நான் பிறந்த ஒரு நாள்:
என் அப்பாவிற்கு மகள் பிறந்திருக்கிறாள் என்பது போய்
உன் அம்மாவிற்கு மருமகள் பிறந்திருக்கிறாள்
எனும் செய்தியே ஊரில் விதைக்கப்பட்டது
எனக்கு பெயர் வைத்த ஒரு நாள்:
நேர நட்சத்திரப் பொருத்தங்களை விட்டு
உன் பெயருக்குப் பொருத்தமான
ஒரு பெயரே வைக்கப்பட்டது
நான் பள்ளி சென்ற ஒரு நாள்:
உன்னுடன் வரும் நாட்களில் குறைந்த தொலைவிலும்
நீ வராத நாட்களில் நீண்ட தொலைவிலும்
பள்ளிக்கூடம் அமைக்கப்பட்டது
நான் பருவமடைந்த ஒரு நாள்:
குடில் கட்டிய மாமன் உனக்கும்
காதல் மொட்டு மலர்ந்த எனக்கும்
சொந்தங்களால் ஒரு வேலி அமைக்கப்பட்டது
நான் வெட்கப்பட்ட ஒரு நாள்:
யாருமில்லா ஒற்றையடிப் பாதையில்
வழிமறித்து நீ தந்த முத்தத்தில்
வெட்கமும் எனைப் பார்த்து வெட்கப்பட்டது
நான் கண்ணீர் கசிந்த ஒரு நாள்:
மேற்படிப்பெனும் பட்டம் வாங்க
சில காலம் நீ பட்டணம் போவதால்
என் கண்ணீரின் உவர்ப்பும் சுவைக்கப்பட்டது
நான் காத்திருக்கும் இன்னொரு அழகான நாள்:
நீ வரும் நாள் செய்தி கிடைத்தவுடன்
நம் மணவறைக்காக கொல்லையில்
இன்னொரு வாழையும் நடப்பட்டது
No comments:
Post a Comment