September 27, 2021

நேரம்: காலை 6.22


இன்னும் கொஞ்ச நேரம் 

இவள் என் அணைப்பிலேயே இருக்கட்டுமே

கதிரவனே, கொஞ்சம் தாமதிக்கக் கூடாதா?

இன்னுமொரு இரண்டு நிமிடம் கட்டிக்கொள்கிறேன்


இவள் என்னைச் சுற்றிக்கொண்டிருக்கின்றாள்

இவளின் புடவையை

நான் சுற்றிக்கொண்டிருக்கின்றேன்.

கட்டிக்கொள்வதை கட்டிக்கொண்டேன்


எப்போதும் போல

அதே மூன்று கூந்தல் இழைகள்

என் முகம் மீது பரவிக்கிடக்கின்றன.

எங்கெங்கும் மல்லிகை வாசனை


இரவெல்லாம் நாம் பேசிய கதைக்கு

இந்த பௌர்ணமி நிலவே சாட்சி.

கதை இல்லா இரவுகளில் 

பாவம் நிலவு தேய்ந்து போகத்தான் செய்கின்றது


என் கன்னங்கள் சிவந்து போயிருக்கின்றன

அவளின் குங்குமச் சிவப்பா?

இல்லை இதழ்ச் சிவப்பா?

அறையெங்கும் மீத வெட்கங்கள்


இவளுக்கு கனவுகள் வருவதில்லையா?

கனவுகளில் நான் வருவதில்லையா?

இப்போதெல்லாம் நடு இரவுகளில்

என் பெயரை முணுமுணுப்பதே இல்லை


மூச்சுக்காற்று மோதிக்கொள்ளும் இடைவெளிதான்,

எனினும் விழிகளில் தேடாமல்

விரல்களினால் தேடுகின்றாள்.

அரையடிக்குள் ஒரு கண்ணாமூச்சி


வெட்க ராகங்கள் படைப்பவள் இவள்

வெட்கியே ராகங்கள் படைப்பவளும் இவளே.

இவளை இசைக்கப் படைக்கப்பட்ட 

ஒரு அற்புதக் கலைஞன் நான்


உன்னை ஏமாற்றுவது 

அவ்வளவு சுலபம் இல்லை போலும்,

முழு நித்திரையிலும் 

என் கள்ளம் கண்டுகொள்கிறாய்


இப்போது புதிதாய் தொடங்குவதா?

இல்லை, இரவின் மீதத்தை தொடரவா?

இது வழக்கம்போல மனதோடு மல்லுக்கட்டும் நேரம்

நேரம் காலை 6.22

September 15, 2021

உன்னையும் இந்தக் காதல் சபிக்கட்டும்

 

வெறும் ஒற்றை வாக்கியம்

ஆயிரமாயிரம் ஒத்திகைகள்

உன்னிடம் என் காதலைச் சொல்ல


நிலைக்கண்ணாடி முன்

நிலைகுலைந்த நிலையில் தினமும் நான்,

சிறிதேனும் தைரியம் இல்லை 


நீ எனைக் கடந்து போகையில்

இருதயம் எங்கும் ஒரு பிரளயம்,

ஏதேனும் உன் செவிகளில் விழுகின்றதா?


நீ நடந்து செல்லும் பாதையில்

உன் பாதச்சுவடுகளை தேடுவதே

எனக்கு தினமும் வேலையாய் இருக்கின்றது


நீ விடும் மூச்சுக்காற்றில்

என் தேகம் பற்றி எரிகிறது

நீயோ எனை கண்டுகொள்வதே இல்லை


நீ தாமதமாகும் வினாடிகளில்

என் விரல் நகங்களுக்கு 

மரண தண்டனைகள் விதிக்கப்படுகின்றன


காதோர ஒற்றை முடியில்

என்னைக் கட்டிப்போட்டுவிடேன்,

உன் மல்லிகையில் நான் மயங்கிப்போகிறேன்


உன் வளையல்களை 

கொஞ்சம் சும்மா இருக்கச் சொல்லேன்,

நான் சுவாசிக்க மறந்து போகின்றேன்


எனக்கும் இரவுக்கும்

தினமும் இங்கே மல்யுத்தம்,

கனவில் வர கொஞ்சம் கருணை காட்டக்கூடாதா?


என்றைக்காவது ஒரு நாள்

இந்தக் காதல் உன்னையும் சபிக்கும்.

அந்த நாள் வரை 

நானும், என் காதலும் 

உன்னைப் பின் தொடர்ந்து கொண்டே இருப்போம்



September 13, 2021

அவளுக்கென்ன, அழகிய முகம்


ஒரு முழுமையடைந்த ஓவியம், ஒரு முழுமையடைந்த கவிதை அவளின் இந்த முகம்


விழிகளில் ஒரு மொழி

இதழ்களில் ஒரு மொழி

எப்போதும் தடுமாறுபவன் நான் 


இதழ்களைச் சுழித்து

இமைகளை உயர்த்தி 

எனை நொறுங்கச் செய்பவள்


அவள் உதிர்க்கும் வார்த்தைகள்

காற்றிலேயே கரைந்து போகும்.

பிறகெப்படி நான் கேட்பது?


அவளின் இதழ் ரேகைகளெங்கும்

என் ஏக்கங்கள் 

எனும் சோகக் கதைகள்


விழிகளின் மெய் மறைக்கும் இதழ்கள்

இதழ்களின் மெய் மறைக்கும் விழிகள்

இவள் ஒரு மாபெரும் வித்தைக்காரி


புகைப்படத்தில், அவள் அழகி

நேரில், அவள் ஒரு பேரழகி

அழகினால் மிரட்டுபவள் அவள்


அவள் முகம் போதும்

இந்த ஆயுள் முழுதும்.

வேறு எதுவும் தேவையில்லை எனக்கு


அழகைக் அடிக்கடி கூட்டாதே,

எனக்கிருப்பது ஒரு இருதயம் தான் 

இன்னும் எத்தனை தாங்குவது?


இப்படிக்கு ,

உனைக் காதலிப்பதற்காகவே படைக்கப்பட்ட நான்