August 31, 2011

என் ஜாதகத்தின் அனைத்துக் கட்டங்களிலும்
உன் பெயரே வரையப்பட்டிருக்க,
குரு பெயர்ச்சியும், ராகு பெயர்ச்சியும்
ஜோசியருக்கு எப்படித் தெரியும்?
என் ஜாதகத்தில்
பரிகாரமே இல்லாத ஜென்ம காதல் தோஷம்
கடுமையாய் இருக்கிறதாம்,
நான் உன்னைக் காதலித்துக் கொண்டேதான் இருப்பேனாம்
என் பிறந்த நேரத்தை வைத்து
என் ஜாதகமும்
நீ பிறந்த நேரத்தை வைத்து
என் காதல் ஜாதகமும் கணிக்கப்பட்டிருக்கிறது
மற்றவர்களுக்கு
நட்சத்திரப் பலன் சொல்லும் ஜோசியக்காரன்
எனக்கு மட்டும்
நிலவுப் (உன்) பலன் சொல்கிறான்,
உன் ஜாதகத்தின் காதல் பக்கங்கள் மட்டும்
ஏனோ இன்னும் வெறுமையாய் இருக்கிறது.
எப்போது உடையும் உன் மௌனங்கள்?
எப்போது நிறம் மாறும் உன் வெண் பக்கங்கள்?

August 30, 2011

உன் வெட்கங்களை மொழி பெயர்ப்பதில்
உன் கொலுசுகளுக்கும், உன் வளையல்களுக்கும்
ஒரு பெரும்போட்டி இருக்கத்தான் செய்கிறது

August 29, 2011

உன் வீட்டுக் கிணற்றிக்கு மட்டும்
மாதத்தில் எப்படி முப்பது பௌர்ணமிகள்?
தினமும் உன் முகத்தையே பார்க்கும்
அதற்க்கு எப்படித் தெரியும்
வானில் இன்னொன்று இருப்பதென்று?
நீ தண்ணீர் இறைக்கும் கயிற்றின்
மறுமுனையில் வாளியோடு என் மனசு.
உன் கரம் பட்டவுடன் கவிழ்ந்து போகின்றோம்
எப்போது திரும்ப வருவாய்?
அதே தாகத்தோடு நானும்
உன் வீட்டுக் கிணற்று வாளியும்

August 28, 2011

என் நாத்திக வாதங்கள் எல்லாம்
உன் பெயரென்னும் மந்திரத்திடம்
தோற்றுப்போகின்றன
முதல் வாசல் விநாயகனைப் போல்
என் எல்லாக் கவிதைக் கோவிலிலும்
உன் பெயர்தான் இருக்கிறது
என் நவக்கிரகக் கோவிலில் மட்டும்
ஏனோ உன் பெயரிலேயே
எல்லாக் கிரகத்தெய்வங்களும்
என் கோவில் மாதங்களில் மட்டும்
முப்பது அமாவாசை, முப்பது கிருத்திகை
முப்பது பிரதோஷம், முப்பது முகூர்த்தம்
நீயே தெய்வமாய் இருக்கும்போதில்
இதில் என்ன ஆச்சர்யம்?
உனக்காகக் கட்டப்பட்ட என் காதல் கோவில்
எப்போது நடக்கும் உன் சம்மதக் கும்பாபிஷேகம்?
ஏழைப் பக்தன் காத்திருக்கிறேன்
ஆடி என்ன, மார்கழி என்ன !
நீ வந்தால் என் கோவிலில்
365 நாட்களுமே சுப முகூர்த்த நாட்கள்தான்

August 25, 2011

தூரிகை வரையும் ஓவியத்தையும்
பேனா எழுதும் கவிதையையும்,
ஒன்றாய் படைக்கின்றன உன் இதழ்கள்
உன் முக மாதத்தில்
இன்று அமாவாசை நாளோ?
உன் நெற்றிப்பொட்டு நிலவு
ஏனோ உதிக்கவில்லை

August 24, 2011

நீ அருகில் இல்லாததால்,
நான் தேடும் வார்த்தைகளும் கூட தொலைவில் போய்விட்டன
நீ இல்லாமல் என் பேனாவும் தூரிகையும்
மௌனத்தை மட்டுமே எழுதி வரைகின்றன

August 22, 2011

நூலைப் போல் சேலை
தாயைப் போல் பிள்ளை
உன் புடவை நிறங்கள் போல் என் வானவில்
உன் அழகுப் பார்வையைப் பற்றி
இரண்டே வரிகள் எழுதிக் கொள்கிறேனடி,
அதற்குள் இன்னொரு பார்வை பார்த்து
என் வார்த்தைகளை சிதறடிக்காதே
உன் துப்பட்டா, முகம் வருடிய நாட்களில்
உன் புடவைத் தலைப்பிற்கும்
உன் புடவை, முகம் வருடும் நாட்களில்
உன் துப்பட்டாவின் பழைய வருடல்களுக்கும்
ஏங்கிப்போகிறது என் காதல் மனசு

August 21, 2011

என் முத்தக் கடன்களை வசூலிக்க,
உன் புடவைத் தலைப்பை
நான் சிறை வைக்க வேண்டியிருக்கிறது
உன் புடவையைப்பற்றி
அடுத்த கவிதைகள் எழுதலாம் என்றால்,
புடவையின் எந்த தலைப்பிலிருந்து ஆரம்பிப்பது?
உன் புடவைத் தலைப்பில் என்ன
வெட்க மொட்டுக்களையா முடிந்து வைத்திருக்கிறாய்?
என் விரல்கள் பட்டதும்
நீ வெட்கமாய் மலர்ந்து போகிறாய்.
என் காதல் தெய்வம் உன்னைத் தரிசிக்க வந்தால்
நீ ஏனடி மௌன நடைசாத்திக் கொள்கிறாய்?

August 17, 2011

உன் அழகைப் பார்த்து
நான் பெருமூச்சுகள் விட்டுக்கொண்டிருக்க,
என் பெருமூச்சுகள் எல்லாம்
உன் இதழைப் பார்த்து
பெருமூச்சு விடத் தொடங்கியிருந்தன
சில முத்தங்களை 
லஞ்சமாய் வாங்கிக்கொண்டுதான்
உன் கன்னங்கள், 

உன் இதழுக்கு வழி கொடுக்கின்றன
பூனையைக்கூட பாலுக்குக் காவல் வைக்கலாம்,
என் கோபத்திற்கு, உன் முத்தக்காவல் வேணவே வேணாம்

August 11, 2011

உன் மௌன மொழியைக்கூட
எளிதில் புரிந்து கொள்ளலாம்,
ஆனால் உன் உதட்டுச் சுழிப்பைப் புரிந்துகொள்ள
இன்னொரு ஜென்மமும் போதாது

August 10, 2011

உன் தொலைபேசிக்கு சர்க்கரை நோயும்
என் தொலைபேசிக்கு இதய நோயும்
வந்து விட்டது, நீ கொடுக்கும் முத்தங்களால்
உன் தொலைபேசியும் என் தொலைபேசியுமே
உன் முத்தங்களை பகிர்ந்துகொண்டால்
நான் எங்கே போவதடி?
என் இதழ் திறந்து பேசும் நூறு வார்த்தைகள்
நீ இதழ் மூடிப்பேசும் ஒற்றைக் கவிதையிடம்
சரணடைந்து விடுகின்றன
என் கோபச் சமுத்திரங்களையெல்லாம்
உன் ஒற்றை முத்தத்துளி
இனிப்பாய் சுவை மாற்றிப்போகிறது
என் இதழ் திறந்து பேசும் நூறு வார்த்தைகள்
நீ இதழ் மூடிப்பேசும் ஒற்றைக் கவிதையிடம்
சரணடைந்து விடுகின்றன
உன் உதட்டுக்கு சாயம் பூசுகிற சாக்கில்
உன் உதட்டையே சாயமாய் பூசிக்கொள்கிறது
நீ பயன்படுத்தும் உதட்டுச்சாயம்
என் கைகளுக்கு
உன் கைரேகைகள் மிகப் பரிச்சயம்,
எப்போது தருவாய் என் இதழ்களுக்கு
இந்த பரிச்சய சந்தர்ப்பங்கள்?

August 08, 2011

என் புது மொழியின்
இலக்கணமாய்ப் போனவளுக்கு,
எப்போது என் உயிரெழுத்துக்களை
உன் மௌனச்சிறையிலிருந்து விடுவிப்பாய்?
என் உதடுகள் சொற்கள் பட்டினியில்
வறண்டு போகுமுன்
உன் உதடுகளில் இருந்து
கொஞ்சம் நிவாரண முத்தங்கள் கிடைக்குமா?
உன் புடவைத் தலைப்பின்
வாசத்திலிருந்து தொடங்கட்டும்
இந்த ஆடியின் கடைசி வரி

August 02, 2011

உன்னை முழுதாய் மறந்துவிடும் புள்ளிக்கும்
இப்படியே காதலிக்க வேண்டும் என்ற புள்ளிக்கும்
இடையே வரையப்பட்ட கோடுதான்
என்னுடைய இந்த பரிதாபக் காதல்
உன் மௌனம் எனும் நகராத மணி முள்ளைச்
சுற்றிக் கொண்டிருக்கின்றன
பாவமான என் நிமிட முட்கள்

August 01, 2011

உன் மழை மேகங்களும்
என் பொன் தோகைகளும்
இசைபாடும் நாட்கள் எப்போதடி?
நிலைக்கண்ணாடிப் பொட்டுக்களில்,
இருக்கும் என் கை ரேகைகளும்,
மடித்துவைத்த கைக்குட்டையில்
இருக்கும் உன் கை ரேகைகளும்,
இன்னும் எத்தனை நாளைக்கு பிரிந்தே இருப்பதாம்?