September 14, 2022

உன் பிரிவு எனும் கொடும் தண்டனை …

இன்னும் எத்தனை இரவுகள்

என் தலையணை யுத்தங்கள் முடிந்து போக ?


இன்னும் எத்தனை விரல் நகங்கள்

நான் துண்டாக்கி சிதைக்க?


இன்னும் எத்தனை நீண்ட நிமிடங்கள்

நான் வெறுத்து சுவாசிக்க?


இன்னும் எத்தனை பதிலில்லா கேள்விகள் 

நான் முடியாமல் சுமக்க?


இன்னும் எத்தனை வறண்ட நாட்கள் 

நான் வானவில் காண்பதற்கு?


இன்னும் எத்தனை வளர்பிறை நாட்கள்

இங்கே முழுமதி காண்பதற்கு?


இன்னும் எத்தனை தொலைபேசி அழைப்புகள்

உன் குரல் கேட்பதற்கு?


இன்னும் எத்தனை மௌனங்கள்

என் முதல் கவிதை அரங்கேற்ற?


இன்னும் எத்தனை கனவுகள்

நீயும் நானும் நனவாக?


இன்னும் எத்தனை பூகம்பங்கள்

என் முதல் மொட்டு மலர்வதற்கு ?


இன்னும் எத்தனை யுகங்கள்

நீ ஒளிந்து இருக்க?


தனிமையிடம் நான் சரணடைந்து விட்டேன்.

என்னிடம் இழக்க வேறொன்றுமில்லை

ஒரு கணமும் தாமதிக்காமல், அருகில் வா.


உன் பிரிவு என்பது ஒரு மிகப்பெரும் கொடும் தண்டனை 


September 13, 2022

 என் நிழலையும்

ஏனடி உடைக்கின்றாய்?

உன் மௌனங்கள்

எனைத் தண்டித்தது போதும்

September 06, 2022

 மின்சார முத்தங்களா 

இல்லை

மின்சாரத்தின் முத்தங்களா?

June 26, 2022

நீ உடை மாற்றும் கணங்களில்,

என் விழிகளில் அளவில்லா மின்சாரங்கள்

நீ உடை மாற்றும் கணங்களில்,

தாழிட்ட அறைக்கு வெளியே

நான் சிறை வைக்கப்படுகின்றேன்

April 20, 2022

அழகியே, உனக்கு

இங்கு காதலிக்கக் கற்றுத்தரப்படும். 

காதலுக்கு, என்னைத்தவிர 

வேறு எங்கும் கிளைகள் கிடையாது. 

April 19, 2022

மௌனம் எனும்
ஆணவம் கொண்டவள் நீ,
காதல் எனும்
ஆணவம் கொண்டவன் நான்.
அப்படியொரு பொருத்தம் நமக்குள்.

April 13, 2022

விழிகளில் கேள்வி, இதழ்களில் பதில்.

இதழ்களில் கேள்வி, விழிகளில் பதில்.

நீ ஒரு மந்திரக்காரி

April 06, 2022

 பேரழகின் முகவரி நீ.

அந்த முகவரியில்

தொலைந்தவன் நான்.

February 24, 2022

நான் உன்னைக் காதலிக்கின்றேன்


'நான் உன்னைக் காதலிக்கின்றேன்'

வெறும் மூன்றே வார்த்தைகள்.

முன் இரவு முழுதும் தைரியம் வரவழைத்து

பின் இரவு முழுதும் ஒத்திகை பார்த்தாயிற்று


இன்றைக்காவது சொல்லி விடுவேனா? 

நூறு முறை அதே கேள்வி

ஆயிரம் முறை அதே தயக்கம்

இலட்சம் முறை அதே அச்சம்


யாருக்கும் கேட்காமல்

காற்றுக்கும் கூட கேட்காமல்

ஏன், எனக்கும் கூட கேட்காமல்

இன்னுமொரு முறை ஒத்திகை பார்த்துக்கொண்டேன் 


தொலைவில் நீ வந்து கொண்டிருக்கிறாய்

என் இருதய தண்டவாளம் மீது ஒரு அதிவேக ரயில் வரும் தடதடப்பு

துண்டாக்க விரல் நகங்கள் ஏதும் மீதம் இல்லை

இன்னுமொரு இருதயம் எங்காவது கடன் கிடைக்குமா?


ஒரு கவிதை மிதந்து வருகின்றது

ஒரு ஓவியம் நடந்து வருகின்றது

ஒரு பூங்கொத்து நகர்வலம் வருகின்றது

அவ்வளவு அழகா நீ? இல்லை, அவ்வளவும் அழகு


உனக்கும் எனக்குமான தொலைவு குறைகிறது

பல நூறு பட்டாம் பூச்சிகள் எனைச்சுற்றி

தண்டுவடமெங்கும் ஒரு வியர்வை ஊற்று

மனமெங்கும் ஒரு மெல்லிய நடுக்கம்


இப்போது, பத்தடி தொலைவில் நீ

வழக்கம்போல சூனியம் வைக்கப்பட்டு விட்டேன்

நாவிற்கு மொழி மறந்து போய்விட்டது

ஒத்திகை பார்த்த வரிகள் ஒளிந்து கொண்டன


சிலையாய் நிற்கும் எனைக் கடந்து செல்கிறாய்

உன் விழிகள் எனக்குள் மின்சாரம் செலுத்துகின்றன

உன் இதழ்கள் எனக்குள் வெப்பம் செலுத்துகின்றன

ஓரிரு நொடிகளில், இரண்டு மூன்று முறை பூகம்பங்கள் 


சில கணங்களின் சுய நினைவிற்கு வருகின்றேன்

இப்படியா உன்னைத் தவற விடுவது?

மரித்துப்போன நிமிடங்களை எப்படி மீண்டும் உயிர்பிப்பது?

எங்கே போய் என் சினத்தை அழுது தீர்ப்பது?


திசைகள் தொலைந்த பாதையில் நடக்க ஆரம்பிக்கிறேன்

தேர்வே இல்லை, ஆனாலும் தோல்வி தொடர்கிறது

நெருப்புப் பந்து ஒன்று தொண்டைக்குள் உருளும் நேரம் இது

எனக்கு, நானே ஆறுதல் சொல்ல முனைகிறேன்


மீண்டும் ஒரு புதிய இரவு பிறக்கின்றது

வழக்கம் போல எனக்கும் இரவுக்கும் மல்யுத்தம் தொடங்குகிறது.

அடுத்த நாளுக்கான ஒத்திகைக்கு தயாராகின்றேன்

எனக்கான சகியே, ‘நான் உன்னைக் காதலிக்கின்றேன்’




February 23, 2022

என் கன்னமெங்கும் பதியட்டும்

உன் இதழ் ரேகைகள்.

இல்லையெனில் அவைகளுக்கு ஏது மோட்சம்?

January 23, 2022

அது போகட்டும், மறுபடியும் எப்போது என் கனவில் வருகிறாய் ?

இந்த இரவின் பின்னிரவு நேரம்,

எனக்கு மட்டும் கேட்கிறது

தொலைவில் இருந்து வரும் உன் குரல்


விழிகளை திறக்கலாமா?

திறக்கும் விழி வழியே, நீ தப்பித்துப் போய்விட்டால்,

பிறகெப்படி, உன்னை கனவில் சிறை கொள்வது?


காற்றில் இன்னமும் உன் குரல்,

ஆனால் என் கரங்களின் எல்லைக்குள் நீ இல்லை

உன்னை விரல்கள் கொண்டு தேடுகின்றேன்


நிச்சமாய் அது நீதான்

கனவில் என்னடி கண்கட்டு வித்தை?

இல்லை இல்லை, இது கனவுக்கான கண்கட்டு வித்தை


காற்றோடு கரைந்து இருக்கும் உன்னை 

என் கரங்களுக்குள் 

மெலிதாய் சிறை வைக்கின்றேன்


இது மௌனங்கள் பேசும் நேரம்,

வார்த்தைகள் மிகத் தாராளமாய் 

மௌன விரதம் இருக்கட்டுமே


என் இதழ்களின் ஏக்கங்கள் இன்னுமா புரியவில்லை?

நம் இதழ்கள் மட்டும் பேசிக்கொள்ளட்டுமே

இன்னும் கொஞ்சம் அருகில் வாயேன்


வழக்கம் போல நீ நழுவிக்கொள்கிறாய்

வழக்கம் போல என் கனவும் கலைந்து போகிறது

வழக்கம் போல இந்த இரவு நீளப் போகிறது


நீ தப்பித்து போன பின், இந்த இரவிடம் நான் சிறை படுகின்றேன்.

நீ அருகில் வராத கனவுகள், உயிரற்றவை.

விடியும் முன்பே கரைந்து போய்விடுகின்றன


மிக மெதுவாய்ச் சுற்றும் என் அறையின் மின்விசிறியில்

இன்னும் மிக மெதுவாய் கரைந்து போகின்றன என் ஏக்கங்கள்.

இந்த இரவு ஒரு நீண்ட போராட்டமே


அது போகட்டும்,

மறுபடியும் எப்போது என் கனவில் வருகிறாய் ?

இதழ் கணக்குகள் இன்னமும் மீதம் இருக்கின்றன