வெறும் ஒற்றை வாக்கியம்
ஆயிரமாயிரம் ஒத்திகைகள்
உன்னிடம் என் காதலைச் சொல்ல
நிலைக்கண்ணாடி முன்
நிலைகுலைந்த நிலையில் தினமும் நான்,
சிறிதேனும் தைரியம் இல்லை
நீ எனைக் கடந்து போகையில்
இருதயம் எங்கும் ஒரு பிரளயம்,
ஏதேனும் உன் செவிகளில் விழுகின்றதா?
நீ நடந்து செல்லும் பாதையில்
உன் பாதச்சுவடுகளை தேடுவதே
எனக்கு தினமும் வேலையாய் இருக்கின்றது
நீ விடும் மூச்சுக்காற்றில்
என் தேகம் பற்றி எரிகிறது
நீயோ எனை கண்டுகொள்வதே இல்லை
நீ தாமதமாகும் வினாடிகளில்
என் விரல் நகங்களுக்கு
மரண தண்டனைகள் விதிக்கப்படுகின்றன
காதோர ஒற்றை முடியில்
என்னைக் கட்டிப்போட்டுவிடேன்,
உன் மல்லிகையில் நான் மயங்கிப்போகிறேன்
உன் வளையல்களை
கொஞ்சம் சும்மா இருக்கச் சொல்லேன்,
நான் சுவாசிக்க மறந்து போகின்றேன்
எனக்கும் இரவுக்கும்
தினமும் இங்கே மல்யுத்தம்,
கனவில் வர கொஞ்சம் கருணை காட்டக்கூடாதா?
என்றைக்காவது ஒரு நாள்
இந்தக் காதல் உன்னையும் சபிக்கும்.
அந்த நாள் வரை
நானும், என் காதலும்
உன்னைப் பின் தொடர்ந்து கொண்டே இருப்போம்
No comments:
Post a Comment