என் நீயும், உன் நானும் ...
September 29, 2008
இது 6 புள்ளி கோலம்
இது 8 புள்ளி கோலம்,
இது என் புள்ளி மான் வரைந்த கோலம்
எங்கே கண்டுபிடித்தாய்
வாசலில் கவிதை எழுத?
பூக்களை வைத்து வரைவதால்
அது பூக்கோலமா
இல்லை நீ வரைந்ததால் பூக்கோலமா?
நீ விடிகாலையில்
உன் வாசலில் கொட்டிப்போகும்
உன்னுடைய அழகைத்தான்
இந்த ஊர் கோலம் என்கிறது
நீ வரையும் மாக்கோலத்தில்
ஊரெங்கும் பரவிப்போகிறது
உன் பூக்கோலம்
ரோஜா வாசம்,
மல்லிகை வாசம் போய்
இப்போது உன்வீட்டு தோட்டத்தின்
எல்லா பூக்களிலும்
உன் வாசமே வீசுகிறது
பூவோடு சேரும் நார்
மணக்குமா என்று எனக்கு தெரியாது
ஆனால்
உன் வீட்டு பூக்களோடு சேரும் நார்
கண்டிப்பாக மணக்கும்
நீ வளர்க்கிறாய் என்பதற்காக
உன்வீட்டு டிசம்பர் பூச்செடி
எல்லா மாதத்திலும் பூக்கிறது
நீ தொடும் இலைகள் எல்லாம்
பூக்களாய்ப் பூத்துவிடும் அதிசியம்
உன் வீட்டுத் தோட்டத்தில்
மட்டுமே நடக்கிறது
நீ தண்ணீர் ஊற்ற வேண்டும்
என்பதற்காகவே
உன் வீட்டு செடி
தினமும் வாடிப் போகிறது
September 28, 2008
என் அத்தனை பேச்சுக்கும்
உன் சிலவார்த்தைகள்தான்
தலைப்புசொர்க்களாகிப் போகின்றன
நீ என்னுடன் இருக்கும்
பலமணி நேரங்களை விட
நீ பேசும் சில வார்த்தைகளிலேயே
என்னைக் கட்டிப்போட்டுவிடுகிறாய்
நான் தேடும் அத்தனை அன்பும்
நீ பேசும்
ஒன்றிரண்டு வார்த்தைகளுக்குள் தான்
ஜீவித்துக்கொண்டிருக்கிறது
உன்னுடைய
சில வார்த்தைகளை
மட்டுமே வைத்துக்கொண்டு
நான் என்னுடைய
பல வாக்கியங்களை வரைந்துகொள்கிறேன்
நான் உன்னிடம் நாள் முழுக்க பேசும்
வார்த்தைகளை விட
நீ என்னிடம்
பேசும் ஒரு வார்த்தையில் தான்
நம் காதல் ஒளிந்திருக்கிறது
September 25, 2008
சிப்பிக்குள் விழும்
மழைத்துளிதான் முத்தாகுமாம்
அது எனக்குத் தெரியாது,
உன்மேல் விழும் துளி தான் வைரம் ஆகும்
உன்னுடைய தேவதைத் தோழிகள்
அவர்களின் தெய்வமான உனக்குச்
செய்யும் நீராபிஷேகம்தான் இந்த மழையோ?
மழையில் நீ நனையும்
நேரங்களை விட
மழை உன்னை நனைக்கப் பார்க்கும்
நேரங்கள் அதிகமே
நீ மழையில் நனைந்த நாட்களை
என் டைரியின் நனைந்த நாட்கள்
குறித்துவைத்திருக்கின்றன
நீ நனைந்த முதல் மழை
உனக்கு ஞாபகம் இருக்கிறதா?
நானும், உன் மேல் விழுந்த மழைத்துளியும்
இன்னும் ஞாபகம் வைத்திருக்கிறோம்
September 24, 2008
மாலையில்
நீ மிச்சம் வைத்து ஊற்றிய
நீரைக்குடித்த மரமும் கூட உனக்காகத்தான்
ஒற்றை காலில் நின்றுகொண்டு
தவம் செய்துகொண்டிருக்கிறது
உன் வகுப்பு சிலேட்டில்
நீ எழுதிய 'அ' , 'ஆ'
எழுத்துக்களை வைத்துதான்
இப்போதைய இலக்கியங்கள்
உருவாகிக்கொண்டிருக்கின்றன
நீ திருவிழாவில்
வாங்கிய பொம்மைகளை எல்லாம்
எடுத்துக்கொண்டுபோன காலம்,
இப்போது உன்னால்
எனக்கு பல திருவிழாக்களை
கொடுத்துக்கொண்டிருக்கிறது
நீ மழையில் அப்போது
விட்ட கப்பல்கள் எல்லாம்
இப்போது உன்னைக் காணாமல்
எங்கேயோ போய் மூழ்கிவிட்டன
உனக்கு பாடம்
சொல்லிக்கொடுத்த ஆசிரியர்
கண்ணால் பேசுவதையும்
சொல்லிக்கொடுத்தாரா என்ன?
September 23, 2008
பல சங்கங்கள் வைத்து
பல மொழிகளை வளர்க்கும் எனக்கு
உன் கண்கள் பேசும் மொழியை
புரிந்துகொள்ள இன்னும் தெரியவில்லை
பல நாடுகள்
எனக்கு கப்பம் கட்டுகின்றன,
நானோ உன் வார்த்தைகளுக்கு
கப்பம் கட்டிக்கொண்டிருக்கின்றேன்
போர்களுக்கு மன்னனாக
இருந்த நான்
இப்போது உன் கூந்தல்
பூக்களின் மன்னனாகிப்போனேன்
நான் பல நாடுகளுக்கு
போர்மேகமாய் இருந்திருக்கிறேன்,
நீயோ எனக்கு காதல் மேகமாகிப்போனாய்
என் வாளுக்கு இரையானோர்
ஆயிரம் ஆயிரம் பேர்,
ஆனால் நானோ உன் பார்வைக்கு
இரையாகிப்போனேன்.
என் மொத்த அரசாங்கத்தையும்
விட்டு விட்டு வந்துவிட்டேன்,
என்னை எப்போது அரசாளப்போகிறாய்?
September 17, 2008
உன்னை இவ்வளவு அழகாக
புகைப்படம் எடுக்கும்
அந்த நபருக்கு பெயர்தான் கலைஞன்
ஒவ்வொரு புகைப்படத்திலும்
ஒவ்வொரு மொழி பேசும் நீ
என்னிடம் மட்டும்
ஏன் மௌன மொழியில் பேசுகிறாய்?
எப்போதுமே ஏன் நீ பூக்களோடே
புகைப்படம் எடுக்கிறாய்
இல்லை இல்லை
ஏன் எப்போதும் பூக்கள்
உன்னோடே புகைப்படம் எடுத்துக் கொள்கின்றன?
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)