May 21, 2020

மூன்று தோழிகள், மூன்று மகள்கள்


முதல் தோழி:

மதிய இயற்பியல் வகுப்புகளின்
துயில்களை விரட்டியவள் அவள்

நான் வாங்கிய 40-க்கும் அவள் வாங்கிய 99-க்கும்
தினமும் சண்டை வளர்த்தவள் அவள்

எனக்கும் சேர்த்து பசித்தவள்,
எனக்கும் சேர்த்து சமைத்தவள் அவள்

என்னையும், என் பழைய மிதிவண்டியையும்
பண்டிகை தவறாமல் அலங்கரித்தவள் அவள்

நிலவு கேட்டவனுக்கு முப்பது நாட்களும்
முழுமதி கொடுத்தவள் அவள்

இரண்டாம் தோழி:

என் எழுத்துக்கள் பிறக்கும் முன்பே
அவைகளை காதலித்தவள் அவள்

மருதாணிக்கும், வெட்கத்திருக்கும்
சிவக்கக் கற்றுத்தந்தவள் அவள்

அவள் மணநாளிலும் கூட
எனக்கான துணை தேடியவள் அவள்

என் வானவில்லுக்கும், நிழலுக்கும்
வர்ணங்கள் தீட்டியவள் அவள்

என் வார்த்தைகளில் ஒளிந்து கொண்டு
முழு அர்த்தங்கள் தருபவள் அவள்

மூன்றாம் தோழி:

நான் தினமும் ரசிக்கும்
எனக்கான முதல் ரசிகை அவள்

எனக்கான புது மொழிகளை
மௌனம் கொண்டு படைப்பவள் அவள்

என் தனிமைகளை, என்னோடு இணைந்து
தனிமையாக்கியவள் அவள்

என் மண நாளை என்னை விட
நிறைய கொண்டாடுபவள் அவள்

என் தனித்தீவில் தினமும்
திருவிழாக்கள் நடத்தியவள் அவள்

ஒருத்தி 'அன்பின் இளவரசி'
இன்னொருத்தி 'வெட்கத்தின் இளவரசி'
மூன்றாமவள்  'அழகின் இளவரசி'

மூன்று தோழிகளும்,
மறு பிறவியில்
மூன்று மகள்களாய்ப் பிறக்கட்டும்

பிறகு நான், மூன்று தேவதைகளின் தகப்பன்.
எனக்கென்று ஒரு கர்வம்,
எனக்கென்று ஒரு ஆணவம்.

இங்கே மூத்தவள், இளையவள் சண்டைகள் இல்லை.
மூவருமே கடைக்குட்டிகள்.
மூவருமே என் தேசத்து இளவரசிகள்.

மறுபிறவியில் நான்
'மூன்று தேவதைகளின் தகப்பன்'.

No comments:

Post a Comment