October 22, 2026

எப்போதும் ஒலிக்கும் கிருஷ்ணராஜ் எனும் ஒரு குரல்

 80 மற்றும் 90-களில் வளர்ந்த எனக்கு, இசை என்பது வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே இருந்தது. என் ரசனை எப்போதும் தனித்துவமானது. வித்யாசாகர், தேவா, சிற்பி, எஸ்.ஏ.ராஜ்குமார் போன்ற இசை அமைப்பாளர்களும், ஹரிஹரன், உன்னிகிருஷ்ணன், ஹரிணி போன்ற சிறந்த பாடகர்களும் கோலோச்சிய காலம் அது. இருந்தாலும், எனக்குப் பாடகர் கிருஷ்ணராஜ் அவர்களின் மீது எப்போதும் ஒரு தனி ஈர்ப்பு உண்டு. மனதையும் இதயத்தையும் மயக்கும், கம்பீரமான ஒரு தனித்துவமான குரல் அவருடையது. "தஞ்சாவூரு மண்ணு எடுத்து" என்ற பாடலில் விழுந்தவன், இன்றைக்கும் மயங்கியே கிடக்கின்றேன். 

2010-களில் 'மெட்டு மெட்டு வர்ண மெட்டு - பாட்டுக்கு பாலைவனம் (ஆனந்த பூங்காற்றே - 1999)' பாடலை எனது அலைபேசியின் மணியோசை-யாய் வைத்தேன். அதற்குப் பிறகு நான் எத்தனையோ அலைபேசிகளை மாற்றிவிட்டேன், ஆனால் கிருஷ்ணராஜ் பாடல் மட்டும் மாறவே இல்லை. ஒவ்வொரு முறை எனக்கு அழைப்பு வரும்போதும் கிருஷ்ணராஜின் குரலைக் கேட்பது, அவர் பாடல்கள் மீதான என் பிரியத்தை மேலும் கூட்டியது.

அவருடைய சில பாடல்களுக்கு மாற்றே கிடையாது, அவற்றை யாராலும் மீண்டும் உருவாக்கவும் முடியாது; அவை என்றென்றும் நிலைத்திருப்பவை. ஒரே பாடலை ஆயிரம் முறை கேட்டாலும், எப்போதும் சலிப்பதே இல்லை. என் வரிசையில் காலத்திற்கும் சலிக்காத பாடல்கள்... 

  • தஞ்சாவூரு மண்ணு எடுத்து 
  • ஐயையோ (பருத்தி வீரன்)
  • மெட்டு மெட்டு வர்ண மெட்டு, மெல்லிசை படிக்குதடி
  • சின்ன சின்ன கிளியே
  • கருடா கருடா என் காதலை சொல்லிவிடு
  • தாயே திரிசூலி 
  • நகுமா (அருணாச்சலம்)
  • காத்து அடிக்குது
  • எந்தன் உயிரே, எந்தன் உயிரே 

'தேவா தி தேவா' கச்சேரியில் அவர் நேரில் வந்து 'தஞ்சாவூரு மண்ணு எடுத்து' பாடலைப் பாடுவார் என்று மிகவும் ஆவலோடு எதிர்பார்த்தேன். அவரது மறக்க முடியாத குரலும் காலத்தால் அழியாத பாடல்களும் நம்மிடையே என்றும் வாழ்ந்துகொண்டே இருக்கும்.


No comments:

Post a Comment