May 28, 2020

உன் கெட்டி மேளமும், என் மௌனமும்


இதே நாள் - சில வருடங்களுக்கு முன்:


மழை பெய்ய ஆரம்பித்த

ஒரு முன்னிரவில்

என்னை உனக்கும், உன்னை எனக்கும்

அறிமுகம் செய்ய ஆரம்பித்து

 

மழைத் துளிகள் ஓய்ந்து போய்

கீழ் வானம் சிவக்க ஆரம்பித்த வேளையில்

நம்மை நமக்கு

அறிமுகம் செய்து முடித்தோம்

 

இந்த நாள் - பின்னர் வந்த ஏதோ ஒரு மாதத்தில்:

 

நீண்ட இரவைக் கடந்து

மெல்லமாய் விடிந்த

ஒரு வியாழக்கிழமையில் நிகழ்ந்தது

நம் முதல் சந்திப்பு

 

அதன் பின்

நிறைய முதல் சந்திப்புகள்

நிறைய முதல் வெட்கங்கள்

நிறைய முதல் முத்தங்கள்

 

இந்த நாள் - பின்னர் வந்த இன்னுமொரு மாதத்தில்:

 

வாரம் முழுதும்

காதல் கிழமைகள்,

மாதம் முழுதும்

காதல் தினங்கள்

 

உன் வெட்கத்தில்

தொலைந்து போனேன் நான்

என் விழிகளில்

தொலைந்து போனாய் நீ

 

இந்த நாள் - பின்னர் வந்த இன்னுமொரு மாதத்தில்:

 

சந்திப்புகளின் இடைவெளிகளை

ஏக்கங்கள் நிரப்பின,

ஏக்கங்களின் இடைவெளிகளை

சந்திப்புகள் நிரப்பின

 

கொள்ளை கொள்ளையாய்

என்னால் நீ காதலிக்கப்பட்டாய்

முத்த முத்தங்களால்

உன்னால் நான் நிரப்பப்பட்டேன்

 

இந்த நாள் - பின்னர் வந்த இன்னுமொரு மாதத்தில்:

 

நீ அருகில் இருந்த நிமிடங்கள்

எனக்கு சொர்க்க நிமிடங்கள்.

நாம் பயணித்த பேருந்தைக் கேள்

அது கவிதைகள் சொல்லும்

 

நீ அருகில் இல்லா நிமிடங்கள்,

எனக்கு நெருப்பு நிமிடங்கள்.

என் இரவுகளைக் கேள்

அவைகள் கதைகள் சொல்லும்

  

இந்த நாள் - பின்னர் வந்த இறுதி மாதத்தில்:

 

ஏதோ ஒரு நாளில், காரணமேயின்றி

நீயும் நானும் சிறை வைக்கப்பட்டோம்

நானும் நீயும் தண்டிக்கப்பட்டோம்

யார் இவர்கள்? எங்கிருந்து வந்தார்கள்?

 

'நாம்' எனும் கவிதை உடைக்கப்பட்டு

நான், நீ எனும் எழுத்துக்கள்

தனித்தனியே சிதறடிக்கப்பட்டன

மொழி அழிக்கப்பட்டு மௌனமாக்கப்பட்டன

 

இதே நாள் - இந்த வருடம்:

 

உன் கெட்டிமேள ஓசையில்

இறந்து பிறந்த

என் மௌனத்திற்கு இன்று

பிறந்த நாள்

 

காலங்கள் பல கடந்தும்

உனக்கான என் மௌனம்

உன் பெயரை உச்சரிப்பதை இன்னமும் நிறுத்தவில்லை

நிறுத்தவும் போவதில்லை, தொடரும் …


No comments:

Post a Comment