள்
- பின்னர் வந்த இறுதி மாதத்தில்:
ஏதோ
ஒரு நாளில்,
நீயும் நானும்
சிறை வைக்கப்பட்டோம்
நானும் நீயும்
தண்டிக்கப்பட்டோம்
யார் இவர்கள்?
எங்கிருந்து வந்தார்கள்?
'நாம்' எனும்
கவிதை உடைக்கப்பட்டு
நான், நீ எனும்
எழுத்துக்கள்
தனித்தனியே
சிதறடிக்கப்பட்டன
மொழி அழிக்கப்பட்டு மௌனமாக்கப்பட்டன
இதே நாள்
- இந்த வருடம்:
உன் கெட்டிமேள
ஓசையில்
இறந்து பிறந்த
என் மௌனத்திற்கு
இன்று
பிறந்த நாள்
காலங்கள் பல
கடந்தும்
உனக்கான என்
மௌனம்
உன் பெயரை உச்சரிப்பதை
இன்னமும் நிறுத்தவில்லை
நிறுத்தவும்
போவதில்லை, தொடரும் …