May 28, 2020

உன் கெட்டி மேளமும், என் மௌனமும்


இதே நாள் - சில வருடங்களுக்கு முன்:


மழை பெய்ய ஆரம்பித்த

ஒரு முன்னிரவில்

என்னை உனக்கும், உன்னை எனக்கும்

அறிமுகம் செய்ய ஆரம்பித்து

 

மழைத் துளிகள் ஓய்ந்து போய்

கீழ் வானம் சிவக்க ஆரம்பித்த வேளையில்

நம்மை நமக்கு

அறிமுகம் செய்து முடித்தோம்

 

இந்த நாள் - பின்னர் வந்த ஏதோ ஒரு மாதத்தில்:

 

நீண்ட இரவைக் கடந்து

மெல்லமாய் விடிந்த

ஒரு வியாழக்கிழமையில் நிகழ்ந்தது

நம் முதல் சந்திப்பு

 

அதன் பின்

நிறைய முதல் சந்திப்புகள்

நிறைய முதல் வெட்கங்கள்

நிறைய முதல் முத்தங்கள்

 

இந்த நாள் - பின்னர் வந்த இன்னுமொரு மாதத்தில்:

 

வாரம் முழுதும்

காதல் கிழமைகள்,

மாதம் முழுதும்

காதல் தினங்கள்

 

உன் வெட்கத்தில்

தொலைந்து போனேன் நான்

என் விழிகளில்

தொலைந்து போனாய் நீ

 

இந்த நாள் - பின்னர் வந்த இன்னுமொரு மாதத்தில்:

 

சந்திப்புகளின் இடைவெளிகளை

ஏக்கங்கள் நிரப்பின,

ஏக்கங்களின் இடைவெளிகளை

சந்திப்புகள் நிரப்பின

 

கொள்ளை கொள்ளையாய்

என்னால் நீ காதலிக்கப்பட்டாய்

முத்த முத்தங்களால்

உன்னால் நான் நிரப்பப்பட்டேன்

 

இந்த நாள் - பின்னர் வந்த இன்னுமொரு மாதத்தில்:

 

நீ அருகில் இருந்த நிமிடங்கள்

எனக்கு சொர்க்க நிமிடங்கள்.

நாம் பயணித்த பேருந்தைக் கேள்

அது கவிதைகள் சொல்லும்

 

நீ அருகில் இல்லாத நிமிடங்கள்,

எனக்கு நெருப்பு நிமிடங்கள்.

என் இரவுகளைக் கேள்

அவைகள் கதைகள் சொல்லும்

  

இந்த நாள் - பின்னர் வந்த இறுதி மாதத்தில்:

 

ஏதோ ஒரு நாளில், காரணமேயின்றி

நீயும் நானும் சிறை வைக்கப்பட்டோம்

நானும் நீயும் தண்டிக்கப்பட்டோம்

யார் இவர்கள்? எங்கிருந்து வந்தார்கள்?

 

'நாம்' எனும் கவிதை உடைக்கப்பட்டு

நான், நீ எனும் எழுத்துக்கள்

தனித்தனியே சிதறடிக்கப்பட்டன

மொழி அழிக்கப்பட்டு மௌனமாக்கப்பட்டன

 

இதே நாள் - இந்த வருடம்:

 

உன் கெட்டிமேள ஓசையில்

இறந்து பிறந்த

என் மௌனத்திற்கு இன்று

பிறந்த நாள்

 

காலங்கள் பல கடந்தும்

உனக்கான என் மௌனம்

உன் பெயரை உச்சரிப்பதை இன்னமும் நிறுத்தவில்லை

நிறுத்தவும் போவதில்லை, தொடரும் …


May 21, 2020

மூன்று தோழிகள், மூன்று மகள்கள்


முதல் தோழி:

மதிய இயற்பியல் வகுப்புகளின்
துயில்களை விரட்டியவள் அவள்

நான் வாங்கிய 40-க்கும் அவள் வாங்கிய 99-க்கும்
தினமும் சண்டை வளர்த்தவள் அவள்

எனக்கும் சேர்த்து பசித்தவள்,
எனக்கும் சேர்த்து சமைத்தவள் அவள்

என்னையும், என் பழைய மிதிவண்டியையும்
பண்டிகை தவறாமல் அலங்கரித்தவள் அவள்

நிலவு கேட்டவனுக்கு முப்பது நாட்களும்
முழுமதி கொடுத்தவள் அவள்

இரண்டாம் தோழி:

என் எழுத்துக்கள் பிறக்கும் முன்பே
அவைகளை காதலித்தவள் அவள்

மருதாணிக்கும், வெட்கத்திருக்கும்
சிவக்கக் கற்றுத்தந்தவள் அவள்

அவள் மணநாளிலும் கூட
எனக்கான துணை தேடியவள் அவள்

என் வானவில்லுக்கும், நிழலுக்கும்
வர்ணங்கள் தீட்டியவள் அவள்

என் வார்த்தைகளில் ஒளிந்து கொண்டு
முழு அர்த்தங்கள் தருபவள் அவள்

மூன்றாம் தோழி:

நான் தினமும் ரசிக்கும்
எனக்கான முதல் ரசிகை அவள்

எனக்கான புது மொழிகளை
மௌனம் கொண்டு படைப்பவள் அவள்

என் தனிமைகளை, என்னோடு இணைந்து
தனிமையாக்கியவள் அவள்

என் மண நாளை என்னை விட
நிறைய கொண்டாடுபவள் அவள்

என் தனித்தீவில் தினமும்
திருவிழாக்கள் நடத்தியவள் அவள்

ஒருத்தி 'அன்பின் இளவரசி'
இன்னொருத்தி 'வெட்கத்தின் இளவரசி'
மூன்றாமவள்  'அழகின் இளவரசி'

மூன்று தோழிகளும்,
மறு பிறவியில்
மூன்று மகள்களாய்ப் பிறக்கட்டும்

பிறகு நான், மூன்று தேவதைகளின் தகப்பன்.
எனக்கென்று ஒரு கர்வம்,
எனக்கென்று ஒரு ஆணவம்.

இங்கே மூத்தவள், இளையவள் சண்டைகள் இல்லை.
மூவருமே கடைக்குட்டிகள்.
மூவருமே என் தேசத்து இளவரசிகள்.

மறுபிறவியில் நான்
'மூன்று தேவதைகளின் தகப்பன்'.

February 24, 2020

மீண்டும் சந்திக்கும் வரை
இந்த முத்தங்களை வைத்துக்கொள்
- நீ, நான் மற்றும் முன்பு ஒரு நாள்

February 13, 2020

உன்னைக் காதலித்துக்கொண்டே இருப்பதுதான்
என் தவமும், அதற்கான வரமும்

February 03, 2020

என் தோழிக்கு, மணமாகி விட்டது



ஒரு நீண்ட இசைக்குப் பிறகு
மேளதாளங்கள்
அமைதியாகின்றன

ஒரு நீண்ட வாழ்த்துகளுக்குப் பிறகு
உதடுகள்
அமைதியாகின்றன

உனக்கு மணமாகி விட்டது

மணமாலையோடு
இன்னும் நீ அழகாய் இருக்கின்றாய்

யாருக்கும் புலப்படாத
ஒரு அச்சம் கலந்த உற்சாகம்
உன் விழிகளில் ஒட்டிக் கொண்டிருக்கின்றது

இரவோடு இரவாக
சிவந்து போன மருதாணி
உன்னுடைய வெட்கத்தை
அப்படியே வைத்திருக்கின்றது

மகிழுந்து ஒன்று
மலர் சூடி உனக்காக
வாசலில் காத்திருக்கின்றது

அம்மாவின் அழுகை
கண்ணீரோடும்
அப்பாவின் அழுகை
கண்ணீரில்லாமலும்
உன்னை வழியனுப்ப தயாராகி விட்டன

உன் தங்கை
அழத்தெரியாமல்
அழத்தொடங்கி விட்டாள்

எனக்கு அழத் தெரியாது
நீ எனக்கு அழ கற்றுத் தரவில்லை

கட்டி வைத்த வாழை மரத்தை
துணைக்கு அழைத்துக் கொண்டு
மௌனமாய்
உன் விழிகளை
வாசிக்க முயற்சிக்கின்றேன்

இரண்டு துளிகளை
உதறிய உன் விழிகளுக்கு
மூன்றாவது துளியை
உதறித்தள்ள மனமில்லை போலும்
நனைந்த உன் விழிகள்
ஆயிரம் கதைகளை
இந்த உலகிற்கு சொல்லிக் கொண்டிருக்கின்றன

முதல் நாள்
பள்ளி செல்லும் குழந்தை போல்
உன் கால்கள் தடுமாறுகின்றன

உன்னுடைய "போயிட்டு வரேன்" என்பதிற்கும்
அம்மாவின் "எப்போடி வரே" என்பதிற்கும்
எத்தனை போராட்டங்கள்
எனக்குத் தைரியம் இல்லை அவற்றைக் காண

யாரோ ஒருவர்
இந்த போராட்டங்களை
முடித்து வைக்கிறார்,
அந்த மகிழுந்து மெதுவாய்
வெளியே செல்கின்றது

மகளின் திருமணத்தில்
தகப்பனுக்கும்
தங்கையின் திருமணத்தில்
அண்ணனுக்கும்
கிடைக்கும் ஒரு பேசப்படாத வெறுமை
தோழியின் திருமணத்தில்
தோழனுக்கு கிடைக்கத்தான் செய்கின்றது

தோழியின் திருமணத்தில்
அவளின் தோழர்கள்
காரணத்தோடும்
காரணமில்லாமலும்
எதையோ இழக்கின்றார்கள்
எதையோ பறிகொடுக்கின்றார்கள்

மோதிக்கொண்ட மௌனங்கள் உடைந்து போன நான், நம் கடைசி சந்திப்பு
கடைசி சந்திப்பில் பிறக்கின்றன நிறைய முதல் கவிதைகள்